தகவல்களின் பெருங்கடலில் நீந்தும் இன்றைய மாணவர்கள் தம்மை வந்தடையும் தகவல்களைப் புரிந்துகொள்ள, ஆய்வுசெய்ய, சரியான முடிவுகளை எட்ட தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் அவர்களுக்கு அவசியம். அதற்கு, கற்றலுக்கான இடமாகத் திகழும் பள்ளிக்கூடம் வாசிப்புக்கான களமாக மாற வேண்டும்.
நூல்களையும் செய்தித்தாள்களையும் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் மொழியை இயல்பாக மாணவர்கள் அறியத் தொடங்கு கிறார்கள். புதிய சொற்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள். கருத்துகளை ஒப்பிட்டு ஆராயும் திறனை வளர்த்துக்கொள்கிறார்கள்.
பல்வேறு கருத்துகளை மதிக்கப் பழகுகிறார்கள். சமூக அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம் போன்ற துறைகளைப் புரிந்துகொள்கிறார்கள். தேர்வைத் தாண்டிய வாழ்க்கை முறை சார்ந்த அறிவைப் பெறுகிறார்கள்.
இன்றைய சிந்தனை
ஒரு பள்ளியில் வாசிப்பு வளர நூலகத்தில் மட்டும், அது நடைபெற்றால் போதாது. பள்ளியின் ஒவ்வொரு மூலையிலும் வாசிப்பு நடைபெற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று தமிழ், ஆங்கில நாளிதழ்களில் இருந்து முக்கியமான செய்திகள், கட்டுரைகள், தலையங்கங்கள், அறிவியல் செய்திகள், விளையாட்டு, இலக்கியம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் போன்றவற்றை மாணவர்களே தேர்ந்தெடுத்து அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும்.
அதனுடன், ‘இன்றைய புதிய சொல்’, ‘இன்றைய சிந்தனை’, ‘நான் அறிந்த புதிய தகவல்’, ‘இந்தச் செய்தி எனக்குக் கற்றுக்கொடுத்தது’ போன்ற சிறிய பகுதிகளும் இடம்பெறலாம்.
ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதனைச் சார்ந்த செய்தி களையும் கட்டுரைகளையும் சேகரிக்கலாம். எடுத்துக்காட்டாக, நீர்ப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, இந்திய அரசமைப்பு, மருத்துவம், விளையாட்டு, நூல்கள், பெண்கள் முன்னேற்றம், காலநிலை மாற்றம். இதன் மூலம் ஒரே தலைப்பைப் பல கோணங்களில் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள்.
1 நூல்: 3 நிமிடங்கள்
வாரம் இரண்டு முறை 20–30 நிமிடங்கள், ‘அமைதியான வாசிப்பு நேரம்’ ஒதுக்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் ஆசிரியரும் வாசிக்க வேண்டும். மாணவர்களும் தங்கள் விருப்ப நூல்களை வாசிக்க வேண்டும். எந்தத் தேர்வும் இருக்கக் கூடாது. வாசிப்பின் மகிழ்ச்சியே முக்கியமாகக் கருதப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக் காலை வழிபாட்டின்போது சுழற்சி முறையில் ஒரு தேசியச் செய்தி, ஒரு மாநிலச் செய்தி, ஓர் உலகச் செய்தி, ஓர் அறிவியல் தகவல் ஆகியவற்றை இரண்டு மாணவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். இது பல பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாணவரும் மாதத்துக்கு ஒரு புத்தகத்தை வாசித்து, கதையின் சுருக்கம், பிடித்த கதாபாத்திரம், நான் பெற்ற படிப்பினை என்பதாக மூன்று நிமிடங்கள் பேசலாம். ஒவ்வொரு மாணவருக்கும் சிறிய குறிப்பேடு கொடுத்து, ‘வாசிப்புப் பதிவேடு’ உருவாக்கலாம்.
அதில் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், வாசித்த தேதி, புதிய சொற்கள், பிடித்த வரி, புத்தகம் குறித்த கருத்து என்பவற்றை எழுத வேண்டும்.
வகுப்பறை நேரத்தில் பாடம் சார்ந்த கட்டுரையை வாசித்த பிறகு, அதில் உங்களை ஈர்த்தது என்ன, ஆசிரியரின் கருத்துடன் உடன்படுகிறீர்களா, வேறு பார்வை இருக்கிறதா, இதைப் பற்றி மேலும் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் முதலான கேள்விகளை எழுப்பி விவாதம் நடத்தலாம்.
வாசிப்பு விழா
ஆண்டுக்கு ஒருமுறை புத்தகக் காட்சி, எழுத்தாளர்களுடன் சந்திப்பு, வாசிப்பு மராத்தான், புத்தக மதிப்புரை, கதைகூறல், செய்தி வாசிப்பு, கவிதை வாசிப்பு, வாசிப்பு விநாடி வினா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ‘வாசிப்பு விழா’வை நடத்தலாம்.
வாசிப்புப் பழக்கம் வீட்டிலும் தொடர வேண்டும். பெற்றோர் நாள்தோறும் 20 நிமிடங்கள் குழந்தையுடன் வாசிக்க வேண்டும். மாதத்துக்கு ஒரு புத்தகம் வாங்கித் தர வேண்டும். நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கைப்பேசி நேரத்தைக் குறைத்து வாசிப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் வாசிப்புப் பண்பாடு உருவாக வேண்டுமெனில் ஆசிரியர்களே முன்மாதிரியாகத் திகழ வேண்டும். ஆசிரியர்கள், தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நூல்களை அறிமுகப்படுத்த வேண்டும். செய்திகளை வகுப்பறையில் விவாதிக்க வேண்டும். நூலகப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். பல்துறை வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.
வாழ்நாள் செயல்பாடு
தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் மாணவர்கள் தெளிவாகப் பேசுவார்கள், சிறப்பாக எழுதுவார்கள். மேம்பட்ட சொல் வளத்தைப் பெறுவார்கள். தன்னம்பிக்கையுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.
படைப்பாற்றலுடன் சிந்திப்பார்கள். சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாவார்கள். தேர்வுகளில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள்.
ஒரு பள்ளியின் உண்மையான முன்னேற்றம் அதன் தேர்ச்சி சதவீதத்தில் மட்டும் இல்லை; அதன் மாணவர்கள் எவ்வளவு வாசிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள், புதியனவற்றை அறிகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.
வாசிப்பு என்பது ஒரு பாடத்திட்டச் செயல்பாடு அல்ல; அது வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றலின் அடித்தளம். எனவே, ஒவ்வொரு பள்ளியும் ‘வாசிக்கும் பள்ளி – சிந்திக்கும் பள்ளி’ என்கிற இலக்குடன் செயல்பட்டால், மொழித்திறன், அறிவுத்திறன், குடிமை உணர்வு, சமூகப் பொறுப்பு, படைப்பாற்றல் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் தலைமுறையை உருவாக்க முடியும். இன்று ஒரு புத்தகத்தைத் திறக்கும் மாணவர், நாளை ஒரு புதிய உலகத்தைத் திறப்பார்.
- கட்டுரையாளர்: ஆசிரியர், சிறார் எழுத்தாளர்; saran.hm@gmail.com