நாள்தோறும் நான் நடந்துசெல்லும் பாதையில் ஒரு வணிக வளாகத்தின் படிக்கட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வரிசையாக உட்கார்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். அதுபேருந்து நிறுத்தத்துக்கு அருகே உள்ள படிக்கட்டு. பேருந்து வரும்வரை காத்திருக்கும் சில நிமிடங்களில் தலையை நிமிர்த்தாமல் தீவிரமாக திறன்பேசித் திரையை மேலே நகர்த்திக் கொண்டிருப்பார்கள்.
அக்கம் பக்கத்தைக் கவனிக்கும் பழக்கத்தைக் கைவிடுவதன் அறிகுறிபோல இக்காட்சி ஆகிவிட்டிருந்தது.திறன்பேசிக்கான பதைபதைப்பு பேருந்து ஏறிய பிறகு நின்றும், உட்கார்ந்தும் அவர்களிடம் இதே பழக்கம் நீள்கிறது.
கல்லூரியை அடைந்ததும் இது துண்டிக்கப்பட்டுவிடும். கல்வி வளாகத்தின் எல்லையை நெருங்குவதால் உண்டாகும் அடக்க முடியாத ஆவலைத்தான் அன்றாடம் பார்க்கிறேன்.
அள்ள முடிந்தளவு அவசரமாக அள்ளிக்கொள்வதற்கு, அந்தச் செவ்வகத் தொட்டியில் என்னதான் இருக்கிறது என்று யோசிக்கிறேன். வெறும் கேளிக்கையையும் தகவலையும் தருவதாக மட்டும், அதைச் சுருக்கிவிட முடியாது. காத்திருப்பதைத் தாங்க முடியாத மனதையும் அது உருவாக்குகிறது. இது பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும்.
மாலையில் பள்ளிக்கூட வாயில் கதவைவிட்டு வெளியே வந்ததும் திறன்பேசியைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கடைகளுக்கு விரைகிறார்கள். லாபம் தரும் வாடிக்கையாளர்களுக்கு, இதைக்கூடச் செய்யாமல் இருந்தால் எப்படி! எனக்குத் தெரிந்த பள்ளிக்கூடத்துக்கு அருகே உள்ள சிகை அலங்காரக் கடையின் இழுப்பறைகளில் திறன்பேசிகள் நிரப்பி வைக்கப்படுகின்றன.
மாணவிகளுக்குப் பெட்டிக்கடைகளும் தெரிந்த வீடுகளும் உதவுகின்றன. இப்படி உதவுபவர்கள் மனநிலையையும் விசாரித்தேன். உள்ளே அகப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு விடுதலையானவர்கள் உதவும் தோற்றத்தில் அது பகிர்ந்துகொள்ளப்பட்டது.
திரையில்லா நேரம்!
வீட்டில் இப்படித் திறன்பேசிக்குள் கிடையாய்க் கிடக்க முடியாமல் போகலாம். வீடு அல்லாத பிற இடங்களும் பயன்படுத்த வசதியானவை. ஆனால், முற்றிலுமாக திறன்பேசி இல்லாத சூழல் பள்ளி, கல்லூரியைத் தாண்டி எங்கும் இல்லை. உண்மையில், திறன்பேசித் திரையில்லா நேரம் (Non screen time) கல்விக்கூடத்தில்தான் சாத்தியமாகிறது.
திறன்பேசி விவகாரத்தில் ஒரு கட்டற்ற சுதந்திரத்தை மாணவப் பருவத்தினரில் பலர் அனுபவிக்கிறார்கள். இது குறித்துச் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது பேசினாலும், நிதர்சனத்தில் டிஜிட்டல் சூழல் உருவாகியிருப்பதன் ஆபத்தை அளவிடாமல் இருக்கிறோம் என்றே தோன்றுகிறது. பள்ளிக்குள் திரை நேர வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியம்.
ஒரு நாளின் பெருமளவு பகல் பொழுதில் பள்ளியில் இருந்தாலும், அதைத் தாண்டிய நேரத்தில் குழந்தைகள் உலகத்தில் நிலவும் பிரச்சினை இது. அந்நேரத்தில் உடனிருப்பது யார்? இந்த விஷயத்தில் ஆபத்தை உணர்வதிலும் விழிப்படைவதிலும் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம். நமக்கான
பொறுப்பு என்ன?
முதலில் சொன்ன காட்சியை ஒரு மாதமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் என்னைப் பின்தொடரும் கேள்வி இதுதான், நம் குழந்தைகளின் திரை நேரம் குறித்த விழிப்புணர்வோடு இருக்கி றோமா?
20-20-20 விதி தீர்வாகுமா?
கணினித் திரையைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், தலைவலிக்குத் தீர்வு காண கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்கக் கண் மருத்துவ நிபுணர் ஜெப்ரி அன்ஷெல் என்பவரால் 20-20-20 விதி பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கணினி அல்லது திறன்பேசி திரையில் இருந்து கவனத்தைத் திருப்ப வேண்டும். 20 விநாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போது 20 அடி தொலைவில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை அல்லது இடத்தை உற்றுநோக்க வேண்டும்.
இந்த எளிய பயிற்சி, தொடர்ந்து திரையைப் பார்ப்பதால் சுருங்கியிருக்கும் கண் தசைகளைத் தளர்த்தி, கண்கள் உலர்வதைத் தடுக்கிறது. கற்றல் அல்லது பணி நிமித்தமாகத் தொடர்ந்து திரையைப் பார்க்க நேரும் பணியாளர்களுக்கு இந்த விதி ஓரளவு உதவுகிறது.
நம்மிடம் தொடங்கியிருக்கும் பிரச்சினையோ கேளிக்கைத் திரை நேரம் பற்றியது. எனவே கணினி, தொலைக்காட்சி திரையைவிடத் திறன்பேசி திரைக்குதான் உடனடி விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
என்ன செய்யலாம்?
குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர் அதைச் செய்துகாட்ட வேண்டும்.
* 20-20-20 விதியை அலாரம் வைத்தாவது விளையாட்டு போலச் செய்துகாட்டலாம்.
* உணவு உண்ணும்போது திறன்பேசி, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளின் பசியுணர்வையும் குடும்ப உரையாடலையும் மேம்படுத்தும்.
* படுக்கையறையில் கணினி அல்லது தொலைக்காட்சி போன்ற திரைகள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் திறன்பேசி பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
* வீட்டில் அனைவரின் கையிலும் திறன்பேசி இருப்பதால் ஆளுக்கொரு திசையில் உட்காருவதைத் தவிர்த்து, அந்நேரத்தை விளையாட்டிலோ வாசிப்பிலோ உரையாடுவதற்கோ மாற்றி, பயனுள்ளதாக்கலாம்.
பள்ளிகளில் என்னதான் இது பற்றிச் சொன்னாலும், இது பெற்றோர் கையில் இருக்கும் தீர்வு. அறிவுரை சொல்லாமல் செய்து காட்டுவோம்.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர்; kannatnsf@gmail.com