உலகம்

வாடகைத் தாய் முறை கிரிமினல் குற்றம்: சீன அரசு அறிவிப்பு

டெக்ஸ்டர்

பெய்ஜிங்: சட்டவிரோதமாகச் செயல்படும் இனப்பெருக்க உதவி மையங்கள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, வாடகைத் தாய் முறையை கிரிமினல் குற்றமாகச் சீன அரசு அறிவித்துள்ளது.

அனைத்து வகையான வாடகைத் தாய் முறைகளுக்கும் சீனா கடுமையான தடை விதித்துள்ளதாகவும், இத்தகைய ஏற்பாடுகளைச் செய்வது நெறிமுறைகளை மீறும் குற்றவியல் செயலாகக் கருதப்பட்டுக் கடுமையான சட்டத் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் ஜின்ருய் தெரிவித்துள்ளார். 

வாடகைத் தாய் ஒப்பந்தங்களுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் கிடையாது என்றும், இதில் ஈடுபடுவோர் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநகரான சாங்ஷாவில் சட்டவிரோதமாக இனப்பெருக்க உதவி மையங்கள் செயல்பட்டு வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே 2001-ஆம் ஆண்டு முதல் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வாடகைத் தாய் முறையில் ஈடுபட சீனா தடை விதித்திருந்தது. வாடகைத் தாய் முறை பெண்களின் உடல்நலம் மற்றும் உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், பெண்களின் உடலை வணிகமயமாக்கி அவர்களை குழந்தை பெறும் கருவிகளாக மாற்றி மனித மாண்பைக் குறைப்பதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும், முறையற்ற வாடகைத் தாய் நடைமுறைகளால் கர்ப்பகால சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பற்ற மருத்துவ சிகிச்சைகளால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான விளைவுகள் குறித்தும் சுகாதார ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT