வெற்றிக் கொடி

கடந்த காலத்தை எதிர்காலம் மாற்றுமா? | அணு முதல் அண்டவெளி வரை 14

என்.சுஜாதா

கதாநாயகன் ஒரு மர்ம மான அமைப்பால் தேர்ந் தெடுக்கப்படுகிறான். அறிவியலாளர் பார்பராவை ஆய்வகத்தில் அவன் சந்திக்கி றான்.

ஆய்வகத்தில் இருக்கும் சில பொருள்களைக் காட்டி, “அவை எதிர்காலத்தில் இருந்து வந்தவை!” என்கிறாள் பார்பரா. அங்கு உள்ள கான்கிரீட் சுவரில் ஏற்கெனவே துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்து ஓட்டைகள் விழுந்திருக்கின்றன.

பார்பரா ஒரு துப்பாக்கியைக் கதாநாயகனிடம் கொடுத்து, “இப் போது அந்தச் சுவரை நோக்கிச் சுடு” என்கிறாள். கதாநாயகன் துப்பாக்கியில் குறி வைக்கி றான், இன்னும் விசையை இயக்கவில்லை.

ஆனால், அடுத்த நொடியே சுவரில் இருந்த ஓட்டைகள் மறைந்து, புதைந்திருந்த தோட்டாக் கள் பறந்து வந்து, இவன் துப்பாக்கிக் குழலுக்குள் சேர்கின்றன. அதாவது எல்லாம் பின்னோக்கி நடக்கிறது. கதாநாயகன் குழம்பு கிறான். கிறிஸ்டோபர் நோலனின் அறிவியல்-புனைவுத் திரைப்படமான ‘டெனெட்’டின் ஒரு காட்சி இது.

          

பின்னோக்கிய காரணம்

ஒரு ‘காரணம்' (Cause) முதலில் நடக்கும், அதன் பிறகுதான் அதன் 'விளைவு' (Effect) ஏற்படும் என்பதுதான், பிரபஞ்சத்தின் பொது வான நடைமுறை (Causality). ஆனால், குவாண்டம் உலகமோ ‘டெனெட்’ உலகம் போலவே இந்த விதிக்குச் சவால்விடுகிறது. அதாவது, எதிர்கால நிகழ்வு, கடந்த கால நிகழ்வை, மாற்றுவதுபோலக் காட்டுகிறது. இது ‘பின்னோக்கிய-காரணம்’ (Retrocausality) எனப்படுகிறது.

தகவல் அழிப்பு

‘இரு-பிளவுப் பரிசோதனை’யில், ஃபோட்டான்கள், எலெக்ட்ரான்கள் போன்ற அணுத் துகள்களை அளவிடாதவரை, ஒரு அலையாக நகர்ந்து தலையீட்டு முறையில் (Interference-Pattern) வரிவரியாகத் திரையில் படியும்.

ஆனால், எந்தப் பாதையில் (பிளவில்) சென்றது என்பதை அளவிட முயன்றால், வாரிச் சுருட்டிக்கொண்டு துகளாகவே, ஏதாவது ஒரு பாதைக்குள் சென்று படியும். இப்படி, மாறிமாறி இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருந்த அணுத்துகள்களை, அது எந்தப் பாதையில் சென்றது என்பதை அளவிட்டபின், அந்தத் தகவலை அழித்துவிட்டால், அது துகளாகப் படியுமா அல்லது அலையாகப் படியுமா? யாங்-ஹோ கிம், அவருடைய குழுவினர், 1999இல் ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.

இரு-பிளவு சோதனை அமைப்பிலேயே, சில மாற்றங்களைச் செய்தார்கள். ஃபோட்டான் பிளவுகளுக்குள் சென்ற பிறகு, ஒரு சிறப்பு படிகத்தைக் கொண்டு, அதை இரண்டு பிணைப்புள்ள (Entangled) ஃபோட்டான்களாக உடைத்தார்கள்.

அதிலொன்று திரையை நோக்கிச் செல்லும் சிக்னல் ஃபோட்டான் (Signal Photon). மற்றொன்று, எந்தப் பாதை (பிளவு) வழியாகச் சென்றது என்ற தகவலைத் தரும் உணரியை (Detector) நோக்கிச் செல்லும் ஐட்லர் ஃபோட்டான் (Idler Photon).

காரணத்தை மாற்றும் விளைவு

இரண்டு ஃபோட்டான்களும் பிணைக்கப் பட்டிருப்பதால், ஐட்லர்-ஃபோட்டானின் பாதையை உணரி மூலம் அளந்துவிட்டால், திரையை நோக்கிச் சென்ற சிக்னல் ஃபோட்டான், துகள் போலவே செயல்பட்டு திரையில் படிந்துவிடும். அளக்காவிட்டால், அலைபோல செயல்பட்டு திரையில் படியும்.

ஆனால், ஐட்லர் 'எந்தப் பாதையின் வழியாக வந்தது' என்ற உணரியின் தகவலை அளந்து விட்டு, அதைப் பதியாமல் இவர்கள் அழித்து விட்டார்கள். இங்கேதான், வாயைப் பிளக்க வைக்கும் விஷயம் ஒன்று நடந்தது.

ஐட்லர் ஃபோட்டான், சிக்னல் போட்டானிடம் “நாம் எந்தப் பாதை வழியாக வந்தோம் என்கிற தகவலை அளந்துவிட்டு, அழித்துவிட்டார்கள். நாம் அளக்கப்படவில்லை, அதனால் நீ, அலை போலவே செயல்படு” எனச் சொல்வதற்கு முன்பாகவே, சிக்னல் ஃபோட்டான் திரையை அடைந்துவிடும்.

ஆனால், சோதனையிலோ இந்த சிக்னல் ஃபோட்டான், தகவல் எதிர்காலத்திலிருந்து வந்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், “நான், எந்தப் பாதை வழியே வந்தேன்னு யாருமே பாக்கலியே!” என்று அலை வேஷத்தைப் போட்டுக்கொண்டு, ஏற்கெனவே வரிவரியாகத் திரையில் படிந்திருந்தது.

இது, தாமதமாக வந்த தகவலுக்கு, கடந்த காலத்திற்குச் சென்று தனது முடிவை மாற்றிக்கொள்வது போன்ற (Retrocausality) தோற்றத்தை உருவாக்கியது. அதாவது, குவாண்டம் உலகத்தில் விளைவு, காரணத்தை மாற்றியது.

இதன் மூலம் ஃபோட்டான்களின், ‘பாதைத் தகவலை' அளந்தது இங்கு முக்கியமில்லை. அந்தத் தகவல் எங்கேயாவது சேமிக்கப்பட்டிருக் கிறதா, என்பதுதான் முக்கியம் என்பது தெரிந்தது.

குவாண்டம் கணினியில் தகவல்கள் கசிந்து (Decoherence), கணக்கீடுகள் துகள்களாக நிலைபெற்றுவிடுகின்றன. குவாண்டம் அழிப்பான் தத்துவத்தைப் பயன்படுத்தி அந்த ‘கசிந்த தகவலை' முறையாகக் கையாண்டால், கணினியின் குவாண்டம் வேகத்தை (Coherence) மீட்டெடுக்க முடியும்.

(தொடர்ந்து தேடுவோம்)

- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com

SCROLL FOR NEXT