எட்டாம் வகுப்பு படிக்கும் ராஜேஷின் தாய் வசதியாக மகனை வளர்க்க இரண்டு வேலைகள் செய்துவந்தார். காலையில் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு முதல் வேலைக்குச் செல்வார். மாலையில் இருந்து இரவுவரை மற்றொரு பகுதிநேர வேலையைச் செய்தார்.
நாள்தோறும் இரவு வீடு திரும்பும்போது ராஜேஷ் தூங்கிக் கொண்டிருப்பான். ஒருநாள் அவனுடைய ஆசிரியை அழைத்து, “உங்கள் பையன் வகுப்பில் யாருடனும் பேசுவதில்லை” என்றார். தாய் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
அன்று முதல் பகுதிநேர வேலையை விட்டார். தினமும் மாலையில் மகனைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றார். பள்ளியில் என்ன நடந்தது என்பதைக் கேட்டறிந்தார். ஆறு மாதங்களில் அவன் முற்றிலும் மாறிவிட்டான். இப்போது அவன் வகுப்பில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவன். மிக முக்கியமாக அவன் சிரிக்கிறான், பேசுகிறான், கனவு காண்கிறான்.
டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS) 2022இல் இந்தியாவின் 10 மாநிலங்களில் 5,000 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தியது. இதில் 67% பெற்றோர் தினசரி குழந்தைகளுடன் 30 நிமிடம்கூடத் தரமான நேரத்தைச் செலவிடுவதில்லை, 82% குழந்தைகள் பெற்றோர் தங்களைப் புரிந்துகொள்ளவில்லை எனக் குழந்தைகள் வருந்துவது ஆகியவை தெரியவந்தன.
அதுவே, வாரத்துக்குக் குறைந்தது 10 மணி நேரம் பெற்றோருடன் செலவிடும் குழந்தைகளின் கல்வி செயல்திறன் 40% அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டது.
அன்பின் பரிமாணங்கள்: பெற்றோரின் தினசரி அரவணைப்பு, முத்தம், தட்டிக் கொடுத்தல் குழந்தைகளுக்கு அத்தியாவசியம். அடுத்து, குழந்தையின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல், கோபமாக இருந்தாலும் அன்போடு நடத்துதல், தோல்வியிலும் ஆதரவளித்தல் முக்கியம். இதைவிட நேரம்தான் அன்புக்கான நாணயம்.
கைபேசி இல்லாத நேரம், இரு வழி உரையாடல் கட்டாயம். கல்விசாரா ஆதரவும் குழந்தைக்கு நிறைய தேவை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி செயல்முறையைப் பாராட் டும் பெற்றோரின் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ளும் திறனில் 50% முன்னேற்றம் காட்டுகின்றனர்.
விலையுயர்ந்த பொம்மையோ, பெரிய வீடோ, வெளிநாட்டுக் கல்வியோ உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் சிறந்த பரிசு ஆகாது. உங்கள் நேரம், உங்கள் கவனம், உங்கள் அன்பு, உங்கள் அரவணைப்புதான் அவ்வளவுக்கும் அப்பால் உயர்ந்தது.
பிரபல குழந்தைகள் எழுத்தாளர் டாக்டர். டோரத்தி நோல்ட்டின் வரிகளில், “குழந்தைகள் விமர்சனத்துடன் மட்டும் வாழ்ந்தால், குற்றம் சுமத்தக் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகள் அன்புடன் வாழ்ந்தால், அன்பு செய்யக் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்ந்தால், நம்பிக்கை கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள்” என்கிறார்.
உங்கள் குழந்தை, எதிர்காலத்தில் எத்தனை பட்டங்கள் பெற்றாலும், எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும், அவர்களை எப்போதும் வழிநடத்தும் ஒளி உங்கள் அன்பின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும்.
பெற்றோருக்கான 10 வழிமுறைகள்
1. தினசரி அரவணைப்பு: காலையும் மாலையும் குறைந்தது 20 விநாடிகள் அரவணைத்தல்
2. இரவு உரையாடல்: தூங்கச் செல்லும் முன் 15 நிமிடங்கள் தனியாகப் பேசுதல்.
3. ஒருவருக்கு ஒரு நேரம்: வாரம் ஒரு முறை ஒவ்வொரு குழந்தையுடனும் தனியாக நேரம் செலவிடுதல்.
4. காது கொடுத்துக் கேட்டல்: குறுக்கிடாமல், தீர்வு சொல்ல முயலாமல், வெறுமனே கேட்டல்.
5. பாராட்டுக் குறிப்பு: குழந்தையின் மதிய உணவு பாக்ஸில் அன்பான, பாராட்டுக்குரிய வார்த்தைகளைக் குறிப்புகளாக எழுதிவைத்து அனுப்புங்கள்.
6. குடும்ப சடங்குகள்: வார இறுதியில் இருபாலர் குழந்தைகளையும் சமையல் பணியில் ஈடுபடுத்துதல், இரவு பொழுதுபோக்க நேரம் ஒதுக்குதல்.
7. திறந்த மனப்பான்மை: குழந்தை எப்போது வேண்டுமானாலும் எதைப் பற்றியும் பேசலாம்.
8. தவறுகளை ஒப்புக்கொள்ளுதல்: நீங்கள் தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்பு கேளுங்கள்.
9. கனவுகளை ஆதரித்தல்: எவ்வளவு வித்தியாசமானதாக இருந்தாலும், குழந்தையின் ஆர்வங்களை ஊக்குவியுங்கள்
10. உங்களைக் கவனித்துக்கொள்ளுதல்: ஆரோக்கியமான, மகிழ்ச்சியான பெற்றோரால் மட்டுமே ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்க முடியும்.
- கட்டுரையாளர்: ச. ஆலன் ஜோசப், மனநல ஆலோசகர்; alanjoseph.joseph96@gmail.com