மொஜ்தபா காமேனி
தெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல்வேறு படைப்பிரிவுகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள். இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிடுகிறது, ஒழுங்கமைக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது.
இவர்களை பற்றிய தகுதியான தகவல்கள் அளித்தால் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதி அளிக்கப்படும். இது நீதிக்கான வெகுமதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள தலைவர்கள் பட்டியலில் மோஜ்தபா காமேனி உட்பட புலனாய்வு அமைச்சர் எஸ்மாயில் காதிப், துணைத் தலைமைத் தளபதி அலி அஸ்கர் ஹெஜாசி, மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி, உள்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் எஸ்கந்தர் மோமெனி மற்றும் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட பல ஈரான் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.