

அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி.
புதுடெல்லி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் தனது அரசு இல்லத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடினார். இதில் பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பொங்கல், வட மாநிலங்களில் மகர சங்கராந்தி மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் போகாளி பிஹு என பல்வேறு பெயர்களில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் மத்திய கால்நடை மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது அரசு வீட்டில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடினார்.
இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தமிழர் முறைப்படி சிறப்பு அர்ச்சனைகள் செய்த பிறகு, பொங்கும் பானையில் அரிசி மற்றும் பாலை ஊற்றினார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியில் வாழும் முக்கியத் தமிழர்கள், தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியை வரவேற்க பத்ம பட்டம் பெற்ற நாகஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் இசை ஒலித்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த கரகாட்டக் கலைஞர்களின் நடனங்களுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் சிலரும் விழாவில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ.க்கள் வானதி னிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார். சென்னை வேலம்மாள் பள்ளிகளின் தாளாளர் எம்விஎம் வேல் மோகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். விழா விருந்தினர்கள் அனைவருக்கும் சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திருக்குறள் ஆங்கில பதிப்பு நூல் வழங்கப்பட்டது. இணை அமைச்சர் முருகன் நடத்தும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.