உலகம்

ஈரானில் கைதானோருக்கு மரண தண்டனை: நீதித் துறை தலைவர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரானில் நடை​பெற்று வரும் போராட்​டங்​களில் இது​வரை 2,572 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக மனித உரிமை ஆர்​வலர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இதனிடையே, கைதானவர்​களுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்​பிருப்பதாக நீதித் துறை தலை​வர் தெரி​வித்​துள்​ளார்.

ஈரான் மதத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனிக்கு எதி​ராக கடந்த டிசம்​பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்​ரானில் மிகப்​பெரிய போராட்​டம் வெடித்​தது. மதத் தலை​வர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்​கி​யான் பதவி விலக வலி​யுறுத்தி நடை​பெறும் இந்​தப் போராட்​டம், நாடு முழு​வதும் பரவி உள்​ளது. பல்​வேறு அமைப்​பு​கள் இந்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளன.

இதனிடையே போராட்​டத்தை ஒடுக்க ராணுவ வீரர்​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்தி வரு​கின்​றனர். இதில் இது​வரை 2,572 பேர் உயிரிழந்​துள்​ள​தாக அமெரிக்​காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்​பின் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. இந்த எண்​ணிக்கை கடந்த பல தசாப்​தங்​களில் இல்​லாத அளவு அதி​கம் என கூறப்​படு​கிறது.

இதனிடையே, போராட்​டத்​தில் ஈடு​பட்டு கைது செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு எதி​ரான வழக்​கு​கள் விரை​வாக விசா​ரிக்​கப்​பட்டு மரண தண்​டனை வழங்​கப்​படும் என்று ஈரானின் நீதித்​துறை தலை​வர் கோலம்​ஹொசைன் மோசேனி-எஜெய், சூசக​மாக தெரி​வித்​துள்​ளார். தண்​டனை​களை தாமதப்​படுத்​து​வது அதன் தாக்​கத்​தைக் குறைத்​து​விடும் என்று அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

ஈரானின் இந்த அறி​விப்​பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில், “ஈரான் அரசு போராட்டக்காரர்களுக்கு மரண தண்​டனை​ நிறைவேற்​றி​னால், அமெரிக்கா மிக வலு​வான நடவடிக்​கையை எடுக்​கும், உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ள​தால், ஈரானுடன் இனி எந்த பேச்​சு​வார்த்​தை​யும் இல்லை” என பதிவிட்டுள்​ளார்​.

இந்திய தூதரகம் எச்சரிக்கை: டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரான் மீது அமெரிக்க படைகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம். எனவே, அங்கு இருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். போராட்டம் நடை பெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT