திருக்குறளின் சிறப்பே இரண்டு அடியில் மிகப்பெரிய பொருளைக் கூறுவதுதான். ஆரம்ப வகுப்பு முதல் முனைவர் பட்டம்வரை இடம் பெறுவது திருக்குறள். ஐந்து வயதுக் குழந்தையும் திருக்குறள் படிக்கிறது. எண்பது வயது முதுமையும் திருக்குறள் வாசிக்கிறது.
திருக்குறள் வகுப்புகளும் ஆங்காங்கே நடக்கின்றன. தமிழக அரசு, 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்யும் குழந்தைகளைப் பாராட்டி பரிசுகளை வழங்கி ஊக்கப் படுத்துகிறது. பள்ளிகளும் குழந்தைகள் திருக்குறள் வாசிப்பதை ஆண்டு விழாவிலும் ஒரு நிகழ்ச்சியாக வைத்து, மாணவர்களின் திறமை யைக் காண்பித்து, பெருமிதம் கொள் கின்றன. இவை மட்டும் போதுமா?
காத்தல்! கடித்தல்! - துறவி ஒருவர் ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருக்கையில், ஓரத்திலுள்ள மரத்திலிருந்து எறும்பு ஒன்று ஆற்றில் விழுகிறது. அதைக் கண்டதும் அந்த எறும்பைக் காப்பாற்ற தன் கையால் தண்ணீருடன் அந்த எறும்பை துறவி அள்ளினார்.
உயிர்ப் பிழைத்த அந்த எறும்பு துறவியின் கைகளைக் கடித்து விடுகிறது. வலியில் துறவி கையை உதறினார். மீண்டும் எறும்பு ஆற்றில் விழுந்துவிட்டது. துறவி மீண்டும் அந்த எறும்பைக் கையில் ஏந்தினார். மீண்டும் எறும்புக் கடித்தது. பின்பு அந்த எறும்பை ஒரு இலையின் மீது வைத்து அதன் உயிரைக் காப்பாற்றினார்.
இதில் ஒரு ஜென்தத்துவம் அடங்கியிருக்கிறது. எறும்பு கடிப்பதால் வலி ஏற்படுவது என்பது, அதன் முனையில் உள்ள ஃபார்மிக் அமிலத்தினால்தான். தன்னைக் காப்பாற்றுபவரைக் கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் அது கடிக்கவில்லை.
சிறிய வலியை உண்டாக்கினாலும் ஓர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற மன நிலையில் இருக்கும் துறவியின் மனநிலை மனிதர்களுக்கு ஏற்பட்டு விட்டால், உலகில் அமைதி நிலவும். இது ஜென் தத்துவம்.
இதையே வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மிகப்பெரிய வாழ்க்கைமுறைத் தத்துவத்தை வடித்தார். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்' - என்று துன்பம் விளை வித்தவருக்கும் நன்மையைச் செய்யும் உயர்ந்த மனநிலையை நம்மிடம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், தனது நெருங்கிய நண்பரான காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதுவது வழக்கம். 1909இல் ‘ஓர் இந்துவுக்கு ஒரு கடிதம்’ எனத் தலைப்பிட்டு திருக்குறளைப் புகழ்ந்து காந்திக்குக் கடிதம் எழுதினார் டால்ஸ்டாய். அதன்பின்னரே, காந்தி யடிகள் திருக்குறளைப் படிப்பதில் ஆர்வம் கொண்டார்.
அந்தக் கடிதத்தில் டால்ஸ்டாய் மேற்கோள்காட்டியது இன்னா செய்தாரை... குறளைத் தான். ரஷ்யாவைச் சேர்ந்த டாஸ்டாய்க்கு குறளின் பெருமை தெரிய வந்தது எப்படி? ஜெர்மனில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை முழுவதுமாக வாசித்து வியந்திருக் கிறார் டால்ஸ்டாய். அகிம்சையின் உன்னதத்தை உலகிற்கு எடுத்து ரைக்க மிகப்பெரும் ஊன்றுகோலாக திருக்குறளை தனது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி இருக்கிறார்.
கதைக் குறள்: தேச எல்லைகள் கடந்து மகத்தான ஆளுமைகளின் மீது அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திய திருக் குறளைத் தமிழர்களான நாம் எப்படி யெல்லாம் கொண்டாட வேண்டும்! திருக்குறள் தொடர்பான ஓவியக் கண்காட்சிகளை, கருத்தமர்வு களை பள்ளி அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நடத்த வேண்டும்.
அனைத்து அலுவல கங்களிலும் தினம் ஒரு திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்று அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள் குறிப்பாக அலுவலராக வருபவர்கள், திருக்குறளைக் கட்டாயம் வாசிக்க வைத்து, அதன் பொருளை அறிந்திருக்கச் செய்ய வேண்டும். தினம் ஒரு திருக்குறளையும் அதன் பொருளையும் அனைத்து மாணவர்களும் படிக்க வைக்க வேண்டும். குறளின் பொருளை மாணவர்கள் மட்டுமல்ல, அனைவரும் உணர்ந்துகொண்டால், நம் புவி அன்பு சூழ் உலகாகும்.
- கட்டுரையாளர்: மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, செங்கல்பட்டு மாவட்டம்; bharathi.boss.3@gmail.com