கதாநாயகியை, உருவமில்லாத வெள்ளையான ஆவி ஒன்று பயமுறுத்துகிறது. “வெண் மேகமே! வெண் மேகமே!” என எஸ்.ஜானகி குரலில், பிண்ணனி இசையுடன் பாட்டுப்பாடி கிலியேற்றுகிறது.
இறுதியில், ஆவி கதாநாயகியின் உடலுக்குள், ஒரு காலியான வீட்டுக்குள் மனிதர்கள் குடியேறுவதுபோலப் புகுந்துவிடுகிறது. இது 1978இல் வெளிவந்த ’ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தின் கதை.
உலகம் முழுவதும் இது போன்ற திகில் திரைப்படங்களுக்குப் பஞ்ச மில்லை. அதில் வரும் ஆவிகள், கோடிக்கணக்கான செல்களால் உருவான மனித உடலை, திடமான பொருள் என்றுகூட மதிக்காமல், அநாயாசமாக ஊடுருவி அந்த உடலுக்குள் உட்கார்ந்துகொண்டு விடுகின்றன.
கடைசிக் காட்சியில், உட்கார்ந்த சுவடே தெரியாமல் வெளியேறியும் விடுகின்றன. இந்த ஆவிகளுக்குக் கதவு, சுவர், பூட்டிய அறை இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. கதவு, சுவர் வழியே நடந்து சென்று அடுத்த பக்கத்துக்குச் சட்டெனச் சென்று விடுகின்றன.
ஊடுருவும் நியூட்ரினோ
இந்த ஆவிகளைப் போலவே, நமது அண்ட வெளியிலும் ஒரு விசித்திரத் துகள் உள்ளது. அதுதான் ‘நியூட்ரினோ’ (Neutrino). அது மேற்கண்ட
ஆவி சேட்டைகளை எல்லாம் செய்வதால், அதற்கு ‘ஆவித் துகள்’ (Ghost Particle) என்கிற செல்லப்பெயரும் உண்டு.
இதை வாசிக்கும், இந்த விநாடி நூறு ட்ரில்லியன் நியூட்ரினோக்கள், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆவியைப் போல நம் உடலுக்குள் புகுந்து வெளியேறி இருக்கும். அதை நாம் உணர்வ தில்லை. அதனால் நமக்கு பாதிப்பும் இல்லை.
கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிகச்சிறிய அடிப்படைத்துகள் ‘நியூட்ரினோ’. அதற்கு எந்த மின்னூட்டமும் கிடையாது. சூரியனில் இருந்தும் விண்வெளியில் இருந்தும், எண்ணிலடங்கா நியூட்ரி னோக்கள் ஒவ்வொரு நொடியும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
நியூட்ரினோ துகள், பருப் பொருள்களுடன் அரிதாகவே வினைபுரிவதால், சுவரை ஊடுருவிச் செல்லும் ஆவிகளைப் போல், அவை பூமி, மலை என எதனுடனும் மோதாமல், அப்படியே ஊடுருவி மறுபக்கம் சென்றுவிடுகின்றன.
சரி, இந்த நியூட்ரினோக்கள் எங்கே, எப்படி உருவாகின்றன? சூரியன், நட்சத்திரங்களில் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) நிகழ்கிறது இல்லையா? இதில் பிரம்மாண்டமான அளவில் நியூட்ரினோக்கள் உருவாகி விண்வெளியில் பரவுகின்றன.
நட்சத்திரங்களில் ஏற்படும் மாபெரும் வெடிப்பின் மூலமும், கோடிக்கணக்கில் நியூட்ரி னோக்கள் வெளியேறுகின்றன. பூமியின் உட்பகுதி யில் இருக்கும், கதிரியக்கத் தனிமங்களின் சிதைவாலும், மனிதர்கள் உருவாக்கிய அணு உலைகள், துகள் முடுக்கிகள் (Particle Accelerators) மூலமும் இவை உருவாகின்றன.
‘இறந்தகால’ சூரியஒளி
இந்த நியூட்ரினோக்களின் முக்கியத்துவம் என்ன? கண்ணுக்குத் தெரியாத இந்தத் துகளை அறிவியலாளர்கள் தேடுவதேன்? ஏனென்றால் இந்த நியூட்ரினோக்கள் அண்டவியலை பற்றிய அவ்வளவு தகவல்களையும் வைத்திருக்கின்றன. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த சில நொடிகளிலேயே நியூட்ரினோக்கள் உருவாகிவிட்டன.
இவற்றை ஆராய்வதன் மூலம், பெருவெடிப்பின் ரகசியம் முதல் நட்சத்திரங்களின் இன்றைய நிலைவரை தெரிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, இந்நேரம் சூரியன் உயிரு டன் இருக்கிறதா என்பதை நியூட்ரினோக்கள்தான் தெரியப்படுத்துகின்றன.
சூரியனின் மத்தியில் நிகழும், அணுக்கரு இணைவில் வெளிப்படும் ஒளி (Photons), அங்கிருக்கும் ஹைட்ரஜன், ஹீலியம் அணுக்களுடன் மோதி, சிதறி சூரியனின் மேற்பரப்புக்கு வருவதற்கே ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு மேலாகிவிடும்.
அதன்பின் 8.20 நிமிடங்களில் நாம் பார்க்கும் ஒளி, மனித நாகரிகம் தோன்றுவதற்கு முன்பிருந்த, ‘இறந்தகால’ சூரியஒளி. அதேநேரம், சூரியனின் அணுக்கருவின் இணை வால் வெளிவரும் நியூட்ரினோக்களோ, சூரியனின் மையப் பகுதியில் இருந்து உடனே ஊடுருவி, மேற்பகுதியை அடைந்து, 8.5 நிமிடங்களில் பூமியை அடைந்துவிடுகின்றன.
அதனால் தற்போதைய சூரியனை நம்மால் அறியமுடியும். அதேபோல, ஆயுள் முடிந்த நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் சூப்பர்நோவா நிகழ்வை, அவற்றில் இருந்து வெளிப் படும் நியூட்ரினோக்கள் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.
பனிக்கட்டி ஆய்வகம்
வடதுருவத்தில் நுழைந்து தென்துருவத்தில் வெளியேறும், நியூட்ரினோக்கள் மூலமாகப் பூமியின் அடர்த்தியான மையப்பகுதியை (Neutrino-Tomography) அறிவியலாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
இதற்காக அண்டார்க்டிகாவில் பனிக்கட்டி நியூட்ரினோ ஆய்வகம் (IceCube Neutrino Observatory), ஜப்பானில் ‘சூப்பர்-கமியோகாண்டே’ (Super-Kamiokande) போன்ற ஆய்வகங்கள் உள்ளன.
எலெக்ட்ரான், மியூவான், டாவ் என நியூட்ரி னோக்கள் மூன்று வகைப்படும். நியூட்ரினோக்கள் பயணிக்கும்போது, ஒரு வகையில் இருந்து இன்னொரு வகைக்கு மாறுவதாக (Neutrino oscillation) 1998இல் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
அதற்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015இல் வழங்கப்பட்டது. இதன் மூலம் நியூட்ரினோக்களுக்கு மிகச்சிறிய அளவில் நிறை இருப்பது நிரூபணமானது.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com