உலகம்

சரியும் மக்கள் தொகையால் திணறும் சீனா: அரசின் கொள்கையும் சேதாரங்களும் - ஓர் அலசல்

பாரதி ஆனந்த்

சீனாவின் மக்கள் தொகை குறித்து அண்மையில் வெளியான புள்ளிவிவரம் அந்நாட்டை கவலையில் ஆழ்த்தியதோடு, சர்வதேச ஊடகங்களில் கவனம் பெறும் செய்தியாகவும் மாறியுள்ளது.

சீனா என்ற பேச்சை எடுத்தாலே அதன் பெருத்துக் கிடந்த மக்கள் தொகையும் கூடவே நினைவுக்கு வரும். அப்படியான அதிகப்படியான மக்கள் தொகையை தனது வளமாக சீனா கருதிய காலக்கட்டமும் உண்டு. ஆனால், 1970-களின் பிற்பாதியில் சீனா ‘ஒரே குழந்தை’ கொள்கையை அமல்படுத்த அது ஏற்படுத்திய விளைவுகள் இன்று பூதாகரமாக மாறி அந்நாட்டை சமூக - பொருளாதார ரீதியாக பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

அண்மைய புள்ளி விவரம்: சமீபத்திய புள்ளி விவரத்தின்படி சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 140.4 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 லட்சம் குறைவாகும். 2025-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாக மட்டுமே பதிவாகியுள்ளது.

இது முந்தைய 2024-ம் ஆண்டை விட 16.2 லட்சம், அதாவது 17 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து 2024-இல் பிறப்பு விகிதத்தில் தென்பட்ட சிறிய முன்னேற்றம் ஒரு நிலையான மாற்றம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் சீனாவின் மக்கள் தொகைப் பிரச்சினையும், அது ஏன் பேசுபொருளானது என்பது பற்றியும் அலசுவோம்.

          

ஒரு பஞ்சம், அதன் பின்னர் வந்த கொள்கை: 1959 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. வரலாற்றில் Great Chinese Famine என்ற குறிப்புகள் உண்டு. அந்தப் பஞ்சத்துக்கு காலநிலை மாற்றமும், அப்போதைய அதிபர் மா சே துங்கின் அரசியல் கொள்கைகளும் வழிவகுத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

1970-களில் பெரும் பஞ்சத்திலிருந்து சீனா விடுபட்டு மீண்டெழ தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் உலகம் முழுவதுமே மக்கள் தொகை மீதான கவலைகள் முன்வைக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக சீனா, இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையால், உலகின் இயற்கை வளங்கள் மீதான பாரம் அதிகரிக்கும் என்றெல்லாம் பேசப்பட்டன.

இந்தச் சூழலில்தான் சீனாவில் இருந்த சக்திவாய்ந்த அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என முடிவு செய்தது. ஆரம்பத்தில் Late, Long and Few’ என்ற மிதமான கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதாவது ‘திருமணத்தை தள்ளிப்போடுங்கள், குழந்தை பிறப்புக்கான இடைவெளியை அதிகரியுங்கள், குறைந்த அளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவுறுத்தியுது. இதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. 1970 முதல் 76 வரை மக்கள் தொகையை சீன அரசு கணிசமாகக் கட்டுப்படுத்தியது.

ஆனால், அந்த தசம காலம் முடியும் வேளையில் கூட சீனாவில் உணவுப் பற்றாக்குறை பிரச்சினை குறைந்தபாடில்லை. இதனால், 1962 பஞ்சம் போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கெடுபிடியை அதிகரித்தது சீனா.

அமலுக்கு வந்த ‘ஒரே குழந்தை’ சட்டம் - இதனையடுத்து சீனா ‘ஒரே குழந்தை’ சட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1980-ல் இருந்து இச்சட்டம் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

எத்தனை தீவிரம் என்றால், இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டிருந்த பெண்கள் கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டனர். குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் திணிக்கப்பட்டன. பெண் சிசு கொலைகள் நடந்தன. மறுபுறம் ஒரு குழந்தை மட்டுமே உள்ள பெற்றோருக்கு மகப்பேறு விடுப்பு தொடங்கி கவுரவ சான்றிதழ் வரை பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

சீனாவின் ‘ஒரே குழந்தை’ சட்டம் போன்று உலகில் வேறெங்குமே மிகக் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று சொல்லும் அளவுக்கு அந்தக் கெடுபிடிகள் அமைந்தன.

சுமார் 35 ஆண்டுகளாக நீடித்த சீனாவின் இந்தக் கெடுபிடியால் நிகழ்ந்த பக்கவாட்டு சேதாரம் தான் விகித்தாச்சார அடிப்படையில் ஆண் - பெண் பிறப்பு விகிதம் அதலபாதாளத்துக்குச் சென்றது.

அடிமையாகிப் போன ஒற்றை வாரிசுகள்... - மக்கள் தொகை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டபோது பெரும்பாலான தம்பதிகள் ஆண் பிள்ளை பெற்றுக் கொள்வதையே விரும்பினர். அவ்வாறாக பிறந்த ஆண் பிள்ளைகளை சீன மக்கள் little emperors’ என்று கொண்டாடினர்.

எதிலும் பங்கு போடத் தேவையில்லை, எல்லாவற்றிலும் முன்னுரிமை என்று வளர்ந்த அந்தப் பிள்ளைகள் அவர்களின் 40 வயதை எட்டியபோதுதான் பிரச்சினையின் தீவிரமே என்னவென்று புரிந்து கொள்ளலாயினர். அவர்கள் மட்டுமல்ல சமூகமும், அரசும் பிரச்சினையை உணரத் தொடங்கியது.

பெற்றோர், சமூகம், அரசு என்ன அனைத்து விதத்திலிருந்தும் கிளம்பும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு உருவானது. பெற்றோரை, அவர்களின் பெற்றோரை என பலரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஒரே குழந்தையின் தலையில் விழுந்தது. தனி மனிதனுக்கு சமூக, பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியது. கிட்டத்தட்ட அடிமைகளாகிப் போன இளைஞர்களைக் கொண்ட சமூகமாக சீன சமூகம் உருவாகியிருந்தது.

அரசுக்கு அழுத்தம்: அன்று அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அழுத்தம் கொடுத்தது. இன்று சீன அரசுக்கு அழுத்தமாக உருவாகியுள்ளது.

சீனாவில் இப்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை அருகி வருகிறது. இது பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு கூடவே ஓய்வு பெற்றோர் அதிகரிப்பதால் அரசு உதவித் தொகை, பென்ஷன் ஆகியனவற்றின் மீது செலவழிக்கும் அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது. இதிலிருந்து விடுபட 2016-ல் இருந்து சீனா மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தி வருகிறது.

2016-ல் தம்பதிகள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. பின்னர் 2021 தொடங்கி தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்ததோடு அதனை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

ஒரு காலத்தில் ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு அளித்த சீனா இப்போது அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் மானியம் வழங்குகிறது.

எடுபடாத சீனாவின் ஊக்குவிப்பு: மக்கள் தொகை கணக்கில் சீனாவை இந்தியா கடந்த 2023-ல் விஞ்சியது. ஏற்கெனவே மக்கள் தொகை சரிவை மீட்டெடுப்படுதில் கவனம் செலுத்திய சீனா, இப்போது இன்னும் தீவிரமாக அதை நோக்கி முன்னேறி சலுகை மேல் சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஆனால், இப்போதிருக்கும் சீன இளைஞர்களின், குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள தம்பதிகளின் பார்வை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

ஒரு குழந்தையை வளர்ப்பது, அதுவும் சீன நகர்ப்புறத்தில் வளர்ப்பது என்றால் அதன் மீது செய்ய வேண்டிய செலவு தம்பதிகளை ஒன்றைத் தாண்டி பெற்றுக் கொள்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

“அரசாங்கம் ஊக்கத் தொகை கொடுக்கலாம்; ஆனால் இங்கே வீட்டு வசதி, கல்வி, மருத்துவம் எல்லாம் விண்ணை முட்டும் செலவை வைக்கிறதே” என்கின்றனர் சீன இளம் தலைமுறையினர்.

2024-ல் பீஜிங்கின் யுவா (YuWa) மக்கள் தொகை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் குழந்தை வளர்ப்பில் அதிகச் செலவை ஈர்க்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது.

உஷாரான பெண்கள்: படித்து, பொருளாதார தன்னிறைவு பெற்ற பெண்கள், அடுத்தடுத்து குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தங்களது சுய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமையும் எனக் கருதுகின்றனர்.

ஏற்கெனவே பணியிடங்களில் பாலின சமத்துவம் இல்லை. பிள்ளை பெற்றுக் கொள்ளும் வயதிலிருக்கும் பெண்கள் பணியிடத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் 3 குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை என்று பெண்கள் உஷாராகப் பின்வாங்குகின்றனர்.

அது மட்டுமின்றி கிட்டதட்ட 40 ஆண்டுகளாகவே ஒரே குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பழக்கப்பட்ட சீனர்கள், அதுவே தங்களின் புதிய கலாச்சாரமாகிவிட்டதாக உணர்கின்றனர். ஒரு குழந்தை அல்லது குழந்தையே இல்லாத ‘கேர் ஃப்ரீ’ வாழ்க்கை முறையை அவர்கள் விரும்புகின்றனர்.

ஜென் இசட், மில்லனியல் தலைமுறையினர் தங்கள் பெற்றோர் அதிகக் குழந்தை பெற்றதற்காக அன்று அபராதம் விதித்த அரசுதான் இன்று நாங்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கத் தொகை தருவதாகச் சொல்கிறது. இந்த முரணை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அரசை நம்புவதற்கும் இல்லை என்று முற்றிலுமாக ‘ஆசை வார்த்தைகளை’ நிராகரிக்கின்றனர்.

சீனாவின் ஊக்குவிப்புகள் எல்லாம் எடுபடாமல் போகவே, இப்போது அந்த நாடு இழந்த மக்கள் வளத்தை மீட்டெடுக்க திணறிக் கொண்டிருக்கிறது.

மக்கள் தொகை நிபுணர்கள் சொல்வதென்ன? - சீனா தனது சரிந்த மக்கள் தொகையை மீட்டெடுக்க கடும் பிரயத்தனம் செய்யும் நிலையில், மக்கள் தொகை நிபுணர்களோ சீனாவின் இந்த முயற்சிக்கு, பலன் கிடைப்பது மிகவும் கடினம் அல்லது இயலவே இயலாது என்றே இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன என்கின்றனர்.

இதற்கு, மக்கள் மனநிலையில் மாற்றம், நகர்ப்புற வாழ்வில் பெருகிவிட்ட செலவுகள், கலாச்சார மாற்றம் என பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர்.

ஒற்றைக் குழந்தை சட்டமாக இருந்த காலம்போய் மக்களின் கலாச்சாரமாகிவிட்டது. இந்நேரத்தில், சீனா இப்போது செய்யும் முயற்சிகள் எல்லாமே, மிகவும் குறைவு அல்லது மிகவும் தாமதமானது என்கின்றனர்.

சீனா மக்கள் தொகை சரிவை மீட்டெடுக்கும் முயற்சிகளைக் காட்டிலும், தனது பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புகளை குறைந்த மக்கள் தொகை, வயதானோர் அதிகரிக்கும் மக்கள் தொகையோடு இசைந்து செல்வதாக தகவமைப்பதே காலத்தின் தேவையாக இருக்கும் என்றும் யோசனை கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT