அசாமில் வேன் - கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 26 பேர் உயிரிழப்பு

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
அசாமில் வேன் - கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 26 பேர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

குவஹாத்தி: அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை வேன் ஒன்றும்  கன்டெய்னர் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாகாட் பகுதியிலிருந்து நாகோன் நோக்கிச் சென்ற பயணிகள் வேனும், அசாம் நோக்கிச் சென்ற லாரியும் காசிரங்கா தேசியப் பூங்கா பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்தவர்கள் முதலில் கோஹோரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஒன்பது அவசர ஊர்திகள் மூலம் பொககாட், கோலாகாட் மற்றும் ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அசாம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அதுல் போரா நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

காசிரங்கா தேசியப் பூங்கா பகுதியில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டை மீறி வேன் அதிவேகமாகச் சென்றதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த லாரி மீது வேன் மோதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விபத்துக்குள்ளான வேன் மீது ஏற்கனவே அதிவேகமாக இயக்கியதற்காக 12 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அசாமில் வேன் - கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 26 பேர் உயிரிழப்பு
சோனியா காந்தி சுயசரிதை தாக்கம்: பஞ்சாப் தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு சாதகமா, பாதகமா?

X