உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்...’ - எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

மோகன் கணபதி

வாஷிங்டன் டி.சி.: ஈரானுக்கு எதிரான போரில் உதவ முன்வராத ஐரோப்பிய நாடுகள் தற்போது விமான எரிபொருள் இன்றி தவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவர்களை கேலி செய்யும் வகையில் இரண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக விமான எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக ஈரான் தலைமையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட மறுத்த பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு நான் ஓர் ஆலோசனையை முன்வைக்கிறேன்.

ஒன்று, நீங்கள் எரிபொருளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குங்கள்; எங்களிடம் அது தாராளமாக உள்ளது. இரண்டாவது, இத்தனை நாள் தயங்கிய உங்கள் துணிச்சலை இப்போது வரவழைத்துக்கொண்டு ஹார்முஸ் ஜலசந்திக்குச் சென்று அதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்களே எப்படிப் போராடுவது என்பதை இனி நீங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்க வேண்டும். அமெரிக்கா இனி உங்களுக்கு உதவ அங்கே இருக்காது.

          

சரியாகச் சொல்வதாக இருந்தால், எங்களுக்குத் தேவைப்பட்டபோது நீங்கள் எங்களுக்கு உதவ வராதது போல நாங்களும் உங்களுக்கு உதவ வர மாட்டோம். எனினும், ஈரான் கிட்டத்தட்ட முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்று உங்களுக்குச் சொந்தமான எண்ணெயை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ராணுவத் தளவாடங்கள் நிரம்பிய விமானங்கள் பறக்க தங்கள் வான் எல்லையை அனுமதிக்காத பிரான்ஸ் நாட்டையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

‘‘இஸ்ரேலை நோக்கிச் சென்ற ராணுவத் தளவாடங்கள் நிரம்பிய விமானங்களை, பிரான்ஸ் நாடு தனது வான்பரப்பு வழியாகப் பறக்க அனுமதிக்கவில்லை. ஈரானின் கசாப்புக் கடைக்காரர் என்று அழைக்கப்பட்டவர் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கொஞ்சம்கூட உதவியாக இருக்கவில்லை. இதை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது’’ என டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT