நகரத்தில் பிறந்து, வளர்ந்து, படித்த எனக்கு ஒரு கிராமத்து அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த முதல் நாள் நினைவிலிருந்து அகலாது.
அன்று நான் சந்தித்த மாணவர்களின் பேச்சு வழக்குகூட வித்தியாசமாக இருந்தது.
அதிலும் மாணவன் முத்துராஜாவின் தலையில் வைத்த எண்ணெய்க் காதோரமாக வடிந்து முகத்துக்கு ஒரு பளபளப்பைக் கொடுத்தது.
முதல் நாளன்று கண்களில் மிரட்சியோடு என்னைப் பார்த்தவன். ஆங்கில பாடங்களை வாசித்துக் காட்டும்போது, மாணவர்கள் என்னுடனே தரையில் அமர்ந்துகொள்வார்கள்.
ஆறாம் வகுப்பு மாணவர்களான அவர்களை, அப்போதுதான் உன்னிப்பாகக் கவனிக்க முடியும். நான் சொல்லச் சொல்ல விரல்களை அந்த வார்த்தையின் மேல் வைத்து அவர்களும் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். பிறகு ஒவ்வொருவராக எழுந்து நின்று வாசித்துக் காட்டுவார்கள்.
குறிக்கோள் என்ன?
நான் ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் தவிப் போடு தேடுவார்கள். மறுநாள் பேருந்தில் நான் இறங்கும் கூட்டு ரோட்டுக்கே வந்து காத்துக் கிடப்பார்கள்.
அதிலும் முத்துராஜா தனது மிதிவண்டியில் எனது கைப்பை, உணவுப் பையை மாட்டிக்கொண்டு, உருட்டிக்கொண்டே இரண்டு கிலோ மீட்டர்வரை என்னுடனே பள்ளிக்கு வருவான்.
ஆங்கிலப் பாட வகுப்பின்போது குறிக் கோளைப் பற்றிய கவிதையை வாசித்து விளக்கிக் கொண்டிருந்தேன். முதலில் குறிக்கோள் என்றால் என்ன என்பதை விவரித்துவிட்டு, ஒவ்வொரு மாணவரிடமும் அவர்களின் லட்சி யத்தைக் கூறச் சொன்னேன்.
“மிஸ்... நான் கலெக்டர் ஆவேன்”, “நான் உங்களை மாதிரி டீச்சர் ஆவேன்”, “நான் போலீஸ் ஆவேன்" என ஆளாளுக்குக் கூறினர். “யாருப்பா அது போலீஸ்?” என்றதும், “நான்தான் மிஸ்” என்றான் முத்துராஜா.”
“டேய் அதுக்கெல்லாம் நல்லா வளரணும்டா” என்று கேலி செய்த மற்றொரு மாணவனை அன்பாக அதட்டிவிட்டு, “முத்துராஜா, நீ நல்லா படிச்சு கண்டிப்பா போலீஸ் அதிகாரி ஆகணும்ப்பா" என்றேன். முத்துராஜா முகத்தில் அவ்வளவு பூரிப்பு.
இரண்டு ஆண்டுகள் கழித்து மாற்றலாகி வேறொரு பள்ளிக்குச் சென்றபோது மாணவர்கள் கண்ணீரோடு விடைகொடுத்தனர். முத்துராஜா, “மிஸ்.. நான் பெருசாயிட்டு போலீஸ் ஜீப்ல வந்து உங்களைப் பார்ப்பேன்” என்றான்.
ஆண்டுகள் உருண்டோடின. மாணவர்கள் வளர்ந்திருந்தாலும் என்னுடன் தொலைபேசி தொடர்பில் இருந்தனர். அந்தப் பள்ளி மாணவர்கள் வாட்ஸ்அப்பில் ஒரு குழுவை உருவாக்கி என்னையும் இணைத்தனர். அவர்களது சுகதுக்க அனுபவங்களைப் பகிர்ந்து என்னை ஒரு தாயாகவே மதிக்கின்றனர்.
வாழ்க்கைப் போராட்டம்
முத்துராஜா கல்லூரிப் படிப்பை முடித்தான். கல்லூரிப் படிப்புக்கே விவசாய நிலத்தை விற்ற நிலையில், அவனின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். முத்துராஜாவுக்குள் ஆறாம் வகுப்பில் இருந்து அவன் மனதில் இருந்த சிறு கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
சென்னை சென்று அரசுப் பணித் தேர்வுகளை எழுதினான். பகுதிநேர வேலை செய்து சிக்கனமாகச் செலவழித்தான். வெற்றிக்கனி பல முறை கை வரைக்கும் வந்து, தட்டிப் போனது.
அந்நேரம், அவனுக்குத் தைரியம் ஊட்டினேன். அவன் நண்பர்களில் பலர் ஆளுக் கொரு வேலையில் சேர்ந்திருந்தனர். கிடைத்த வேலையே போதும் என்கிற அளவில் சொற்ப வருமானத்துக்கு அவர்கள் வேலைக்குச் சென்றனர்.
சிலருக்குத் தங்களின் சொந்தத்திலேயே குடும்பத்தாரால் திருமணம் முடிக்கப்பட்டது. இந்நிலையில், கிராமத்தில் முத்துராஜாவை யார் பார்த்தாலும் அவனை வசைபாடினர்.
“நீ இப்படியே படிச்சுக்கிட்டு இருந்தா என்னைக்கு உங்க அம்மா, அப்பாக்குச் சம்பாதிச்சுக் கொடுப்ப? அவங்க பாவம் வயசான காலத்துல விவசாய வேலை பார்த்துட்டு இருக்காங்க" என்று கூறும் போதெல்லாம் முத்துராஜாவுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். அதனால் ஊருக்குப் போவதைத் தவிர்த்தான்.
அடங்காத ஆச்சரியம்
ஆனாலும் தனது முயற்சியைக் கைவிட வில்லை. எனக்கு ஒரே ஆச்சரியம். கிராமத்தை விட்டு அக்கம்பக்க ஊர்களுக்குக்கூடப் போய்ப் பழக்கம் இல்லாதவன், சென்னைக்கு வந்து தைரியமாக தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அதில் குரூப் 2வில் தேர்ச்சி பெற்று பஞ்சாயத்து செயல் அலுவல ராகப் பணியாற்ற இருப்பதாகக் கூறினான்.
சிறிய வயதாக இருப்பதால் இவரை எல்லாரும் ‘குட்டி ஆபீசர்’ என்று கொண்டாடினர். நேர்மையாக வேலை செய்ததால் சில பிரச்சினைகளையும் எதிர்கொண்டார். மீண்டும் குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்றேவிட்டார். இப்போது டி.எஸ்.பி. ஆகப் பணியேற்றுள்ளார்.
ஆங்கிலத்தில் அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த என்னைவிட, ஆங்கிலப் புலமையில் அதிகம் மின்னுகிறார் என்பதில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. விரைவில் போலீஸ் ஜீப்பில் வந்து என்னைச் சந்திப்பார் எனக் காத்திருக்கிறேன்!
- சி. பிரபாவதி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை; prabavath8@gmail.com