வெற்றிக் கொடி

பெற்றோரியக் கல்வி: காலத்தின் கட்டாயம்

Guest Author

தமிழ்நாடின் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 2008இல் செயல்வழி கற்றல் எனும் புதிய கற்றல்-கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. அதுவரை மொத்தமாக வகுப்பறையில் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட கற்போராக அணுக வேண்டிய தேவையை அது உருவாக்கியது.

மாணவர்களின் வேகத்துக்கு ஏற்பக் கற்றல் கற்பித்தலை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பலர் புதிய கல்வி முறையை ஏற்க மறுத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலைப்பளு

அந்தக் காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக் கான கருத்தரங்கம் ஒன்றில் கலந்துரை யாடினேன். “செயல்வழி கற்றல் முறை அமல்படுத்துவதற்கு முன் தங்களது உணவூட்ட முறை எவ்வாறு இருந்தது?” எனக் கேட்டேன். பலரும் காலையில் சாப்பிடும் சிற்றுண்டிகளின் பெயர்களைப் பட்டியலிட்டனர்.

“புதிய முறை அமல் படுத்தப்பட்ட பிறகு இதில் ஏதாவது மாறுதல் செய்தீர்களா?” எனக் கேட்டதற்குப் பலரும் இல்லை என்றனர்.

“செயல்வழி கற்றல் அறிமுகமான பிறகு உங்களது உழைப்பு கூடி உள்ளதா? ஆமாம் என்றால் அதற்கேற்றபடி உங்கள் உணவூட்டங்களையும் கூட்டிக்கொள்ள வேண்டும் அல்லவா?” என்று கேட்டேன். பலரும் ஆமோதித்தனர்.

இந்தக் கருத்தரங் கத்துக்குப் பின்னால் 11 மணிக்குப் பல்வேறு ஊட்டச்சத்து பானங்கள், தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதாகப் பகிர்ந்தனர்.

அன்று தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டின் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் பல்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்றைக்கு நிலைமை மணிக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பானம் அருந்தும் நிலைமையை எட்டியுள்ளது. பணிப்பளுவும் மின்னணு மேலாண்மை நிர்வாகமும் பாடாய்ப்படுத்துகிறது. கூகுள் ஷீட்டின் ஆதிக்கம் கோலோச்சுகிறது.

கண்டுகொள்ளாத பெற்றோர்

மாணவர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட கற்போ ராகப் பார்க்கும் சூழல் இன்று இல்லை என்பதே கசப்பான உண்மை. குழந்தைகளின் உரிமைகளை நிறைவேற்ற அதிக முனைப்புக் காட்டும் அரசுகள், பெற்றோரின் கடமைகளை உணர்த்த எந்தவிதச் செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை.

இன்றைக்குப் பள்ளிகளில் பதிவேடுகளுக்குப் பதிலாக, பல்வேறு புதுப்புது செயலிகள், ஒவ்வொரு நாளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் தரவுகளைச் சேகரித்து நிரப்புவோராக ஆசிரியர்கள் மாறி பல்லாண்டுகள் ஆகிறது. மாணவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ், ஆதார் எண் பெறுதல் தொடங்கி வங்கிக்கணக்கு தொடங்குவதுவரை பெற்றோருக்கு அறிவுறுத்தி ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது.

பெற்றோர்களில் பலரும் இதில் முனைப்புக் காட்டாத நிலையில், ஆசிரியர்களே அழைத்துச் சென்று ஆதார் எண் பெற்றுத்தரும் நிலையும் உள்ளது.

இதனிடையே மாணவர்களின் உடல்நலப் பரிசோதனைக்கான பல்வேறு செயலிகளையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கண்டறியப்படும் உடல்நலன் சார்ந்த சவால்களுக்கும் பெற்றோரைப் பின்தொடரும் பணியும் ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கலைத் திருவிழா, விநாடி-வினா போட்டிகள் போன்ற வற்றுக்கும் அழைத்துச் சென்றுவர வேண்டியுள்ளது.

இதில் எந்தப் பணியும் குறைவானது என்றோ, செய்ய முடியாது என்றோ ஆசிரியர்கள் சொல்வ தில்லை. இருந்தாலும், பெற்றோர்களே தங்களின் பொறுப்புகளை ஏற்றுச் செய்யும் காலம் வருமானால், கற்றல் - கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் கூடுதல் நேரத்தைச் செலவிட முடியும்.

அதற்கு மாறாக எப்போதோ, யாரோ கூறிய பொன்மொழியில் உள்ளதுபோல் ‘ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்’ என்கிற சொற்றொடர் மேலும் மேலும் உண்மையாகி வருமானால், ஆசிரியர்களின் நிலைமை மேலும் கவலைக்கிடமாகும்.

அதே பொன்மொழியின் இன்னொரு பாதியான ‘பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள்’ என்பது உண்மையாக வேண்டிய தேவை உள்ளது. ஆசிரியர்கள் குழந்தைகளின் குழந்தைமையைக் கொண்டாட, பெற்றோரியக் கல்வியைப் பெற்றோர்க்கு அளிக்க அரசு முன்வர வேண்டும்.

- என்.மாதவன், பள்ளித் தலைமையாசிரியர்; தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT