வங்கதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் உடல் டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. வளாகத்தில் ஹாடியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினர்.படம்: பிடிஐ

 
உலகம்

வங்கதேச நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: டாக்காவில் பதற்றம் தொடர்வதால் ராணுவம், போலீஸ் குவிப்பு

மாணவர் ஹாடி இறுதிச் சடங்கில் முகமது யூனுஸ் பங்கேற்பு

செய்திப்பிரிவு

டாக்கா: வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி இறுதிச் சடங்கில் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பங்கேற்றார். நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முயற்சி செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்றம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ராணுவம், போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிட டாக்கா 8-வது தொகுதியில் ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர் கள மிறங்கினார். கடந்த 12-ம் தேதி இவர் டாக்காவில் பிரச்சாரம் தொடங்கினார். பின்னர் சைக்கிள் ரிக் ஷாவில் செல்லும் போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹாடியை தலையில் சுட்டுவிட்டு தப்பினர். உடனடியாக டாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹாடி, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு முன்பு ஹாடி உயிரிழந்தார். இந்த தகவல் பரவியதும் நேற்று முன்தினம் வங்கதேசத்தில் பெரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பதற்றம் உள்ள இடங்களில் போலீஸார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (27) என்ற இளைஞர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி ஒரு கும்பல் நேற்றுமுன்தினம் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தீபு சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தது. இதனால் வங்கதேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் இடையே பீதி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

இறுதி ஊர்வலம்: சுட்டுக் கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடியின் உடல் சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு டாக்கா கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மேலும் ஹாடியின் மறைவையொட்டி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஊர்வலத்தில் இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் பங்கேற்றார். மேலும், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஹாடியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வங்கதேசத்தின் தேசிய கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், வங்கதேசத்தில் தொடர்ந்து போராட்டம், பேரணி, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை வங்கதேச நாடாளுமன்ற வளாகம் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே நுழைய முயற்சித்தனர். நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ராணுவ வீரர்கள், போலீஸார் அவர்களை தடுத்து விரட்டியடித்தனர். தலைநகரில் பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடாளுமன்றம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ராணுவத் தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் முகமது யூனுஸ் கூறும்போது, “இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்" என்றார்.

கொல்லப்பட்ட இந்து இளைஞர் தீபு சந்திர தாஸின் தந்தை செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது மகனை மிகவும் கொடூரமாக அடித்து உதைத்துக் கொலை செய்துள்ளனர். அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். மரத்தில் கட்டிய பின்னர் அவரது உடலை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

டாக்காவில் நேற்று முன்தினம் பல இடங்களில் வன்முறை, கலவர சம்பவங்கள் தொடர்ந்த நிலையில் பல பத்திரிகை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. புரோத்தம் அலோ, தி டெய்லி ஸ்டார் ஆகிய பத்திரிகை அலுவலகங்களில் புகுந்த நபர்கள் அலுவலகத்தை சூறையாடி அங்கிருந்த 150-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

டெய்லி ஸ்டார் பத்திரிகை அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடிய போது பத்திரிகையாளர்களையும் அவர்கள் தாக்க முயன்றனர். இதையடுத்து கட்டிடத்தின் மேல் மாடிக்குச் சென்ற 28 பத்திரிகையாளர்கள் அங்குள்ள அறையில் புகுந்து தப்பினர்.

SCROLL FOR NEXT