காலிபாஃப், ஜே.டி.வான்ஸ்
புதுடெல்லி: ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் இருதரப்பும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. அதன் காரணமாக இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் உலக அளவில் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் அண்மையில் ஈரான், அமெரிக்கா இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த சூழலில் இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைய (சனிக்கிழமை) தினம் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இஸ்லாமாபாத் புறப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பாக சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார்.
“இரு தரப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் சார்பில் முன்மொழியப்பட்ட இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு முன்பாக லெபனானில் போர் நிறுத்தம் அமலுக்கு வர வேண்டும், முடக்கப்பட்ட ஈரானின் சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும்” என்று எக்ஸ் தளத்தில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்ன? - பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஈரானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டுமென ஈரானை அமெரிக்கா வலியுறுத்தும் என செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.