வாசிலி பெலோகுரோவ், அமினா ஹெல்மி, ரோட்ரிகோ இபாடா
வானியற்பியல், நானோ அறிவியல், நரம்பியல் ஆகிய துறைகளில் மாபெரும் சாதனைகள் படைக்கும் அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது காவ்லி பரிசு. வானியற்பியலின் நோபல் பரிசு என இது அழைக்கப்படுகிறது.
நார்வே அறிவியல், எழுத்துக் கழகம்; காவ்லி அறக்கட்டளை ஆகிய இரண்டு அமைப்புகளால் கூட்டாக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் சாதனையாளர்களுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை, தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்தப் பரிசு நடப்பாண்டில் வானியற்பியல் பிரிவில் மூன்று அறிவியலாளர்களுக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பால்வெளி மண்டலமானது சிறிய நட்சத்திரத் திரள்களுடன் மோதி அவற்றைத் தன்னுள் ஈர்த்து படிப்படியாகப் பெரிய பால்வெளியாக வளர்ந்துள்ளது என்பதை நட்சத்திரங்களின் நகர்வுகள், அவற்றின் புதைபடிவச் சான்றுகள் மூலம் நிரூபிக்கும் புதிய ஆராய்ச்சியை வாசிலி பெலோகுரோவ், அமினா ஹெல்மி, ரோட்ரிகோ இபாடா ஆகியோர் மேற்கொண்டனர்.
பால்வெளி மண்டலம் எவ்வாறு உருவானது என்பதைத் துல்லியமாகப் பதிவுசெய்த ஆராய்ச்சி இது. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிவியலாளர் வாசிலி பெலோகுரோவ், நெதர்லாந்து குரோனிங்கன் பல்கலைக்கழக அறிவியலாளர் அமினா ஹெல்மி, பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழக அறிவியலாளர் ரோட்ரிகோ இபாடா ஆகிய மூவரும் இம்மாத இறுதியில் காவ்லி பரிசால் கௌரவிக்கப் படுகிறார்கள்.