புதுடெல்லி: ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி, இஸ்ரேல் படையைச் சேர்ந்த புளூ ஸ்பேரோ எனப்படும் ஏவுகணை மூலம், அழிக்கப்பட்ட விவரங்கள் தற்போது வெளியுலகத்துக்கு கசிந்துள்ளன.
அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் அலுவலக வளாகத்தைக் குறிவைத்தும் சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில்தான் காமேனி கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
பல ஆண்டுகளாக மிக சாதுர்யமாக திட்டமிடப்பட்டு தாக்குதலை இஸ்ரேல் படைகள் அரங்கேற்றியுள்ளன. இந்த திட்டத்தில், தீவிர கண்காணிப்பு, மேம்படுத்தப்பட்ட ஏவுகணை தொழில்நுட்பம், ஈரான் உச்சத்தலைவரின் தலைவரின் நடமாட்டம், டெஹ்ரானில் தாக்குதல் நடத்துவதுதன் துல்லியத் தன்மை என பலவும் ஒருங்கிணைந்து திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி அதிகாலை காமேனி, அவரது அலுவலகம் அமைந்துள்ள டெஹ்ரானிலுள்ள பாஸ்டியர் சாலைக்கு வந்துள்ளார். அவர் உயர்நிலைக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்கிறார் என்ற உளவுத் தகவல் கிடைத்த ஒரு சில வினாடிகளிலேயே இலக்கை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில்தான் காமேனி உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை நடத்த இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டது புளூ ஸ்பேரோ ஏவுகணை என்கிற அதிநவீன ஏவுகணையாகும். இஸ்ரேலிய போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட மிகவும் அதிநவீன ஆயுத வகையைச் சேர்ந்தது இதுவாகும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்பினால் உருவாக்கப்பட்டதுதான் இந்த புளூ ஸ்பேரோ ஏவுகணை. இவை இஸ்ரேலின் மிகவும் மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளின் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.
இஸ்ரேலின் விமானப்படையிலுள்ள எஃப்-15 போர் விமானத்திலிருந்து புளூ ஸ்பேரோ ஏவப்பட்டுள்ளது. இந்த புளூ ஸ்பேரோ ஏவுகணை, விமானத்திலிருந்து கிளம்பி முதலில் வளிமண்டலத்தின் விளிம்பை நோக்கி வேகமாக உயர பறந்துள்ளது. அதன் பின்னர் பிறகு செங்குத்தான பாதையில் அதன் இலக்கை நோக்கி மிக அதிக வேகத்தில் பூமிக்குத் திரும்பி இலக்கை அழித்துள்ளது.
நீல சிட்டுக்குருவி என்று அழைக்கப்படும் புளூ ஸ்பேரோ 3 வகைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய ஏவுகணை குடும்பத்தைக் கொண்டுள்ளது. இவற்றுக்கு பிளாக் ஸ்பேரோ, புளூ ஸ்பேரோ மற்றும் சில்வர் ஸ்பேரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சோதனை மற்றும் போரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகை பாலிஸ்டிக் ஆயுதங்களைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டவையாகும். ராக்கெட்டின் வேகத்தில் சென்று தாக்கும் தன்மை கொண்டவை.
இந்த ஏவுகணை சுமார் 6.5 மீட்டர் நீளம் மற்றும் தோராயமாக 1,900 கிலோ எடை கொண்டதாக அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர் தூரம் கொண்ட இலக்கையும் தாக்கும் வல்லமையை பெற்றுள்ளன. இவை தொலைதூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் அதீத திறன் பெற்றவையாகும்.
புளூ ஸ்பேரோ ஏவுகணையின் அதிவேகமானது, வளிமண்டலத்துக்கு வெளியிலிருந்து வருவதால் அதன் தொடக்க உயரம் மற்றும் சூழ்ச்சித்திறன் ஆகியவற்றின் காரணமாக அதை எதிரிநாடுகளால் இடைமறிக்க முடிவதில்லை. எதிரிநாடுகள் சுதாரிப்பதற்குள் இவை தாக்குதலை நடத்தி விடுகின்றன.
இஸ்ரேல் நாட்டின் சிக்னல் புலனாய்வுப் பிரிவான யூனிட் 8200, கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக சேகரித்து வந்த உளவுத்துறை தாக்குதல்களின் அடிப்படையில் புளூ ஸ்பேரோ தாக்குதல் கச்சிதமாக நடந்தேறி உள்ளது.