நூலகத்தில் தரிசித்த தாய்! | என் மன வானில்

நூலகத்தில் தரிசித்த தாய்! | என் மன வானில்
Updated on: 
1 min read

பள்ளி காலாண்டு விடுமுறையின் போது ஒரு சனிக்கிழமை காலை தேவகோட்டையில் உள்ள கிளை நூலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு தாய் நின்றுகொண்டிருந்தார்.

தன் மகனையும் மகளையும் நூலகத்தில் உறுப்பினர் ஆக்குவதற்காக நூலகரிடம் இரண்டு உறுப்பினர் படிவங்களை வாங்கினார். மகனிடம் கொடுத்து விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கூறினார். மகனோ தயங்கினார். இதைக் கவனித்த தாய், "என்னடா, நிரப்பாம வச்சுக்கிட்டு இருக்க? நிரப்பு டா" என்றார். மகன், "தமிழ்ல இருக்குதும்மா‌" என்றார்.

உடனே அந்த அம்மா, "தமிழ்ல எழுதலாம்... தமிழ்லதான் எழுதணும்" என்றார். இவ்வளவு நேரம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பெண் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் சட்டென்று உற்சாகம் உண்டானது.

பள்ளி விடுமுறை நாள்களை ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதத்தில் கொண் டாடித் தீர்ப்பர். இதில் எத்தனை மாணவர்கள் பயனுள்ள வழியில் செலவழிப்பர்? இங்கோ, ஒரு தாய் தனது குழந்தைகளை நூலகத்தில் உறுப்பினர்களாக்கி, புத்தகங்களையும் வாசிப்பின் மகத்துவத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் என்றால், அது பாராட்டப்பட வேண்டிய நற்செயல்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்குகிற குழந்தைகள் பிற்காலத்தில் உயர்ந்த நிலையை அடைவர்.

புத்தக வாசிப்பின் சுவையை அறிந்துகொள்கிற குழந்தை களுக்கு வீண் கேளிக்கைகளில் கவனம் சிதறாது. குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குவதன் வாயிலாக அவர்களின் சொற்களஞ்சியம் வளம் பெறும். ஒரு சொல்லுக்கு இணையான வேறு சொல் என்ன என்பதைக் கண்டறிவர்.

பேச்சுப் போட்டிகளில் பலர் திணறுவதற்கும், ஒருகட்டத்தில் பேச்சு தடைபட்டு நிற்பதற்கும் இந்தச் சொற்களஞ்சியப் பெருக்கம் இன்மையே காரணம்.

நல்ல நூல்களைக் கற்கும்தோறும் அறிவு வளரும் என்கிறார் வள்ளுவர். அறிவு மட்டுமன்றி, நடத்தை மாற்றமும் ஆளுமைப் பண்பும் நல்ல வாசிப்பால் மேலோங்கும்.

திறன்பேசியின் மூலம் இன்று உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது என்றும், திறன்பேசியிலேயே அனைத்தையும் வாசிக்க முடியும் என்றும் பலர் பெருமை பேசுவதைக் கேட்க முடிகிறது.

என்ன இருந்தாலும் ஒரு குழந்தையைக் கையில் ஏந்துவதைப் போல ஒரு புத்தகத்தைக் கையில் ஏந்தி வாசிக்கும் அந்த இன்பத்தை எந்த ஒரு தொழில்நுட்ப கருவிகளாலும் தந்துவிட முடியாது.

அண்ணல் அம்பேத்கர், காந்தியடிகள், ஜவாஹர்லால் நேரு, அறிஞர் அண்ணா, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா போன்றோரின் ஆளுமைப் பண்பை வடிவமைத்ததில் புத்தகங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

இந்த விடுமுறையில் என் குழந்தைகளை ஊட்டிக்கு அழைத்துச் சென்றேன்; கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றேன்; குற்றாலத்துக்கு அழைத்துச் சென்றேன் என்று பெற்றோர்கள் பெருமை பேசுவதை விடவும் மிகச் சிறந்தது, "இந்த விடுமுறையில் நான் என் குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்றேன்" என்பது.

- துஷ்யந்த் சரவணராஜ், ஆசிரியர், எழுத்தாளர், தேவகோட்டை; தொடர்புக்கு: rasadushyanth@gmail.com

நூலகத்தில் தரிசித்த தாய்! | என் மன வானில்
குழந்தைகளுக்கும் சுயமரியாதை உண்டு! | என் மன வானில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in