உலகம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 5 காவலர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு

டெக்ஸ்டர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியின் போது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள கபல் காவல் நிலையம் அருகே ஸ்வாத் அமைதி ஜிர்கா என்ற உள்ளூர் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திதுக்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தீவிரவாதத்திதுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றபோது, காவல் நிலையம் அருகே வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தி உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தஹ்ரீக்-ஏ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகக் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT