உலகம்

அல்கொய்தா தலைவர் ஏமனில் கொல்லப்பட்டார்: அமெரிக்கா

செய்திப்பிரிவு

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் கவுசிம் அல் ரிமி ஏமனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ஏமனில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத
இயக்கத்தின் தலைவர் கவுசிம் அல் ரிமி கொல்லப்பட்டார். மேலும், அந்த அமைப்பின் துணைத் தலைவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கும், தனது நட்பு நாடுகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கும் என்று கூறியுள்ளது.

கொல்லப்பட்ட ரிமி குறித்த தகவலைக் கூறுபவர்களுக்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.

பாக்தாத்தில் ஈரான் புரட்சிப் படைத் தளபதி சுலைமானி அமெரிக்கத் தாக்குதலால் கடந்த மாதம் கொல்லப்பட்டார். இந்த நிலையில் ஏமனில் இத்தகைய தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

இதில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

தவறவீடாதீர்!

SCROLL FOR NEXT