வெற்றிக் கொடி

புலம்பலைப் புறந்தள்ளலாமே!

அ.கிரேஸி மேரி

வீடு, பள்ளி, பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள், இதழ்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், ஊடகங்கள் இப்படி எங்குப் பார்த்தாலும் எல்லா இடங்களிலும் பேசு பொருள்களுள் ஒன்றாக இணைக்கப்படுவது 'குழந்தைகள் அந்தக் காலத்தில் இருப்பதுபோல் இல்லை' என்பதுதான்.

அந்தக் காலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளின் காலச்சூழல் ஒரு குறிப்பிட்ட உள்வாங்குதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெற்றோர்களே ஆசிரியர் களாகவும் ஆசிரியர்களே இரண்டாம் பெற்றோராகவும் மாணவர்களின் வாழ்க்கையில் பயணித்தார்கள்.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாளைத் தவிர மற்ற ஊடகங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இடையூறுகளை ஏற்படுத்த வில்லை. மிகவும் நிதானமாகச் சிந்தித்தனர். வாழ்க்கை சற்று மெதுவாகவே நகர்ந்தது.

நேரமில்லா யுகம்

பெரும் மாற்றத்துக்கு உள்பட்டவர்களாகவே இக் காலத்துக் குழந்தைகள் பார்க்கப்படுகின்றனர். பெற்றோர், ஆசிரியர்களைத் தாண்டி பல்வேறு நபர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இலவச இணைப்பாக இணைகின்றனர்.

ஊடகங்கள் ஊடுருவி பல்வேறு மாற்றங்களை எண்ணங் களில் விதைத்துவிடுகின்றன. பேசுவதற்கும், ஒரு சில குறுஞ் செய்திகளைத் தட்டச்சு செய்வதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்த திறன்பேசி, அதைத் தவிர மற்ற செயல்பாடுகளில் கவனத்தை தற்போது செலுத்த வைக்கிறது.

தற்காலக் குழந்தைகளுக்கு எதையும் நிறுத்தி நிதானமாக அனுபவிக்கக்கூடிய அளவுக்குக் கால அவகாசம் இல்லை. அவர்கள் காண்கிற உலகம் மிகவும் விநோதமானது. அவர்கள் காண்கிற மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்.

முகத்தைப் பார்த்துச் சிரித்து விளையாடி மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டது. விரல் நுனியில் பல்வேறு பதில்களை உதிர்க்கும் மௌன மொழியின் வெளிப்பாடாக இந்தக் காலக் குழந்தைகள் மாறி வருகின்றனர் என்பது கண்கூடு.

புரிதலை நோக்கி...

ஓடிவரும் குழந்தை கால் இடறி விழுந்தால், அதைக் காணும் மற்ற குழந்தைகள் ஓடிவந்து கைதூக்கி விடுவது இன்று அரியக் காட்சி.

ஓடியவன் விழுந்ததைக் கண்டு மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பது சகஜமாகிவிட்டது. இது எதைக் காட்டுகிறது? கரிசனத்துடன் அடுத்தவர் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்க்காது, கண்டுகளித்து அடுத்த நகர்வுக்குத் தயாராகிற உணர்வற்ற மனநிலையை அதீதத் திரை நேரம் உருவாக்கி இருக்கிறது.

எப்படிப் புரிந்துகொள்வது?

புலம்பித் தீர்த்தல் அர்த்தமற்றதாகிப் போகும். அறிவுரை கூறினால் நம்மை அவர்களுடைய உறவிலிருந்து அகற்றி விடுவார்கள்.

அதட்டிப் பேசினால் ஆக்ரோஷப்படுவார்கள். குறை சொல்லிவிட்டு, காரணம் காட்டிவிட்டு, நமக்குச் சம்பந்த மில்லை என நகர்ந்து சென்றால், அதனுடைய பாதிப்பு நம் வீட்டோடு நிற்காது, அது நம் சமூகத்தையும் சேர்த்தே பாதிக்கும்.

காலத்துக்கு ஏற்ற உரையாடல்

தங்களின் பொன்னான நேரத்தைப் பணம் சம்பாதிப்பதி லேயே பெருவாரியான பெற்றோர் செலவழிக்கின்றனர். இப்படிக் கஷ்டப்பட்டு ஈட்டிய ஊதியத்தை மட்டும் தங்களின் குழந்தைகளுக்குச் செலவிட்டால் போதுமா? உரையாடல், விவாதங்கள், முன் முடிவற்ற மனநிலையில் கருத்துகளைக் கேட்டல் எனக் குழந்தைகளுக்குத் தங்களின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றோர் கொடுக்க வேண்டும்.

‘அந்தக் காலத்துல நாங்க இப்படி இருந்தோம்’ எனச் சொன்னாலே பிடிக்காத குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடித்த வகையில் உரையாடக் கற்க வேண்டும். பணி யிடத்தில் காலமாற்றத்துக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வதுபோல், இக்காலக் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுடனான உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தைகளின் அறிவைத் தேடலுக்குரிய வாய்ப்பாக மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. தான் தனியாக இருப்பதாகக் குழந்தைகளை உணர விடாமல், பெற்றோர் அவர்களுடன் ஆக்கபூர்வமாக நேரம் செலவிடுதல் முக்கியம். பெற்றோராகிய நீங்கள் இன்று செலவிடும் நேரம் பன்மடங்காக உங்களுக்குத் திருப்பி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்.

- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்; agracy5533@gmail.com

SCROLL FOR NEXT