உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் பலி

வெற்றி மயிலோன்

மாஸ்கோ: ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக் கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில், ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.

ரஷ்யா மீதான இந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சிலர் காயமடைந்தனர். இரவு முழுவதும் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று ரஷ்ய தரப்பு கூறுகின்றது.

இந்நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "இன்று அதிகாலை மாஸ்கோவில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு, மருத்துவமனையில் காயமடைந்த தொழிலாளர்களைச் சந்தித்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கு தூதரகம் இரங்கல் தெரிவிக்கிறது. மேலும், இந்திய தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் தகவல்களின்படி, ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மொத்தமாக 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த ட்ரோன் தாக்குதல்களை உறுதிப்படுத்தியதோடு, அவை முற்றிலும் நியாயமானவை என்றும் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT