ஜாவோ சோங்கி
பெய்ஜிங்: கடந்த 2017 ஜூன் மாதம் இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் போர் பதற்றம் எழுந்தது. சுமார் 72 நாட்களுக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர்.
டோக்லாம் மோதலின் பின்னணியில் சீன ராணுவ மேற்கு பிராந்தியத்தின் அப்போதைய தலைமை தளபதி ஜாவோ சோங்கி மூளையாகச் செயல்பட்டார். அவரது உத்தரவின் பேரிலேயே சீன வீரர்கள் டோக்லாம் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்றனர். ஆனால் இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கைகளால் சீன வீரர்கள் பின்வாங்கிச் சென்றனர்.
இதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ தரப்பில் 38 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்தன. ஆனால் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன ராணுவம் அறிவித்தது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கும் சீன ராணுவ மேற்கு பிராந்தியத்தின் அப்போதைய தலைமை தளபதி ஜாவோ சோங்கியே காரணம் என்று உளவு அமைப்புகள் தெரிவித்தன. இந்தியாவுக்கு பாடம் புகட்ட கல்வான் தாக்குதலுக்கு அவர் உத்தரவிட்டார் என்று அமெரிக்க உளவுத் துறை குற்றம் சாட்டியது.
இதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில், சீன அரசியல் உயர்நிலை ஆலோசனைக் குழுவில் அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இது சீனாவின் மிக உயரிய பதவிகளில் ஒன்றாகும். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரிய நபராக ஜாவோ சோங்கி நீடித்து வந்தார்.
பிரிக்ஸ் மாநாடு பின்னணி
இந்த சூழலில் வரும் 31-ம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பின்னணியில் டோக்லாம், கல்வான் மோதலுக்கு காரணமான சீன ராணுவ மூத்த தளபதி ஜாவோ சோங்கி, சீன அரசியல் உயர்நிலை ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு உள்ளார். இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.