வெற்றிக் கொடி

பேதமற்ற வகுப்பறை.. பிரியாத வாழ்க்கை | இது நம் வகுப்பறை சமூகம் 12

ச.மாடசாமி

பேதமற்ற வகுப்பறைதான் அர்த்த முள்ள வகுப்பறை. பேதங்கள் - கருத்து வேறுபாடுகள் எப்படியும் வந்து விடுகின்றன. பிடித்தவர்கள், பிடித்த ரசனைகள், ஆமாம் சாமி போடுவோர், எதிர்த்துப் பேசுவோர், கவனிப்போர், கவனம் சிதறுவோர் என பலதரப்பட்டோரால் நிரம்பிக் கிடக்கிறது வகுப்பறை.

இவை போக, தோலின் நிறம், சாதிப் பாகுபாடு, அடி மனதில் தங்கிக் கிடக்கும் பாகுபாடுகள் திருமணத்தின்போது மறக்காமல் வெளியே வருகின்றன. சமுத்திரத் திடம் பேதம் பார்க்கும் கண்ணும் மனமும் இல்லை.

பேதமற்ற வகுப்பறைதான் அவர் கனவு. அம்பேத்கர் பற்றி வகுப் பறையில் பேசியவர் அவர்தான். கவனிக்கும் மாணவர்கள் இப்போது கூடி வரு கின்றனர். பாகுபாடுகளுக்கு எதிராகப் பாடுபட்டவர்களின் சரித்திரத்தை அடிக்கடிச் சொல்பவர் அவர். ஓய்ந்த நேரங்களில் மட்டும் சொல்வார். திரும்பக் கேட்டால் சோர்வடையாமலும் மறுக்காமலும் சொல்லக்கூடியவர் அவர்.

பாகுபாடுகளைக் களைந்தவர்: போட்டிகளின் மூலம் அல்ல; கூட்டுறவின் மூலம் மாணவர்களின் ஒற்று மையைக் கட்டியவர் அவர். மாணவியரும் மாணவர்களும் அதிகம் கேட்டது ரோசா பார்க்ஸ் பற்றித்தான். பேருந்தில் பாகுபாடுகளை ஒழித்தவர் அவர். எங்கே? அமெரிக்காவில். பழைய அமெரிக்காவில் வெள்ளைத் தோலின் அகம்பாவம் உச்சத்தில் இருந்தது.

ஆப்பிரிக்கர்களை விலைக்கு வாங்கி அமெரிக்காவில் அடிமைகளாக நடத்தியது மறக்க முடியாத கசப்பு வரலாறு. அமெரிக்கக் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளோடும் ஒரு பள்ளி; ஆப்பிரிக்கக் கறுப்புக் குழந்தைகளுக்கு எந்த வசதியும் அற்ற பள்ளி இருந்த நேரம்.

1863இல் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்துச் சட்டம் இயற்றினார். ஆனால், பாகுபாடுகளும் வன்முறைகளும் தொடர்ந்தன. பேருந்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பேருந்தில் முன்வரிசை வெள்ளைத் தோல் அமெரிக்கர்களுக்கும், பின்வரிசை கறுப்புத் தோல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஒதுக்கப்பட்டன.

பேருந்தின் முன்புறம் டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் எடுத்த பிறகு, பேருந்தில் இருந்து இறங்கிப் பின்னால் ஏறவேண்டும். அவர்கள் ஏறுவதற்குள் பல நேரங்களில் பேருந்து புறப்பட்டுவிடும். அவ்வளவு அலட்சியம்.

வசதியற்ற அவர்களில் பலர் அன்று கார் வைத்திருக்கவில்லை. வேலைக்குப் போவதற்குப் பேருந்து பயணம்தான் அவர் களின் ஒரே வசதி. 1955 டிசம்பர் 1இல் ரோசா பார்க்ஸ் எடுத்த உறுதியான நிலைப்பாட்டால் இந்தக் கொடுமை நின்றது. ரோசாவின் வயது அப்போது 42. தையல் வேலை அவர் தொழில். அநீதிக்கு எதிரான கோபம் எப்போதும் அவர் நெஞ்சில் புகைந்து கொண்டிருந்தது. தாத்தா விதைத்த விதை அது.

உண்மையான கதாநாயகர்: தையல் வேலைக்குச் செல்ல மாண்ட் காமரி பேருந்தில் போவது அவர் வழக்கம். பேருந்தில் நெரிசல். வெள்ளையர்கள் ஏறினால் கறுப்பர்கள் தங்கள் இருக்கை களை விட்டுத்தர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ரோசா பார்க்ஸ் தம் இருக்கையில் கெட்டியாக உட்கார்ந்தி ருக்கிறார். வெள்ளை மனிதர் ஒருவர் பேருந்தில் ஏறி உட்கார இடமின்றி நிற்கிறார். டிரைவர் ரோசாவைப் பார்த்து ‘எழு’ என்று கூச்சலிடுகிறார். ரோசா மறுக்கிறார்.

ரோசாவின் மறுப்பு பெரும் போராட் டத்தைத் தூண்டியது. ஓராண்டுக்கும் மேலாக நடந்த பேருந்து புறக்கணிப்புப் போராட்டம். 40,000க்கும் மேற்பட்ட ஆப் பிரிக்க அமெரிக்கர்கள் ஓராண்டுக்கும் மேலாகப் பேருந்து ஏறாமல் நடந்தே பணிக்குச் சென்றனர். அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் போராட்டத்துக்குச் சாதகமாய் அமைய அரசு பணிந்தது. பேருந்தில் பாகுபாடு ஒழிந்தது.

சாதாரண மனிதர்களே உண்மையான கதாநாயகர்கள். ரோசா பார்க்ஸ் தெரிவித்த மறுப்பு அவரைக் கதாநாயகர் ஆக்கியது. அமெரிக்காவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சாலைகள், பாலங்கள் ரோசாவின் பெயரில் (ரோசா 2005இல் 92ஆவது வயதில் காலமானார்). பாகுபாடுகளை ஒழிக்க நினைப்போர் அவசியம் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று, ரோசா பார்க்ஸின் ‘My Story’.

எதைப் பாராட்டுவது? - தாத்தா! தாத்தா! ஊகூம்! பதில் இல்லை. எழுப்ப வந்த பேத்தியும் பேரனும் கலங்கினார்கள். பேத்திக்கு வயது ஏழு; பேரனுக்கு ஐந்து. திரும்பக் கூப்பிட்டார்கள். தாத்தா! தாத்தா! தாத்தா கண்மூடிப் படுக்கையில் கிடந்தார். ஒருநாளும் இப்படிக் கிடந்தது இல்லை. பேத்தி, பேரன் இருவரும் அழுதார்கள்.

தாத்தாவுக்கு என்னமோ ஆச்சு. ஒரு வேளை… இறந்துட்டாரா? அம்மா அப்பாவிடம் சொல்ல ஓடினார்கள். மூச்சு வாங்கவாங்கச் சொன்னார்கள். அம்மா, அப்பா புறப்பட்டு வர அரைமணி ஆனது. ஓடி வந்துபார்த்தால்… தாத்தாவைக் காணோம். எங்கே? எங்கே? தாத்தா சமையல் கட்டில் இருந்தார்.

முகத்தில் சோர்வு அப்பிக் கிடந்தது. எதையோ வறுத்துக் கொண்டிருந்தார். அப்பா போய் எட்டிப் பார்த்தார். உடைத்த முந்திரிப் பருப்பு. “யப்பா! நீ எப்ப வந்தே? இது உங்கம்மாவுக்கும் பிடிக்கும், எனக்கும் பிடிக்கும். இடிச்சுச் சாப்பிடுவோம்” என்றார் தாத்தா.

அப்பாவுக்குத் தெரியவில்லை எதைப் பாராட்டுவது? தாத்தாவின் ரசனையையா? வாழ்க்கை மீது அவருக்குள்ள பிடிப்பையா? அப்பா உரக்கச் சிரித்தார். யாருக்குத்தான் சிரிப்பு வராது? வாழ்க்கை மீது நாம் கொண்ட பிடிப்பு விசித்திரமானது!

(நிறைவடைந்தது)

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com

SCROLL FOR NEXT