வெற்றிக் கொடி

ஆதிக்கத்தால் அழிந்த மொழிகள்

Guest Author

உலகளவில் தற்சமயம் 7,500 மொழிகள் பயன் பாட்டில் உள்ளன. ஆனால், பொ.ஆ.மு. (கி.மு.) 1 முதல் பொ.ஆ.பி. (கி.பி.) 1 வரையிலான காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மொழி கள் மனிதர்களால் பேசப்பட்டு வந்தது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

கணித மாதிரிகளையும் மானுடவியல் ஆய்வு முறைகளையும் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

12,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹோலோசீன் காலக் கட்டத்தை ஆராய்ந்த ஆய்வாளர்கள், பழங்காலப் பேரரசுகளின் விரிவாக்கம், ஐரோப்பியக் காலனித் துவம் போன்ற காரணங்களால் பல மொழிகள் அழிந்துவிட்டதாகக் கண்டறிந்துள்ளனர்.

இதற்கும் அப்பால் வரலாற்றுரீதியாக, பண்டைக் காலத்தில் மனிதர்கள் 30,000 முதல் 75,000-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடோடி வேட்டைச் சமூகம், சிறிய குழுக்களின் பரவலான வாழ்க்கை முறை இதற்குக் காரணமாக இருந்தது. எனினும், காலனித்துவ சக்திகளின் மொழிக் கொள்கைகள், மக்கள்தொகை மாற்றங்களால் பல மொழிகள் அழிந்துவிட்டன.

தற்போது புழக்கத்தில் உள்ள மொழிகளில் பாதியளவு அழியும் நிலையில் உள்ளதாகவும், உலகின் 90 சதவீத மக்கள் 10 சதவீத மொழிகளை மட்டுமே பேசுவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மொழி என்பது தொடர்புக் கருவி மட்டுமல்ல; அது சமூகங்களின் வரலாறு, அறிவு, நினைவுகளைத் தாங்கி நிற்கும் பெட்டகம்.

SCROLL FOR NEXT