கராகஸ்: வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் 235 பேர் உயிரிழந்தனர். 4,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தென் அமெரிக்க கண்டத்தில் வெனிசுலா அமைந்துள்ளது. அந்த நாட்டின் யாராகுய் மாகாணம், சான்பெலிப் நகரில் புதன்கிழமை மாலை 6 மணி அளவில் ( இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.35 மணி) சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதிவானது.
அடுத்த 40 விநாடிகளில் யுமரே நகரில் 2-வது மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.5 ஆகப் பதிவானது. முதல் பூகம்பம் ஏற்பட்ட சான் பெலிப் நகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் யுமரே நகர் அமைந்துள்ளது.
இந்த மிகப்பெரிய பூகம்பங்களால் யாராகுய், லா குய்ரா, கராபோபோ, மிராண்டா, அரகுவா, பால்கான் மற்றும் வெனிசுலா தலைநகர் கராகஸ் பகுதிகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சான் பெலிப், யுமரே, மோரோன், தலைநகர் கராகஸ், சக்காவோ, சான் பெர்னார்டினோ, அல்டமிரா, லாஸ் பாலோஸ் கிராண்டஸ், பருட்டா, எல் பராய்சோ, லா குய்ரா, காட்டியா லா மார், மகுடோ, மைக்கெட்டியா உட்பட பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் தரை மட்டமாகின. இந்த பகுதிகளில் அடுத்தடுத்து 30-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 4.9 முதல் 6.3 வரை பதிவாகின.
பூகம்பம் குறித்து வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தலைநகர் கராகஸில் நிருபர்களிடம் கூறியதாவது: வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களால் இதுவரை 235 பேர் உயிரிழந்துள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். பூகம்பகத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து உள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க் கால அடிப்படையில் நடைபெறுகிறது.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகிறோம். வெனிசுலா முழுவதும் அவசர நிலை அமல் செய்யப் பட்டு உள்ளது. மீட்பு, நிவாரண பணிகளில் அமெரிக்கா உதவி வருகிறது. அந்த நாட்டுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.
விமான நிலையங்கள் மூடல்:
வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு அருகே 21 கி.மீ. தொலைவில் மைக்கெட்டியா சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பங்களால் இந்த விமான நிலையம் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. இதன்காரணமாக விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன.
பூகம்பத்தால் வெனிசுலாவின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக முடங்கி உள்ளது. குடிநீர், சமையல் காஸ் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. தொலைத் தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பூகம்பத்தில் உயிர் தப்பியவர்கள் புதன்கிழமை இரவு முழுவதும் சாலை, தெருக்கள், மைதானங்களில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை வெனிசுலா அரசும் தொண்டு அமைப்புகளும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், பூகம்ப பாதிப்புக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கடம் தரும் களத்தகவல்:
சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து வெனிசுலா நாட்டில் நாளாக மீட்பு பணிகளில் மக்கள் உட்பட பல்வேறு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளார்களா என வெனிசுலா மக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது சுமார் 4,200 பேர் காயங்களுடன் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கார்லோஸ் அல்வரடோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ”வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தங்களது உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு?
வெனிசுலா பூகம்பம் குறித்து சர்வதேச புவியியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: பசிபிக், வட அமெரிக்கா, யுரேசியா, ஆப்பிரிக்கா, இந்தோ- ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 பெரிய பூமித் தட்டுகளும் பல்வேறு சிறிய பூமித்தட்டுகளும் உள்ளன. இவை ஒன்றோடொன்று உரசும்போது, மோதும்போது பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. தற்போது தென்அமெரிக்கா பூமித் தட்டு மற்றும் சிறிய அளவிலான கரிபீயன் பூமித் தட்டுவின் மோதலால் வெனிசுலாவில் பூகம்பங்கள் ஏற்பட்டு உள்ளன.
வெனிசூலாவை போன்று ஜப்பானிலும் வியாழக்கிழமை மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் ஏற்பட்ட பூகம்பம், ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதிவாகி உள்ளது. ஆனால் ஜப்பானில் கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டது. மேலும் அந்த நாட்டில் பூகம்பத்தை எதிர்கொள்ளும் வகையில் வீடுகள், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதனால் ஜப்பானில் உயிரிழப்பு ஏற்படவில்லை. வெனிசுலாவில் தலைநகர் கராகஸ் உட்பட பெரிய நகரங்களில் அடுத்தடுத்து 2 பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டு உள்ளன. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததால் அந்த நாட்டில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு சர்வதேச புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வெனிசுலா பூகம்பகத்தில் 10,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழப்பு இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “வெனிசுலாவில் ஏற்பட்ட இரு பெரிய பூகம்பங்களால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நேரத்தில் வெனிசுலாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும். அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் மிகவும் மோசமாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.