மாணவர்களுடன் அழகர் கோயிலுக்கு அண்மையில் சுற்றுலா சென்றிருந்தோம். ஓரிடத்தில் மரங்களில் இருந்து உதிர்ந்த விதைகள் பாதையில் சிதறிக் கிடந்தன. ஒவ்வொன்றும் காற்றில் பயணிக்க இயற்கை அளித்த இறகைப் போன்ற தனித்துவமான அமைப்புடன் இருந்தன.
ஆனால், மாணவர்களோ அவற்றைக் கவனிக்கவே இல்லை. சில விதைகளை நான் எடுத்துக்காட்டிய பிறகுதான் அவர்கள் அவற்றைக் கவனித்தனர். சிலர் ‘இதை முன்பு பார்த்ததே இல்லை’ என்றபடியே, அவை எவ்வளவு தூரம் பறக்கும், எந்த மரத்தின் விதைகள், ஏன் இவ்வளவு நிறைய விதைகள் உருவாகின்றன என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்வி களை எழுப்பினர். கவனிப்புக்கான சிறிய அழைப்பு கிடைத்தவுடன், குழந்தைகளின் ஆர்வம் எவ்வளவு விரைவாக உயிர் பெறுகிறது!
வியப்பும் கவனிப்பும்
என்னைத் துரத்திய கேள்வியோ வேறு. மாணவர்கள் தாங்களாகவே அவற்றைக் கவனிக்கவும், ஒரு கணம் நின்று உற்று நோக்கி அவற்றின் விசித்தி ரத்தை உணரவும் அவர்களுடைய மனம் ஏன் தூண்டப்படவில்லை? அன்றாடம் எண்ணற்ற மனிதர்கள், பொருள்கள், காட்சிகளை எதிர்கொள்கிறோம்.
ஆனால், அவற்றில் எத்தனை நம்கவனத்தையும் வியப்பையும் தூண்டு கின்றன? வியப்பு என்பதைப் பெரும்பாலும் அழகுணர்ச்சியோடும், கலை உணர் வோடும் தொடர்புபடுத்துகிறோம். அது அறிவையும் சார்ந்தது. அந்த விதைகளை மாணவர்கள் கையில் எடுத்துப் பார்த்த போதுதான் கேள்விகள் பிறந்தன.
பதில்கள் தேடப்பட்டன. வியப்பும் கவனிப்பும் அப்படித்தான் ஒன்றை இன்னொன்று இழுத்துக்கொண்டு வரும். மனித அறிவு இந்தத் தொடர்ச்சியில்தான் வளர்கிறது. வியப்புக்குரியவை என்றைக்கும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. இன்றைய பிரச்சினை, குழந்தைகள் ஒரு கணம் நின்று வியக்கும் மனப்பழக்கமே மெல்ல மெல்ல மங்கிவரும் சூழலில் வாழ்கி றார்கள் என்பதுதான்.
நுகர்வாக்கப்பட்ட வியப்பு
அறிவைப் பெருக்குவதற்கான வாய்ப்பு இன்று ஏராளம். ஆனால், டிஜிட்டல் திரை வழியிலான சமூக ஊடகங்கள், கவனம் ஈர்க்க முட்டி மோதும் அல்காரிதம்கள், முடிவற்ற பொழுது போக்கு இவை அனைத்தும் புதிய சூழலை உருவாக்கியுள்ளன.
நமது கவனத்தை, சிந்தனையை, அன்றாட வாழ்க்கையை அவ்வளவு ஏன் மனித உறவுகளையும், விழுமியங்களையும்கூட அவை உருமாற்றுகின்றன. இந்தச் சூழலில் ஒரு காட்சியை உள்வாங்குவதற்கு முன்பே அடுத்தது வந்துவிடுகிறது. ஒரு கேள்வியுடன் தங்கு வதற்கு முன்பே பதில் கிடைத்துவிடுகிறது.
வேகம் அதிகரித்திருக் கிறது; ஆனால், நிதானமான கவனிப்பு குறைந்துவருகிறது. இன்று குழந்தைகள் உலகை நேரடியாக அனுபவிப் பதைவிட, உலகைப் பற்றிய காட்சிகளையும் தகவல்களையுமே அதிகம் அனுபவிக் கின்றனர்.
தொழில்நுட்பத்தால் ஒரு குழந்தை தன் அறையிலிருந்தபடியே விண்வெளி முதல் கடலின் ஆழம்வரை, தொலைதூர நாடுகளின் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கைவரை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தை எதற்கு, எவ்வாறு, எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
இப்போது விடுமுறை நாள்களில் மட்டும் தேடிச் செல்லும் ஒரு சுற்றுலாப் பயணத்துக்கானதாக இயற்கை சுருக்கப்பட்டுவிட்டது. இயற்கையுடன் நேரடித் தொடர்பு அறுந்துபோன சூழலில், கவனிப்பதற்கான இயல்பான தூண்டுதல்களைச் செயற்கையான சத்தங்கள், வண்ணங்கள், திரைகள் பெயரளவில் ஏற்படுத்துகின்றன.
நுகர்வின் வியப்பு ஒரு கண நேர பரவசத்தையே தரும்; அடுத்த கணமே இன்னொரு பரவசத்தைத் தேட வைக்கும். அறிவின் வியப்போ வேறு
தன்மை கொண்டது. அது மனக்காட்சியை உருவாக்குகிறது, கேள்வியை எழுப்பு கிறது, சிந்தனையைத் தூண்டுகிறது, புரிதலை நோக்கி அழைக்கிறது.
மீட்டெடுப்பது எப்படி?
வியப்பு எல்லாரிடமும் ஒரே அளவில் வெளிப்படாது. அது வளர்க்கப்படலாம்; திணிக்கப் படலாகாது. கவிஞராக மாறுவது சிலருக்கே உரியது; ஆனால், மொழித்திறன் அனைவருக்கும் இன்றியமையாதது. அதுபோல, வியந்து கவனிக்கும் மனப் பழக்கமும் எல்லாருக்கும் தேவை யானது.
பெரியவர்கள் தங்கள் சொற்களாலும் செயல்களாலும் வியப்புக்கான முன்மாதிரிகளாக இருக்கலாம். புலன்களின் வழியாக உலகை நுணுக்கமாகக் கவனிக் கவும், பழக்கமான விஷயங்களுக்குள் மறைந்திருக்கும் புதுமைகளைக் கண்டறி யவும் குழந்தைகளை அழைக்கலாம்.
பொருள்களின் பயன்பாட்டைத் தாண்டி, அவற்றின் பின்னால் உள்ள கதைகளை, மனிதர்களை, உறவுகளைத் தேடத் தொடங்கும்போதுதான், அவற்றின் பிரம்மாண்டம் விளங்கும்.
குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று, எதையும் கற்பிக்காமல் சுற்றியிருப்பதை மட்டும் கவனிக்கச் சொல்லலாம். எல்லாப் பதில்களையும் உடனே வழங்குவதற்குப் பதிலாக, அவர்கள் சிறிது நேரம் கேள்விகளுடன் இருக்க அனுமதிக்கலாம். கற்பனைக் கேள்விகள், அறிவியல் உண்மைகள் மூலம் வியப்பைத் தூண்டலாம்.
"நீ என்ன கற்றுக்கொண்டாய்?" என்ப தற்குப் பதிலாக "நீ என்ன கவனித்தாய்?", "உனக்கு என்ன கேள்வி தோன்றியது?", "வேறு ஒருவரின் பார்வையில், இதைப் பார்த்தால் எப்படி இருக்கும்?" என்பது போன்ற பரந்த மனப்பான்மை கொண்ட கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
எதிர்காலத்துக்கான திறன்
தகவல் தொடர்பால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், கல்வியின் பணி, உலகின் விசாலத்தையும் ஆழத்தையும் மீண்டும் உணரவைப்பதே.
தகவல்களை நினைவில் வைத்தி ருப்பதையும், கருவிகளைப் பயன்படுத்துவதையும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நாளுக்கு நாள் சிறப்பாகச் செய்யக் கூடும்.
கணிதம், மொழி, உடல் திறன் ஆகியவற்றுக்குப் பயிற்சிகள் உள்ளன. ஆனால், மனிதர்களுக்கே உரிய வியப்பு, கவனம், மனக்காட்சி, கேள்விகளை உருவாக்குதல், தொடர்புகளை ஆராய்தல், சொந்த அனுபவம் அல்லது கற்பனையின் உதவியுடன் கருத்துகளை உருவாக்குதல் போன்ற மனப்பழக்கங்களை நாம் எவ்வளவு வளர்க்கிறோம் என்பதே முக்கியம்.
இதுவே குழந்தைகளைப் புதிய மனிதச் சூழலின் நுகர்வோர் எனும் நிலையிலிருந்து, சிந்திக்கும் பங்கேற்பாளர்களாக உயர்த்துகிறது.
அழகர்கோயில் பாதையில் கிடந்த அந்த விதைகளை நாம் கவனிக்காமல் சென்றாலும், அவற்றுக்கு இழப்பில்லை; அவை இன்னும் காற்றோடு பயணித்துத் துளிர்க்கத் தயாராகவே இருக்கின்றன. இழப்பு நமக்குத்தான். ஒரு விதையினுள் உறங்கும் பெரிய மரத்தைப் பார்க்கும் மனதைக் குழந்தைகளிடம் உருவாக்கு வதே நம் பொறுப்பு.
- கட்டுரையாளர்: ச.அருண்குமார், குழந்தைகள் வள செயல் பாட்டாளர், மதுரை சீடு கல்வி மையங்கள்; maduraiseed1999@gmail.com