தமிழ்ப்பாடத்தை நடத்த ஆறாம் வகுப்புக்குள் நுழைந்தபோது மாணவர்கள் ஆவலாக இருந்தனர். பாடத்தின் தலைப்பு: கவிதைப் பேழை - 'ஏதிலிக்குருவிகள்'. பாடலை இயற்றியவர் - எழுத்தாளர் அழகிய பெரியவன்.
தான் வாழ்ந்த ஊரின் இளமைக் கால நினைவுகளில் பொதிந்திருந்த இயற்கையின் பேரழகைத் தனக்கே உரிய நயத்தோடு எழுத் தாளர் வர்ணித்துப் பாடியிருந்தார். பாடலின் வரிகளில் மாணவர்கள் ஒன்றிப்போனார்கள்.
ஓர் உரையாடல்
பாடத்தை நடத்தி முடித்துவிட்டு, “இப்பநீங்க இந்தப் பாடலை எழுதிய ஆசிரியரோடு உரையாடப் போறீங்க” என்று திறன்பேசியை எடுத்தேன்.
நலம் விசாரித்துவிட்டு, “ஆறாம் வகுப்பில் தமிழ்ப் பாடம் நடத்திக் கொண்டிருக் கிறேன்...” என்று சொல்லி முடிப்பதற்குள், “ஆறாம் வகுப்புல நான் எழுதுன கவிதை ஒண்ணு பாடமா இருக்கே” என்றார். “ஏதிலிக் குருவிகள்’தான் நடத்திக்கிட்டிருக்கேன், உங்ககிட்ட பேசணும்னு எங்க மாணவர்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க...” என்றேன்.
“உங்க கவிதை சிறப்பா இருந்துச்சு... நல்லா எழுதி இருக்கீங்க”. “அப்படியா ரொம்ப நல்லது. நீங்க எல்லாரும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்.. நாம இந்தப் பூமியில வாழுற வரைக்கும் இந்தப் பூமிக்குப் பயனுள்ள வகையில ஏதாவது செய்யணும்.
உங்களுடைய பிறந்த நாள், நண்பர்களின் பிறந்தநாள், வீட்டுல காது குத்து, திருமண நிகழ்ச்சி நடக்கும்போது மரக் கன்று வாங்கி நடுறத பழக்கமா வச்சுக்கணும். நீங்க வச்ச மரம் பெருசா வளரவளர அதைப் பார்க்க உங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு மாணவர்களுக்கு விடை கொடுத்தார் அழகிய பெரியவன்.
அந்தத் தருணத்தில் மாணவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. உணவு இடைவேளையின்போது, “எங்க தமிழ்ப் புத்தகத்துல பாடல் எழுதுன கவிஞர்கிட்டயே பேசுனோம் தெரியுமா..” என்று மற்ற மாணவர்களிடம், நடைபெற்று முடிந்த உரை யாடலைப் பகிர்ந் தனர். தகவல் பள்ளி முழுவதும் பரவியது. ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்கள், “எங்களையும் அப்படிப் பேச வையுங்க சார்” என்றனர்.
அழகிய பெரியவன்
தமிழ் மன்றம்
ஏழாம் வகுப்பு கவிதைப் பேழையில் கவிஞர் சுரதா எழுதிய ‘காடு’, ராஜமார்த்தாண்டன் எழுதிய ‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ ஆகிய பாடல்கள் இருந்தன. எட்டாம் வகுப்பு கவிதைப் பேழையில் கவிஞர் சந்தக்கவிமணி தமிழழகனார் எழுதிய ‘ஆழிக்கு இணை’ கவிதை இடம்பெற்றிருந்தது.
இந்தப் பாடல்களை நடத்தும்போது, “இந்தக் கவிஞர்களிடம் பேசலாமா சார்?” என்று மாண வர்கள் கேட்டனர்.
இவற்றை இயற்றிய கவிஞர்கள் காலமாகி ஆண்டுகள் பல கடந்துவிட்டன என்பது மாண வர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “வாழும் கவிஞர்களின் பாடத்தை நடத்தும் போது அவசியம் பேச வைக்கிறேன்” என மாணவர்களிடம் உறுதியளித்தேன்.
மறைந்த கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் காலத்தால் அழியாத செல்வங்கள் என்பதில் ஐயமில்லை. அதேநேரம், வாழும் எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகள் நம் பாடப்புத்தகங்களில் அதிகம் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது.
ஏனெனில் வாழும் படைப்பாளிகள் குறித்த விவரிப்பு பாடத்தின் மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுவதோடு வகுப்பறையையும் இனிதாக்குகிறது. மாணவர்களுக்கும் பாடத்துக்குமான நெருக்கத்தை அதிகரிக்கிறது.
வகுப்பறையில் ஒரு பாடத்தைக் கற்பிக்கும் போது, அதன் படைப்பாளி எந்தச் சூழலில் எழுதினார் என்கிற தகவலையும் அந்தப் பாடத்தை ஒட்டிய கூடுதல் செய்தியையும் காணொளி வடிவில் தயார்செய்து மாணவர்களுக்குத் திரையிடலாம்.
தேவைப்பட்டால் ‘தமிழ் மன்றம்' போன்ற பள்ளிசார் அமைப்பு களின் வாயிலாகப் படைப்பாளிகளைப் பள்ளிகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து, மாணவர்களிடம் நேரடியாக அறிமுகப்படுத்தலாம்.
இது பாடப்புத்தகத்தைக் கடந்து தமிழ் இலக்கியத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். மேலும் தாமும் இதுபோன்ற படைப்புகளை எழுத வேண்டும் எனும் எண்ணம் துளிர்க்கும். இது வாழும் கவிஞர்களை மேலும் ஊக்குவிப்பதாகவும் கொண்டாடுவதாகவும் அமையும்.
- தங்க.செங்கதிர், ஆசிரியர், அரசினர் நடுநிலைப்பள்ளி, வெங்கடசமுத்திரம், தஞ்சாவூர், 'மானுடத் தெறிப்புகள்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; மின்னஞ்சல்: senkathirwriter@gmail.com