கின்ஷசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு, தற்போது கடுமையான எபோலா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
பொதுவாகக் காணப்படும் ‘ஜைர்' உருமாற்ற வைரஸை விட முற்றிலும் மாறுபட்ட, மிகவும் அரிதான ‘புந்திபுகியோ' வகை வைரஸ் மூலமே இந்த நோய் பரவுவதை சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால், கிழக்கு இட்டுரி மாகாணத்தில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் எபோலா வைரஸ் அறிகுறி உள்ள நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
காங்கோவை ஒட்டி அமைந்துள்ள உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகள் இதனுடன் நெருங்கிய போக்குவரத்துத் தொடர்பைக் கொண்டிருப்பதால், இந்த நோய் எல்லை தாண்டி பரவக் கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தக் கூடும்.