

காலையில் பள்ளி இடைவேளை முடிந்து வாசலில் நின்று மாணவர்களைப் பள்ளிக்குள் அனுப்பிக் கொண்டிருந்தேன். சிப்ஸ் பாக்கெட்டோடு வருபவர்கள், மஞ்சள் முறுக்கை அதக்கிக்கொண்டு வருபவர்கள், முட்டை ஐஸை முழுங்கிக்கொண்டு வருபவர்கள், பருப்பு வடையை பிட்டுத் தின்று வருபவர்கள்... என்று எல்லாரையும் உள்ளே அனுப்பிவிட்டு, திரும்ப யத்தனித்தவனை, ‘ஐயா’ என்கிற கரகரத்த குரலொன்று தடுத்து நிறுத்தியது.
சொல்லுங்க என்றேன். டவுசர், கிழிந்த பனியன், கறைப் பற்களுமாக நின்ற ஒரு நபர் இரும்புக் கதவைப் பற்றியவாறு ‘ஐயா... எங்க பவுனப் பாக்கணும்... பவுனுங்கய்யா’ என்றவர், ‘ஐயோ... நான் பாருங்க... பவுனுண்டு உங்ககிட்ட... கலை-ங்கய்யா... கலைச்செல்விங்கய்யா... எட்டாப்பு படிக்குது தங்கப்புள்ள’ என்றார். அவர் டாரஸ் லாரி ஓட்டிவந்திருந்து வெளியே நிறுத்தியிருந்தார்.
‘பள்ளிக்கூட நேரத்துல எதுக்குப் பார்க்கணும், நீங்க யாரு?’ என்று தலைமை ஆசிரியராகத் தோரணை காட்டினேன். ‘சார்... எம் புள்ளையப் பாத்து மாசம் ஒண்ணாகுது.
இந்தா இன்னிக்குத்தான் வந்தேன். ஓனரு இன்னோரு டிரிப்புக்கு வடக்கப் போகச் சொல்லீட்டாரு. இன்னி எத்தனை நாளோ? அதான் எம் மக பவுன... ஐயோ... கலையப் பாத்துப்பிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்.’
நான் இன்னொரு பையனை அழைத்து, ‘எட்டாப்புல கலைச்செல்வியக் கூட்டியாப்பா’ என்றேன். ‘உள்ள வாங்கண்ணே’ என்றேன். ‘இல்லைங்க சார்... டவுசர் போட்ருக்கேன்... பவுனு இப்பிடி வரக் கூடாதுன்னு சொல்லீருக்கு. கேக்கலேண்டு வைங்க... பொல்லாக் கோவிச்சுக்கும். நான் வெளியவே நிக்கிறேன்யா’ என்றார்.
தூரத்தில் கலைச்செல்வி வந்தார். லாரியைப் பார்த்ததும் புது ஆலமரத்தின் சின்ன தூருக்குள் தன்னை மறைத்துக்கொண்டார். ‘பவுனு... என்னப் பெத்த ஆத்தா... அப்பா வந்திருக்கண்டா சாமி...’ என்றார் அவர்.
‘ஏன்பா வந்த... போப்பா’ என்பதுபோல் சைகை காட்டினார், கலைச்செல்வி. ‘வடக்க போறேன், தாயி... உன்னைப் பாத்துட்டுப் போகத்தாண்டா வந்தேன்... என்னைப் பெத்த ஆயீ...’ என்றார்.
மெல்ல தூரிலிருந்து வெளிப்பட்டு, தயங்கித் தயங்கி வந்து சேர்ந்த கலைச்செல்வி பள்ளி இரும்புக் கதவுக்கு அந்தப் புறம் தந்தை டவுசரோடு நிற்பதைப் பார்த்ததும் தன் விரல்களால் தலையில் தட்டிக்கொண்டார். ‘ஐயோ... அப்பா...’ என்றார். ‘நான் சொல்லலை சார்... பவுனு கோச்சுக்கும்ன்னு... கோவம் பொசுக்குண்டு மூக்கு மேல வரும்ங்க’ என்றார்.
‘ஆத்தா... அவசரமா போறேன்த்தா... மாத்துத் துணி போடுறதுக்கு நேரமில்லத்தா... காலைல சாப்டியா சாமி?’ என்றார். பதில் சொல்வதற்குள் முட்டைக்கோசு என்னும் இனிப்பு உருண்டையை நீட்டினார், இரும்புக் கம்பிகளின் வழியாக.
‘நீ சாப்டியாப்பா?’ என்று கேட்ட கலைச்செல்வி, அப்பா பதில் சொல்வதற்குள் அந்த இனிப்பு உருண்டையை இரண்டு துண்டுகளாக்கி ஒரு துண்டை அவருக்கு ஊட்டும் முகமாக நீட்டினார். குனிந்து வாயில் வாங்கிக் கொண்ட அப்பாவின் கண்களில் கண்ணீர்.
‘நான் சாப்டுக்குறேன் பவுனு... நீ போய் படித்தா... நல்லாப் படிக்கணும்த்தா.. . படிச்சுப்புடணும்த்தா...’ என்று தன் அழுக்குத் துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டார்.
டாடா காண்பித்துவிட்டு நான்கைந்து எட்டு வைத்திருந்த கலைச்செல்வி ஓடிவந்து சொன்னார், ‘அப்பா... மெதுவா வண்டி ஓட்டுப்பா’. ‘சரிடா சாமி... சரிடா சாமி...’ என் பக்கம் திரும்பிய அவர், ‘சார்... என் பவுனப் பத்திரமா பாத்துக்கங்க சார்... படிக்க வச்சுப்புடுங்க.’
வாசலில் நின்றிருந்த மஞ்சள் சரக்கொன்றை மரம் ஒரு கொத்துப் பூவை ஆசீர்வாதமாக அந்த இருக்கும் உதிர்க்க, அதில் ஒன்றிரண்டு பூக்கள் என் மீதும் விழுந்தன. சமயங்களில் சாட்சியாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை.
கட்டுரையாளர்: சுரேஷ் காத்தான், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கோசுகுறிச்சி - நத்தம், திண்டுக்கல்; kasampattysuresh@gmail.com