வெற்றிக் கொடி

வேறுபட்ட வளர்ச்சி நிலை | நட்சத்திரக் குழந்தைகள் 24

ரேவதி

பள்ளியில் மதிய உணவு நேரம். மாணவர்கள் அனைவரும் சத்தமிட்டுச் சிரித்தபடி உணவருந்திக் கொண்டிருந்தனர். திடீரென, 8ஆம் வகுப்பு மாணவன் சுரேஷ் தனது தட்டிலிருந்த உணவைப் பார்த்து முகம் சுளித்தான். அடுத்த நொடி, தட்டை மேசையில் தள்ளிவிட்டு உரக்கக் கத்தினான்; பின்னர் தரையில் அமர்ந்து அழத் தொடங்கினான்.

ஆசிரியர் அவனை அமைதிப்படுத்த முயன்றும், அவன் சமாதானம் அடையவில்லை. சுற்றியிருந்த அனைவரும் அவனுடைய நடத்தையை விநோதமாகப் பார்த்தனர். சுரேஷ் வேண்டுமென்றே அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.

அவனுடைய கத்துதல், அழுகை, பிடிவாதம் ஆகியவை ஒழுக்கக்குறைவின் அடையா ளங்களும் அல்ல; மாறாக, தனது தேவையையும் உணர்வுகளையும் வெளிப் படுத்தும் ஒரு வழியாகவே அது இருந்தது. அவனுக்கு அறிவுத்திறன் குறைபாடு உண்டு.

அறிவுத்திறன் குறைபாடு

குழந்தைப் பருவத்தில் தோன்றும் ஒரு வளர்ச்சிசார் நிலை, அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability). இதனால் நுண்ணறிவுச் செயல்பாடு (Intellectual Functioning), அன்றாட வாழ்க்கைத் திறன்கள் (Adaptive Behaviour) வயதுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்திருக்காது.

கற்றல், சிந்தனை, நினைவாற்றல், மொழித் திறன், சமூக உறவுகள், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களில் இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் சிரமப்படு வார்கள். இருப்பினும் சரியான கல்வி, பயிற்சி, ஆதரவு கிடைத்தால் தங்களது திறன்களை மேம்படுத்தி சுயநிறைவு வாழ்க்கையை அவர்கள் வாழ முடியும்.

பொதுப் பண்புகள்

அறிவுத்திறன் குறைபாடு கொண்ட நபர்கள் சில பொதுவான பண்புகளைக் கொண்டிருக்கலாம்:

* புதிய தகவல்களைக் கற்றுக்கொள் வதில் தாமதம்

* மங்கிய நினைவாற்றல், கவனக் குறைவு

* மொழி, தொடர்புத்திறன்களில் சிரமம்

* காரண–விளைவுத் தொடர்புகளைப் புரிந்துகொள்வதில் சிரமம்

* சுய பராமரிப்பு திறன்களில் கூடுதல் உதவி தேவைப்படுதல்

விரும்பத்தகாத நடத்தை

அறிவுத்திறன் குறைபாடுடைய சிறார்,‘விரும்பத்தகாத நடத்தைகளை’ சமூகத்தில் சில நேரம் வெளிப்படுத்தலாம். ஆனால், இவை பெரும்பாலும் அவர்க ளின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவ மெனப் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாகக் காணப்படும் நடத்தைகள்:

* திடீரென கோபப்படுதல் அல்லது அழுதல்

* பிடிவாதமாக ஒரே கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துதல்

* சமூக விதிமுறைகளைப் பின்பற்று வதில் சிரமம்

* பொருத்தமற்ற நேரத்தில் சிரித்தல் அல்லது பேசுதல்

* பொருள்களை எறிதல் அல்லது உடைத்தல்

* ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்தல்

* பிறரின் தனிப்பட்ட எல்லைகளைப் புரிந்துகொள்ளாமை

* புதிய சூழலுக்கு ஏற்ப மாறுவதில் சிரமம்

இந்த விரும்பத்தகாத நடத்தை களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்:

* தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமை (communication difficul ties)

* விரக்தி, தோல்வி அனுபவங்கள்

* சமூகப் புரிதல் குறைவு

* அதிகமான அல்லது குறைவான எதிர்பார்ப்புகள்

* கவலை, பாதுகாப்பின்மை உணர்வு

* கற்றல் சிரமங்களால் ஏற்படும் மன அழுத்தம்

கல்வி/பயிற்சி

அறிவுத்திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளின் நடத்தையை மாற்று வதற்குத் தண்டனை அல்ல, சரியான கல்வி அணுகுமுறைகளே தேவை:

* எளிய மொழியில் கற்பித்தல்

* செயல்வழிக் கற்றல்

* மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்தல்

* நேர்மறை ஊக்குவிப்பு

* தினசரி ஒழுங்கை அமைத்தல்

* தனிப்பட்ட கல்வித் திட்டம் தயாரித்தல்

இந்தக் குழந்தைகளின் முழுமை யான வளர்ச்சிக்கு பல்வேறு சேவைகள் அவசியம்:

* தொடக்கக் கால தலையீடு (Early Intervention)

* பேச்சு, மொழி சிகிச்சை

* தொழில்வழிச் சிகிச்சை (Occupational Therapy)

* உளவியல் ஆலோசனை

* சிறப்புக் கல்வி

* தொழிற்பயிற்சி, திறன் மேம்பாடு

* குடும்ப ஆலோசனை, பயிற்சி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தனது கிராமத்தில் கடுமையான சமூக அவமதிப்பை எதிர்கொண்ட போதிலும், தீப்தி ஜீவன்ஜி தனது அறிவுசார் சவால்களைக் கடந்து, பாராலிம்பிக் போட்டி களில் 400 மீட்டர் T20 பிரிவில் வெண் கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

இதன் மூலம், இந்தியாவில் அறிவுத்திறன் குறைபாடு கொண்ட விளையாட்டு வீரர்களில் இந்தச் சாதனையை அடைந்த முதல் நபராக அவர் திகழ்கிறார். ஆகவே, அறிவுத்திறன் குறைபாடு என்பது வேறுபட்ட வளர்ச்சி நிலை.

அவர் களின் விரும்பத்தகாத நடத்தைகளை ஒழுக்கக்குறைவாகக் கருதாமல், அதன் பின்னால் உள்ள தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும்.சரியான கல்வி, குடும்ப ஆதரவு, மருத்துவச் சேவைகள், சமூக ஒத்துழைப்பு ஆகியவை இணைந்தால், தங்களது முழுத் திறனையும் அவர்க ளால் வெளிப்படுத்த முடியும்.

ஐக்யு வகைப்பாடு

அறிவுத்திறன் குறைபாடு பொதுவாக ஐக்யு (Intelligence Quotient) எனப்படும் நுண்ணறிவு அளவுகோல் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது:

* லேசான அறிவுத்திறன் குறைபாடு (ஐக்யு 50–70): கல்விகற்றுக்கொள்ளும் திறன் உண்டு; சுயமாகவாழ முடியும்.

* மிதமான அறிவுத்திறன் குறைபாடு (ஐக்யு 35–50): அடிப்படை கல்வி, வாழ்க்கைத் திறன் பயிற்சி தேவை.

* கடுமையான அறிவுத்திறன் குறைபாடு (ஐக்யு 20–35): தொடர்ச்சியான உதவி, பயிற்சி அவசியம்.

* மிகக் கடுமையான அறிவுத்திறன் குறைபாடு (ஐக்யு 20க்குக் கீழ்):

முழுமையான பராமரிப்பு தேவைப் படும் நிலை. இந்த வகைப்பாடு அவர்களின் கற்றல் திறன், ஆதரவுக்கான தேவை யைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com

SCROLL FOR NEXT