வெற்றிக் கொடி

பயமில்லாமல் தேர்வுக்குத் தயாராக...

டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்

பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வின்போது அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுவது இயல்பு. சிலருக்குப் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வின் போதும் அடுத்து வரும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வின்போதும் பதற்றமும் கவலையும் ஏற்படலாம். முதலில் இது இயல்பானதுதான் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதைக் கடந்து தேர்வில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டியவை: தேர்வுக் காலம் நெருங்கும்போது தேர்வு தொடர்பான அளவு கடந்த பயம், பதற்றம் ஏற்படும்போது சில அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். படிப்பில் கவனத்தைக் குவிக்க முடியாமல், பரபரப்பாக இருப்பது (Restlessness), கவனக்குறைவு ஏற்படுவது, எதிர்காலம், தேர்வு முடிவுகள், அதிக மதிப்பெண் பெறுவது தொடர்பான அதீத பயம், விருப்பமான செயல்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது போன்றவை முக்கிய அறிகுறிகள்.

குடும்பத்தினருடனும் நண்பர்களுட னும் கலகலப்பாகப் பழகும் மாணவர் ஒதுங்கி இருப்பது, தனிமையை நாடுவது, வழக்கம்போலச் சாப்பிடா தது, பெற்றோர், நண்பர்களிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்துவது, கடுமை யாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

          

மனதில் பயம் எழும்போது உடலிலும் அறிகுறிகள் தென்படலாம். தலைவலி அல்லது தலைச் சுற்றல், கழுத்து வலி, உடல் சோர்வாக உணர்வது, எளிதில் களைப்படைதல், இதயம் படபடப்பாக இருப்பதாக உணர்தல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறுகள், கண் எரிச்சல், கை நடுக்கம் உள்ளிட்டவை உடல்ரீதியான அறிகுறிகளாக வெளிப்படலாம். இந்த அறிகுறிகளைப் பெற்றோரும் ஆசிரியரும் கவனிக்க நேர்ந்தால் உடனடியாக அந்த மாணவருக்கு உதவி செய்ய வேண்டும்.

இப்படித் தேர்வுக் காலத்தில் பதற்றம் வந்தால், ‘இந்தப் பதற்றம் எல்லாருக்கும் இருக்கக்கூடியதுதான், எனக்கு மட்டும் வரக்கூடியது அல்ல. நான் நன்றாகப் படித்து இருக்கிறேன். நன்றாகத் தேர்வு எழுதுவேன்’ என்கிற நம்பிக்கை வார்த்தைகளை மனதுக்குள் சொல்லிக் கொள்ள வேண்டுமென்பதை நினைவூட்ட வேண்டும்.

என்ன செய்யலாம்? - பதற்றமாக உணரும்போது ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்களுக்கு நேரம் ஒதுக்கி, நிதான மாக மூச்சை உள்ளிழுத்து, நிதானமாக மூச்சை வெளியேற்ற வேண்டும் அல்லது விரல்களை மடக்கி, ஒரு பந்தை அமுக்குவதுபோலச் செய்து பின்னர் மெதுவாக விரல்களை விரிக்க வேண்டும். இவ்வாறு கை விரல்களை இறுக்கமாக்கி, தளர்வடையச் செய்யும் போது பதற்றம் குறைந்து மனம் இலகுவாகும்.

உடனடியாகப் பதற்றம் குறையும். தேர்வுக் காலத்தின்போது மட்டுமல்ல, பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் போதிய அளவு உறக்கம் அவசியம். அதாவது குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் உறக்கம் அவசியம். இந்த ஒரு விஷயத்தைப் பெற்றோர் உறுதிசெய்தாலே பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைக்கலாம்.

ஆழ்ந்த உறக்கம் ஞாபக சக்திக்கு மிக அவசியம். தேர்வை நன்றாக எழுதுவதற்கு ஆழ்ந்த உறக்கம் தேவை என்பதைப் பெற்றோரும் மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்று வேளையும் ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்க்கக் கூடாது. போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதோடு வெளிர் மஞ்சளாகவோ தண்ணீர் போலவோ சிறுநீர் வெளியேறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாக்கு வறட்சியால் உதடுகள் காய்ந்து போய் இருக்கக் கூடாது. எனவே, தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

திறன்பேசி பயன்படுத்துவது, ரீல்ஸ் பார்ப்பது போன்ற விஷயங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள இருக்கலாமே தவிர, கல்வி சாராத இதர விஷயங்களால் நேரம் வீணாவதைத் தவிர்க்க வேண்டும். நாள்தோறும் 30 நிமிடங்களாவது மாணவர்கள் விளையாட வேண்டும்.

ஸ்கிப்பிங், சைக்கிளிங் போன்ற விஷயங்களைச் செய்ய பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். தேர்வு பற்றிய எதிர்மறை எண்ணங்களை மாணவர்கள் வெளிப் படுத்தினால், பெற்றோரும் ஆசிரியரும் அலட்சியம் செய்ய வேண்டாம். போதுமான உதவிகளைச் செய்து வழிகாட்டி னால் கண்டிப்பாக இதைக் கடந்து செல்ல முடியும்.

எய்சென்ஹோவர் தீர்வு: தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் முதலில் எதைப் படிக்க வேண்டும் என்பதில் குழப்பம் அடையலாம். நிறையப் படிக்க வேண்டும், ஆனால் எதை முதலில் படிக்க வேண்டும் என்கிற குழப்பம் ஏற்படும்போது முக்கியமான பாடத்தை முதலில் படிக்கத் தேர்வுசெய்ய வேண்டும்.

இந்தக் குழப்ப மனநிலையில் இருக்கும்போது ‘Eisenhower Matrix’ முறையைப் பின்பற்றலாம். அமெரிக்காவின் 34ஆவது அதிபராகப் பதவி வகித்த ட்வைட் எய்சென்ஹோவரின் பெயர் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது முக்கியமான வேலைகள், பொறுப்புகளைப் பிரித்து முடிவெடுத்ததில் கெட்டிக்காரராக இவர் இருந்ததால் இந்த முறைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல நான்கு சதுரங்களை வரைந்து கொள்ளுங்கள். மேலே உள்ள முதல் சதுரத்தில் ‘அவசரம்’ என்றும், இரண்டாம் சதுரத்தில் ‘அவசரம் அல்ல’ என்றும் எழுதி வைத்துக் கொள்ளவும். அடுத்து இடது பக்கத்தில் உள்ள மூன்றாவது சதுரத்தில் ‘முக்கியம்’ என்றும், அதற்குக் கீழுள்ள நான்காவது சதுரத்தில் ‘முக்கியம் அல்ல’ என்றும் எழுதி வைத்துக் கொள்ளவும்.

உதாரணத்துக்கு, வீட்டுப் பாடம் எழுத வேண்டும், தேர்வுக்குப் படிக்க வேண்டும், விளையாட வேண்டும், நடனப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்கிற நான்கு வேலைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வேலையையும் இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும்.

முன்பே சொன்னதுபோல முக்கியமா, முக்கியம் இல்லையா எனவும் அவசரமா அவசரம் இல்லையா என்றும் பிரிக்க வேண்டும். வீட்டுப் பாடம் படிக்க வேண்டும் என்பது முக்கியம், அவசரம் என இரண்டு நிலைகளிலும் இருக்கும்போது அந்த வேலையை முதலில் செய்ய வேண்டும்.

முக்கியம் ஆனால், அவசரம் அல்ல என இருக்கும் வேலையை இரண்டாவதாகச் செய்ய வேண்டும். அடுத்து முக்கியம் இல்லை, ஆனால் அவசரம் என்றால் மூன்றாவதாகவும், அவசரமும் அல்ல, முக்கியமும் அல்ல என்கிற வேலையைக் கடைசியாகவும் செய்ய வேண்டும்.

- addlifetoyearz@gmail.com

SCROLL FOR NEXT