காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் சுமார் 400 பேர் இறந்ததாக தலிபான் அரசு கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீப காலமாக மோதல் நிலவி வருகிறது. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துமாறு தலிபான் அரசை பாகிஸ்தான் வலியுறுத்துகிறது. ஆனால் தீவிரவாத அமைப்புகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தலிபான் அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் காபூல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் நேற்று கூறுகையில், ”காபூல் நகரில் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது திங்கட்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 2,000 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையின் பெரும் பகுதி இடிந்ததில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர். சுமார் 250 பேர் காயம் அடைந்தனர்” என்றார்.
ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். இது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்றும் அவர் சாடியுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள ராணுவத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் காபூலில் 2 இடங்களில் தொழில்நுட்ப ஆதரவு உள்கட்டமைப்பு மற்றும் வெடி மருந்து சேமிப்பு வசதிகள் அழிக்கப்பட்டன. காபூலில் எந்த மருத்துவமனையும் குறிவைக்கப்படவில்லை. தலிபான் குற்றச்சாட்டு ஆதாரமற்றது” என்றார்.
இந்தியா கண்டனம்: இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ”இது ஒரு கோழைத்தனமான, மனசாட்சியற்ற வன்முறைச் செயல். ஒரு படுகொலையை ராணுவ நடவடிக்கையாக பாகிஸ்தான் சித்தரிக்க முயன்று வருகிறது” என்று இந்தியா கூறியுள்ளது.