துபாய்: அண்டை நாடுகள் மீதான தாக்குதல் தொடரும் என்று ஈரானின் உச்சத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அயத்துல்லா மோஜ்தபா காமேனி அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவரான அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) அண்மையில் தேர்வானார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயத்துல்லா மோஜ்தபா காமேனி காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. ஈரான்-அமெரிக்க, இஸ்ரேல் போரின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மோஜ்தபா காமேனி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
தொலைக்காட்சிகளில்...
உச்ச தலைவராக பதவியேற்ற பின்னர் அவர் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பாகும் இது. அவரது அறிவிப்பு ஈரானில் உள்ள தொலைக்காட்சிகளில் வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது: வளைகுடாவிலுள்ள அரபு அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நாடு தொடரும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு தாக்குதலாக, ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து மூடிவைப்போம்.
அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நேரத்தில் 165 பள்ளி மாணவிகளை இழந்தோம். இந்த தாக்குதல் உட்பட எங்களைத் தாக்கியவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். எங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்குவோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். மோஜ்தபா காமேனி.