குவாட் சந்திப்பில் பங்கேற்ற தலைவர்கள்
மணிலா: குவாட் என்பது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் நம்பகமான தீர்வுகளை வழங்க பாடுபடும் ஓர் ஆக்கப்பூர்வமான, நம்பிக்கைக்குரிய கூட்டாண்மை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டின் இடையே குவாட் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த ஆண்டு ஜனவரி முதல் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 5 முறை சந்தித்துள்ளனர். இது நமது கூட்டாண்மை மீதான நமது அரசியல் விருப்பத்தையும், பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, குவாட் என்பது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலிகள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் நம்பகமான தீர்வுகளை வழங்க பாடுபடும் ஓர் ஆக்கப்பூர்வமான, நம்பிக்கைக்குரிய கூட்டாண்மை.
குவாட் முன்னேற்றத்துக்கான பங்காளியாகவும், நெருக்கடியான காலங்களில் நண்பராகவும், எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் ஊற்றாகவும் இருக்கும்.
முதல் குவாட் வணிகத் தலைவர்கள் மன்றம் (Quad Business Leaders Forum) 2027-ல் மும்பையில் நடத்தப்படும். இன்றைய சந்திப்பு, நமது ஒத்துழைப்பின் அடுத்த கட்டத்துக்கான உறுதியான இலக்குகளை நிர்ணயிக்க உதவும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.
குவாட் கூட்டத்தின் நான்கு முக்கிய முடிவுகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளில் ஒத்துழைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், “இந்த நான்கு நாடுகளின் கூட்டமைப்பின் முக்கியத்துவம் வளர்ந்து வருகிறது. இந்த நான்கு நாடுகளும், சுதந்திரமான, திறந்த, நிலையான மற்றும் செழிப்பான இந்தோ - பசிபிக்பின் நான்கு மூலைகள். மேலும், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, ராஜதந்திரம் ஆகியவற்றில் நான்கு நாடுகளும நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன” என தெரிவித்தார்.