வாஷிங்டன்: புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் அவர் கையில் அதிநவீன துப்பாக்கியுடன் நிற்கிறார். மலை சூழ்ந்த பின்புறத்தில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறுகின்றன.
இந்த புகைப்படத்துடன் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். இனிமேல் பொறுமை காக்க முடியாது. தொடர்ந்து நல்லவனாக இருக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.
சில மணி நேர இடைவெளியில் அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ”புயல் வந்து கொண்டிருக்கிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராகி வருகிறது. குறிப்பாக ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றவும் வியூகம் வகுக்கப்பட்டு இருக்கிறது. ஈரானில் தரையிறங்கி அந்த நாட்டில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பறிமுதல் செய்யவும் ரகசிய திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தளபதிகள் அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளனர். இதை சுட்டிக்காட்டும் விதமாகவே புயல் வந்து கொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ட்ரம்ப், புதின் பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் நேற்று முன்தினம் தொலைபேசியில் ஈரான் விவகாரம் குறித்து ஆலோசித்தனர். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் விவகாரத்தில் ரஷ்யா உதவி செய்யும் என்று அதிபர் புதின் வாக்குறுதி அளித்தார்.
அவரது உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாகவும் அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்” என்றார். ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ரஷ்யாவின் வெற்றி தினமான மே 9-ம் தேதி ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவை வெறும் ஊகங்கள் மட்டுமே. ஈரானின் அணு சக்தி திட்டம் தொடர்பாக ரஷ்ய தரப்பில் எந்தவொரு பரிந்துரையும் அமெரிக்காவிடம் அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.