பெய்ஜிங்: திபெத் - நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஏராளமானோர் மாயமாகியும் உள்ள நிலையில், நிலைமையை ஆய்வு செய்வதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளதாவது: திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ஜிராங் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, காணாமல் போன சீனர்கள் மற்றும் வெளிநாட்டினரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை அறிவியல் பூர்வமான திட்டமிடலுடன் முடுக்கிவிட முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு ஜின்ஹுவா தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.
திபெத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் திபெத்தில் 550-க்கும் மேற்பட்டோரும், நேபாளத்தில் 100 சீனர்களும் மாயமாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 555 சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் சொந்த நாட்டின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.