நியூயார்க்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் 7 பேர் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றதற்கும், அமெரிக்காவில் அதானி குழுமத்தின் ரூ.95,000 கோடி முதலீட்டுத் திட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்க நீதித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதானி குழுமம் மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெறுவது குறித்த விரிவான விளக்கத்தை அளிக்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்து அமெரிக்க முதன்மை இணை துணை அட்டர்னி ஜெனரல் ஆர். ட்ரெண்ட் மெக்காட்டர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதாக அதானி குழுமம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த வழக்கு கைவிடப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் முற்றிலும் நிராகரித்தார்.