வெற்றி மேடை

போட்டித்தேர்வு தொடர் 26: இந்தியாவின் விண்வெளி மேம்பாடு

செய்திப்பிரிவு

இந்தியாவின் விண்வெளி வளர்ச்சி குறித்து போட்டியாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை சோதிக்க யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி ஆகியவை விரும்புகின்றன. நாட்டில் விவசாயம், கனிமவள மேம்பாடு, நகர்ப்புற குடியேற்ற திட்டமிடல், எல்லை பாதுகாப்பு மேலாண்மை, இருப்பிடம் மற்றும் வாகன கண்காணிப்பு, பேரிடர் மதிப்பீடு, சந்திரன்,செவ்வாய், சூரியன் பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு விண்வெளி மேம்பாட்டுத் திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக உள்ளது. இந்திய விண்வெளி திட்டம் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. ஏவுதல் வாகன தொழில்நுட்பம் (PSLV, GSLV, SSLV, RLV)

2. ரிமோட் சென்ஸிங் செயற்கைக் கோள்கள்

3. INSAT அமைப்பு (தொலைத்தொடர்பு, வானிலை முன்னறிவிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.)

4. சந்திரன், செவ்வாய், சூரியனுக்கான விண்வெளிப் பயணம்.

1962-ல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டதன் மூலம் நாட்டில்7 துரித நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அதே ஆண்டில் திருவனந்தபுரம் அருகே தும்பா பூமத்தியரேகை ஏவுதளத்தின் (TERLS) பணியும் தொடங்கப்பட்டது.

1969 ஆகஸ்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நிறுவப்பட்டது. 1972 ஜூனில் விண்வெளி ஆணையம், விண்வெளி துறை (Department ofSpace) ஆகியவை அமைக்கப்பட்டன. 1972 செப்டம்பரில் இத்துறையின் கீழ் இஸ்ரோ கொண்டுவரப்பட்டது.

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்கள்: போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (PSLV), ஜியோ சின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (GSLV) மற்றும் (GSLV) Mk-III, ரோகிணி சவுண்டிங் ராக்கெட்கள் மற்றும் சிறிய செயற்கைக் கோள் ஏவுகணை மேம்பாடு (Small Satellite Lunch Vehicle) ஆகியவை அடங்கும்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனம் (Reusable Launch Vehicle), சோதனை வாகனத் திட்டம் (Test Vehicle Project), காற்று - சுவாசஉந்துதல் மற்றும் மனித விண்வெளிப் பயணத்தை நோக்கிய முக்கியமான தொழில்நுட்பங்கள்.

மகேந்திரகிரி இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ் (ஐபிஆர்சி): இந்திய விண்வெளி திட்டத்துக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்ப தயாரிப்புகளை செயல்படுத்த தேவையான அதிநவீன வசதிகளுடன் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதிருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஹைதராபாத் தேசிய தொலை உணர்வு மையம்: செயற்கைக் கோள்தரவுகளை பெறுவதற்கான தரை நிலையங்களை நிறுவுதல், தரவு தயாரிப்புகளை உருவாக்குதல், வான்வழி தொலை உணர்தல் தரவு கையகப்படுத்துதல், பயனர்களுக்கு பரப்புதல், பேரிடர் மேலாண்மை ஆதரவுஉள்ளிட்ட தொலைநிலை உணர்திறன் பயன்பாடுகளுக்கான நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய பணிகள்.

கர்நாடகாவின் ஹாசனில் உள்ள மாஸ்டர் கன்ட்ரோல் ஃபெசிலிட்டி (MCF): இது 140-க்கும் அதிகமான ஜியோ-ஆர்க் தெரிவுநிலையுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறந்த கட்டுப்பாட்டு மையமாகும்.

நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL): இந்த நிறுவனம் 2019 மார்ச் 6-ம் தேதி மத்திய விண்வெளி துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில், இந்தியஅரசு நிறுவனம்/ மத்திய பொதுத்துறை நிறுவனமாக (CPSE) இணைக்கப்பட்டது. செயற்கைக் கோள்களை உருவாக்குதல், தேவைக்கேற்ப அவற்றை ஏவுதல்: ஏவுகணைகளை உருவாக்குதல், இந்திய தொழில் துறைக்கு ஏற்ற தொழில்நுட்ப மாற்றங்களை உருவாக்குதல் ஆகியவை இதன் பணி.

கிரகங்களுக்கு இடையேயான இஸ்ரோவின் முதல் பணியான Mars Orbiter Mission (MOM) 2021 செப்.24-ம்தேதி அதன் சுற்றுப்பாதையில் 7 ஆண்டுகளை நிறைவு செய்தது.

சந்திரயான்: சந்திரயான்-2 ஆர்பிட்டர் சுற்றுப்பாதையில் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ‘சந்திரயான்-3’ பணியானது, தரையிறங்கும் இடத்துக்கு அருகில் உள்ள இடத்திலேயே மாதிரி பகுப்பாய்வு நடத்துவதற்காக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதையும், உலவுவதையும் நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆதித்யா L1 Mission: சூரியன் - பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளி 1 (L1)ஐ சுற்றியுள்ள ஒரு ஒளிவட்டப் பாதையில் இருந்து சூரியனை ஆய்வுசெய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்தியப் பணி. ஃபோட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை 7 ‘பேலோடு’களுடன் இது கண்காணிக்கிறது.

ககன்யான் (Gaganyan) திட்டம்: 3 பேர் கொண்ட குழுவினரை ‘லோ எர்த் ஆர்பிட்’டுக்கு (LEO) ஏற்றிச் சென்று, பூமியில் உள்ள முன் வரையறுக்கப்பட்ட இடத்துக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதே மனித விண்வெளிப் பயணம் ஆகும். இது இந்திய விண்வெளி திட்டத்தின் முக்கிய மைல்கல் ஆகும்.

ரிமோட் சென்ஸிங் செயற்கைக் கோள்: 1988 முதல் செயல்பட்டு வரும் இந்திய ரிமோட் சென்ஸிங் (IRS) செயற்கைக் கோளான IRS-1Aஐ அறிமுகப்படுத்தி இயக்குவதன் மூலம் செயல்பாட்டு ரிமோட் சென்ஸிங் சேவைகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் வானிலை, புயல்கள் குறித்து முன்னறிவிப்பு செய்வது எளிதாகிறது.

(அடுத்த பகுதி சனிக்கிழமை வரும்)

வீ.நந்தகுமார்ஐஆர்எஸ், வருமான வரித் துறை கூடுதல் ஆணையர்

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 25: மனிதநேயத்தை வளர்க்கும் அறிவியல் மனப்பான்மை

போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும்.
SCROLL FOR NEXT