வெற்றிக் கொடி

நான் அல்ல, நீ! | செப்., 24: நாட்டு நலப்பணித் திட்ட நாள்

Guest Author

இந்தியாவில் கல்வியைச் சமூக சேவையுடன் இணைக்கும் எண்ணம் நீண்டகாலமாக இருந்துவந்தது. அதன் அடிப் படையில் 1969 செப்டம்பர் 24இல் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) தொடங்கப்பட்டது.

மாணவர்களின் அறிவு, ஆற்றல், நேரம் ஆகியவற்றை நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக நலனுக் கும் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். தொடக்கத்தில் சில கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விரிவுபடுத்தப்பட்டது.

மாணவர்களின் சமூக விழிப்புணர்வையும் தலைமைப் பண்பையும் வளர்க்கும் முக்கிய மாணவர் இயக்கமாக என்.எஸ்.எஸ். தற்போது திகழ்கிறது.

‘நான் அல்ல, நீ’ என்பதே இதன் தத்துவம். தனிப்பட்ட நலனை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், பிறரின் நலனையும் எண்ண வேண்டும் என்பதே இதன் பொருள்.

முதல் பொறுப்பு

நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் வலியுறுத்தப்படும் முக்கியமான கருத்துகளில் ஒன்று தூய்மை. ‘என் வீடு மட்டும் தூய்மையாக இருந்தால் போதும்’ என்கிற எண்ணத்தை மாற்றி ‘என் தெரு, என் பள்ளி, என் கிராமம், என் நகரம் தூய்மையாக இருக்க வேண்டும்’ என்னும் எண்ணம் விதைக்கப் படுகிறது.

குப்பையை முறையாகப் பிரித்தல், ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், பொது இடங் களைச் சுத்தமாக வைத்தல் போன்ற பழக்கங்களை மாணவர்கள் முதலில் தங்களிடம் ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் மற்றவர் களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

காடுகள் அழிக்கப்படுதல், நீர்நிலைகள் மாசுபடுதல், ஞெகிழிக் கழிவு அதிகரித்தல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மனித வாழ்க்கையை இன்று நேரடியாகப் பாதிக்கின்றன.

இதனை உணர்த்தும் வகையில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மரக் கன்றுகள் நடுதல், நீர்நிலைகளைப் பாது காத்தல், ஞெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஒரு மாணவர் நடும் ஒரு மரக்கன்று, நாளைய தலைமுறைக்கு நிழலாகவும் உயிர்க்காற்றாகவும் மாறுகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல, அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய பொறுப்பு.

கிராமப்புற வளர்ச்சி

நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப் பான அம்சங்களில் ஒன்று கிராமப்புற மக்களுடன் மாணவர்களை நேரடியாக இணைப்பதாகும். இதன் மூலம் புத்தகத்தில் படித்த வறுமை, சமத்துவ மின்மை, சுகாதாரம் போன்ற சொற்க ளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான வாழ்க்கையை அவர்கள் நேரடி யாகக் காண்கிறார்கள். அந்த அனுபவமே அவர்களை நல்ல குடிநபர்களாக உருவாக்குகிறது.

ஆளுமை வளர்ச்சியில்...

என்.எஸ்.எஸ். செயல்பாடுகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர்களிடம் தலைமைத் துவம், குழு மனப்பான்மை, நேர மேலாண்மை, முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், பொறுமை, ஒழுக்கம், தன் னம்பிக்கை போன்ற பல்வேறு பண்புகள் வளர் கின்றன.

ஒரு மாணவர் நேரடியாகச் சமூகத்துடன் தொடர்புகொள்ளும்போது, அவரது உலகைப் பார்க்கும் பார்வையும் விரிவடை கிறது.

பேரிடர் காலத்தில்...

வெள்ளம், புயல், வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சூழல்களில், ‘யார் உதவுவார்கள்?’ எனக்காத்திருப்பதைவிட, ‘என்னால் பிறருக்கு எப்படி உதவ முடியும்?’ எனக் கேட்பதே உண்மையான நாட்டு நலப்பணி மனப்பான்மை.

நிவா ரணப் பொருள்களைச் சேகரித்தல், உணவு வழங்குதல், மக்களுக்குத் தேவையான தகவல்களைப் பரப்புதல், தூய்மைப் பணியில் பங்கேற்பு போன்றவை மூலம் மாணவர்கள் பேரிடரில் இருந்து மக்களை மீட்க உதவ முடியும்.

மாற்றத்தின் தூதர்கள்

இளையோரால் தங்களது குடும்பத்திலும் நண்பர்கள் வட்டத்திலும் சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடியும். ஒரு என்.எஸ்.எஸ். மாணவர் ஞெகிழிப் பயன் பாட்டைக் குறைக்கச் சொன்னால், அது ஒரு குடும்பத்தையே மாற்றக்கூடும். ஒரு மாணவர் மரக்கன்று நடுவதன் அவசி யத்தை எடுத்துரைத்தால், பலர் மரக்கன்றுகளை நடத் தொடங்கலாம்.

ஒருவர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி னால், ஒரு குழந்தையின் வாழ்க்கையே மாறக்கூடும். எனவே சமூக மாற்றம் பெரிய மேடைகளில் மட்டுமே தொடங்குவதில்லை, அது ஒரு மாணவரின் சிறிய செயலிலிருந்தும் தொடங் கலாம்.

சிறப்பு நாளில்...

நாட்டு நலப்பணித் திட்ட நாள், ‘நான் சமூகத்தின் ஒரு பகுதி, சமூகத்தின் நலன் எனது நலன்’ எனும் உணர்வை ஒவ்வொரு மாணவரின் மனதிலும் விதைக்கும் நாள். இந்நாளில் விழா நடத்தி உரையாற்றுவதோடு, கடமை முடிந்துவிடக் கூடாது.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அந்த நாளை ஒரு சமூகச் செயல்பாட்டின் தொடக்க நாளாகக் கருத வேண்டும். ஒரு மாணவர் - ஒரு மரம்; ஒரு மாணவர் - ஒரு சமூக விழிப்புணர்வு; ஒரு மாணவர் - ஒரு நல்ல மாற்றம்.

இது போன்ற செயல்திட்டங்களை உருவாக் கலாம். அதிலும் முக்கியமாகச் சேவை என்பது ஒளிப்படம் எடுப்பதற்கான நிகழ்ச்சி அல்ல. மற்றவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டை வழிநடத்தப் போகிறார்கள். அறிவும் திறமையும் கொண்ட இளைஞர்கள் சமூகப் பொறுப்புடன் வளரும்போது மட்டுமே நாடு உண்மையான முன்னேற்றத்தை அடையும், தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவை மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கான அளவுகோல்கள் அல்ல.

மக்கள் ஒருவருக்கு இன்னொருவர் உதவும் பண்பு, சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம் ஆகியவையும் நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிக்கின்றன. உயர்ந்த பண்புகளை இளைஞர்களிடம் வளர்க்கும் பணியில் என்.எஸ்.எஸ்., முக்கியப் பங்காற்றுகிறது.

நாளின் முக்கியத்துவம்

நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர் களின் ஆற்றலைச் சரியான பாதையில் பயன் படுத்தினால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் நாட்டு நலப்பணித் திட்ட நாளான செப்டம்பர் 24இல் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை:

* பள்ளி, பொது இடங்களைத் தூய்மைப் படுத்துதல்.

* மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

* நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

* போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

* சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடம் எடுத்துரைத்தல்.

* கல்வியின் அவசியம்; பெண்கள், குழந்தை களின் பாதுகாப்பு; உடல்நலம், சுகாதாரம் முதலானவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

* பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளில் உதவுவது.

* ரத்ததானம், மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்தல்.

* பின்தங்கிய மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.

இத்தகைய பணிகள் மாணவர்களிடம் இரக்க

உணர்வையும் பொறுப்புணர்வையும் வளர்க் கின்றன.

- கட்டுரையாளர்: பா.நூருல்லாஹ், ஆசிரியர், முன்னாள் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர், அல்அமீன் மேல்நிலைப் பள்ளி, மதுரை; noorrullah85@gmail.com

SCROLL FOR NEXT