ஹாங்காங்/புதுடெல்லி: அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிப்பதாலும், போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 120 டாலரைத் தாண்டியது.
ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் சீரடைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் உலகளாவிய அளவில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எண்ணெய் விநியோகத்தில் தடை நீடித்து வருவதால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 126 டாலர் வரை சென்றது.
ஜூன் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை 3.3 சதவீதம் உயர்ந்து 121.90 டாலராக வர்த்தகமானது. இதற்கு முன், கடந்த 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியின்போது கச்சா எண்ணெய் விலை 147.50 டாலராக இருந்ததே இதுவரை உச்சபட்ச விலையாக உள்ளது.
பிப்ரவரி இறுதியில் போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பேரல் 70 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது போர் நீடிப்பதாலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளாலும் ஏறக்குறைய இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
சர்வதேச அளவில் நிலவும் போர் அபாயம் காரணமாக முதலீட்டாளர்கள் டாலரை பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். அதன் எதிரொலியாக, நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.20 அளவில் புதிய வரலாற்று சரிவை எட்டியது.
பங்குச் சந்தைகள் சரிவு
எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர்ச் சூழல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. ஜப்பானின் நிக்கி 1%, தென் கொரியாவின் கோஸ்பி 1.4% மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1.3% சரிந்தன. அதன் தாக்கம் இந்திய சந்தைகளில் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 0.75% சரிவை சந்தித்து.