

“அம்மா... ஆசிரியர் என்ன எழுதுறார்னு தெரியல...” ஐந்தாம் வகுப்பு படிக்கும் வெற்றி, தினமும் பள்ளியிலிருந்து வீடு வந்ததும் இப்படித்தான் கூறுவான். முதல் வரிசையில் அமர்ந்திருந்தாலும், கரும்பலகை யில் உள்ள எழுத்துகள் அவனுக்குத் தெளிவாகத் தெரியாது. நண்பர்கள் எல்லாரும் புத்தகத்தைச் சாதாரணமாக வாசிக்கும் போது, வெற்றி புத்தகத்தை முகத்துக்கு மிக அருகில் கொண்டுவந்து வாசிப்பான்.
பலர் அவனைப் பார்த்து, “கண்ணாடி போட்டுக்கோ, சரியாகிடும்!” என்று கூறினார்கள். ஆனால் பல பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் கூறியதோ வேறு: “வெற்றிக்கு இருப்பது கண்ணாடி அணிவதால் சரி செய்யக் கூடிய குறைபாடு இல்லை. அவனுக்கு இருப்பது தனித்துவமான குறைந்த பார்வைத்திறன் (Low Vision).”
குறைந்த பார்வைத்திறன் என்பது முழுமையான பார்வையின்மை அல்ல. கண்ணாடி, மருந்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் முழுமையாகச் சரி
செய்ய முடியாத பார்வைக் குறைபாடு இது. எஞ்சியிருக்கும் பார்வைத் திற னைச் சரியான பயிற்சி, உதவிக் கருவிகள் மூலம் திறன்மிக்க வகையில் பயன் படுத்த முடியும். பார்வை சிக்கல்கள் பல.
ஒவ்வொரு வகைக் குறைந்த பார்வைத்திறன் உடையவரும் தனித் துவமான சிக்கல்களையும் தீர்வுகளையும் உடையவர்கள். முகம் தெரிகிறது ஆனால்.. மதுரையில் வசிக்கும் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் சண்முகம், பேரனை நேருக்கு நேர் பார்த்தாலும் முகத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியாமல் தவித்தார்.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மையப் பார்வை இழப்பு (Central Vision Loss) இருப்பது தெரியவந்தது. வாசிக்க, முகங்களை அடையாளம் காண, நுணுக்கமான வேலைகளைச் செய்ய உதவுவது மையப் பார்வை.
இந்தப் பார்வை பாதிக்கப்பட்டால்:
* புத்தகம் வாசிப்பது கடினமாகும்.
* முகங்களை அடையாளம் காண் பதில் சிரமம் ஏற்படும்.
* திறன்பேசியில் செய்திகளைப் படிக்க முடியாது.
* தையல், வரைதல் போன்ற நுணுக்கமான செயல்கள் பாதிக்கப்படும்.
ஆனால், மின்னணு உருப்பெருக்கி யைப் (Electronic Magnifier) பயன் படுத்தத் தொடங்கிய பிறகு தனது விருப்பமான புத்தக வாசிப்பை சண்முகம் மீண்டும் தொடர்ந்தார்.
எதிரே பார்க்கிறேன், ஆனால்.. கல்லூரி மாணவி நிவேதா, அடிக்கடி கதவுகளில் மோதிக்கொள்வார். நடந்து செல்லும்போது அருகில் வரும் நண்பர்களை அவளால் கவனிக்க முடியாது. அவருக்குப் பக்கவாட்டுப் பார்வை இழப்பு (Peripheral Vision Loss) இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் நேருக்கு நேர் இருக்கும் பொருள் தெரியும். ஆனால், பக்கவாட் டில் உள்ள பொருள்கள் தெரியாது. இதைப் பலர் ‘சுரங்கப் பார்வை’ (Tunnel Vision) என்றும் கூறுவார்கள். இவ்வகைப் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள்:
* நடந்து செல்லும்போது பொருள்களில் மோதிக்கொள்ளலாம்.
* கூட்டமான இடங்களில் சிரமப் படலாம்.
* இரவு நேரத்தில் பாதுகாப்பாக நடப்பது கடினமாக இருக்கும். நிவேதா இன்று வெள்ளை ஊன்று கோல் பயிற்சி, திசையறிதல் திறன்களைப் பயன்படுத்தி தன்னம்பிக் கையுடன் கல்லூரிக்குச் செல்கிறார்.
எழுத்துகள் கலந்துவிட்டன
வகுப்பில் ஆசிரியர் கரும்பலகை யில் எழுதுவதைப் பார்க்கும்போது எழுத்துகள் மங்கலாகவும் ஒன்றோடு மற்றொன்று கலந்ததுபோலும் முரளிக்குத் தெரிந்தன. கண் பரிசோதனையில் அவனுக்கு மங்கலான பார்வை (Blurred Vision) இருப்பது கண்டறியப் பட்டது.
எதைப் பார்த்தாலும் பனி படர்ந்த கண்ணாடியின் வழியே பார்ப்பது போல இருக்கும். சரியான கண்ணாடி, குறைந்த பார்வைத்திறனுக்கான உதவிக் கருவிகளைப் பயன்படுத்திய பிறகு, மீண்டும் தன்னம்பிக்கையுடன் அவன் படிக்கத் தொடங்கினான். குறைந்த பார்வைத்திறன் என்பது ஒரே மாதிரியான நிலை அல்ல.
அல்பினிசம் (Albinism): சூரிய ஒளி, அதிக வெளிச்சத்தில் கண்கள் கூசும். கரும்பலகையைப் பார்ப்பதில் சிரமம் இருக்கும்.
ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா (Retinitis Pigmentosa) : படிப்படியாகப் பக்கவாட்டுப் பார்வை குறையும். இரவு நேரப் பார்வையும் பாதிக்கப்படும்.
கிளாகோமா (Glaucoma): பார்வை நரம்பு பாதிக்கப்படுவதால் பக்கவாட்டுப் பார்வை இழக்கப்படும்.
மேகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration): மையப் பார்வை மங்கலாகும் அல்லது மறைந்துபோகும்.
நீரிழிவுக் கண்நோய் (Diabetic Retinopathy) : மங்கலான பார்வை, கரும்புள்ளிகள், வாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
கல்வியில் ஏற்படும் சவால்கள்
குறைந்த பார்வைத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அறிவுத்திறனில் குறை ஒன்றுமில்லை. அதேநேரம், அவர்கள் கற்றுக்கொள்ளும் விதம் வேறுபட்டதாக இருக்கலாம். அவர்களுக்கு:
* வாசிக்கப் பெரிய எழுத் துக்கள் தேவைப்படலாம்.
* அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சம் தேவைப்படலாம்.
* கரும்பலகையைப் பார்க்கஅருகில் உட்கார வேண்டியிருக்கலாம்.
* உருப்பெருக்கிக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். சரியான ஆதரவு வழங்கப்பட்டால், மற்ற மாணவர்களைப் போலவே அவர்களாலும் கல்வியில் சிறந்து விளங்க முடியும்.
புதிய கதவுகள்
குறைந்த பார்வை கொண்ட ஒருவருக்குச் சக்திவாய்ந்த கற்றல் கருவி யாக இன்றைய சூழலில் இருப்பது திறன்பேசி. அதில் உள்ள:
* எழுத்தைப் பெரிதாக்கும் வசதி
* குரல் வழி வாசிப்பு
* மின்னணு உருப்பெருக்கிகள்
* பெரிய எழுத்துப் புத்தகங்கள்
* செயற்கை நுண்ணறிவு அடிப் படையிலான வாசிப்புச் செயலிகள் இவை அனைத்தும் அவர்களின் சுயநிறைவை அதிகரிக்கின்றன.
குறைந்த பார்வைத்திறனுடன் கல்வி, சமூகநீதி, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கி வருபவர் சிதம்பரம். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் இவர். சிறு வயதிலிருந்தே குறைந்த பார்வைத்திற னுடன் வாழ்ந்த அவர், பல்வேறு சவால்களைத் தாண்டி முனைவர் பட்டம் பெற்றார்.
பார்வைக் குறைபாடு இருந்தபோதிலும், திரை வாசிப்பு மென்பொருள்கள், உதவித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வி, ஆராய்ச்சியில் முன்னேறி யுள்ளார். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை விரிவு படுத்துவதில் முக்கியப் பங்குவகிக்கும் அவர், புதுச்சேரி
பல்கலை HEPSN (Higher Edu cation for Persons with Special Needs) திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, மாற்றுத் திறனாளி மாணவர்களின் சேர்க்கை, ஆதரவு சேவைகளை மேம்படுத்தியுள்ளார். அவர் வாழ்வின் வழி நாம் அறிய முடிவது, குறைந்த பார்வைத்திறன் கொண்டவர்களின் திறமைக்கு எல்லை அல்ல.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com