வெற்றிக் கொடி

அடையாள அட்டை: உரிமைக்கான பாலம் | நட்சத்திரக் குழந்தைகள் 29

ரேவதி

“என் குழந்தைக்கு மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை வேண்டாம். பள்ளியில் எல்லோரும் அவனைக் கேலி செய்யக்கூடும்” - அரசு மருத்துவ மனையின் வரிசையில் நின்ற ஒரு தாய் கூறிய வார்த்தைகள் இவை. 10 வயதான அவரது மகனுக்குப் பிறவி செவித்திறன் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.

பள்ளியில் ஆசிரியர் கூறும் பாடங்களைப் புரிந்துகொள்ளவும், மற்ற குழந்தைகளுடன் உரையாடவும் அவன் சிரமப்படுகிறான். ஆனாலும், மாற்றுத் திறனாளி எனும் அடை யாளம் தன் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதித்துவிடுமோ என்கிற அச்சத்தில், மாற்றுத்திறனாளர் சான்றிதழுக்கும், தனித்துவ மாற்றுத்திறனாளர் அடையாள அட்டைக்கும் (யுடிஐடி-UDID) விண்ணப்பிக்க அந்தத் தாய் தயங்கினார்.

வேறுபாட்டில் அவமானமில்லை!

ஒரு குழந்தைக்குக் கண்பார்வை தெளிவாக இல்லையெனில் கண் ணாடி அணிவிக்கிறோம். காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறோம். ஆனால், செவித்திறன் குறைபாடு, ஆட்டிசம், கற்றல் குறைபாடு போன்ற நிலைகள் கண்டறியப்படும்போது, சில குடும்பங்கள் அதை வெளியில் கூறத் தயங்குகின்றன.

இதற்குக் காரணம் மாற்றுத்திறன் அல்ல; மாற்றுத்திறனைப் பற்றிய சமூகத்தின் தவறான பார்வையே. “மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?”, “திருமணம் பாதிக்கப்படுமா?”, “பள்ளியில் ஒதுக்கிவிடுவார்களா?”, “வேலை கிடைக்காதா?” என்பது போன்ற கவலைகள் குடும்பங்களைத் தடுக்கின்றன. அதன் விளைவாக, குழந்தைக்குத் தேவையான தொடக்கக் காலப் பயிற்சி, கல்வி வசதி, உதவித் தொகை, உதவிக் கருவிகள் தாமதமாகின்றன.

யுடிஐடி அட்டை

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளி களுக்கான ஒரே மாதிரியான அடையாளத் தையும் மாற்றுத்திறனாளர் சான்றிதழையும் வழங்குவதற்காக, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை தனித்துவ மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை (யுடிஐடி) வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

இந்த அட்டையில் மாற்றுத் திறனின் வகை, மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட அளவு குறிப்பிடப்படும். இது ஒருவரின் அறிவு, ஆளுமை அல்லது வாழ்க்கையின் மதிப்பை அளவிடும் அட்டை அல்ல. அரசு சேவைகளில் அவருக்கு எந்த வகையான ஆதரவு தேவை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் மட்டுமே.

உண்மையான நோக்கம்?

பார்வைக் குறைபாடுடைய பள்ளி மாணவி ஒருவர் கரும்பலகையில் எழுதியவற்றைப் பார்க்க முடியாததால், ஆசிரியர் கூறுவதை மற்ற மாணவர்களிடம் இருந்து நகலெடுத்து எழுதினாள். தொடக்கத்தில், கவனக் குறைவு என கருதப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டு, யுடிஐடி அட்டை பெறப் பட்டது.

இதனால் அவருக்கு மாற்றுத் திறனுக்குத் தேவையான பெரிய எழுத்துப் புத்தகம் வழங்கப்பட்டது. வகுப்பின் முனபுறத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டது. தேர்வில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. தேவையான இடங்களில் வாசிப்பு உதவியும் கிடைத்தது.

அட்டையைப் பெற்ற பிறகு அவர் மாற்றுத்திறனாளியாக மாறவில்லை. ஏற்கெனவே இருந்த அவரது தேவைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. அதன் மூலம் அவரால் மற்ற மாணவர்களுடன் சமமாகப் படிக்க முடிந்தது. இதுவே யுடிஐடி அட்டையின் உண்மையான நோக்கம்.

அட்டை போதுமா?

யுடிஐடி அட்டை வைத்திருப்பதால் அனைத்து அரசு உதவிகளும் தானாகக் கிடைத்து விடும் எனக் கருதக் கூடாது. ஒவ்வொரு நலத்திட்டத்துக்கும் வயது, வருமானம், மாற்றுத் திறனின் வகை, சதவீதம், கல்வி நிலை போன்ற தனித்தனி தகுதிகள் உள்ளன.

மாற்றுத்திறனின் அளவு 40%க்கும் குறைவாக இருந்தாலும், உரிய மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளர் சான்றிதழும் யுடிஐடி அட்டையும் வழங்கப்படலாம். எனினும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில சிறப்புச் சலுகைகளுக்கு 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ‘அளவுகோல் மாற்றுத்திறன்’ தேவைப் படலாம்.

எதற்குப் பாலமாகிறது?

தகுதிக்கு ஏற்பக் கல்வி உதவித் தொகை, உயர்கல்வி, அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு, தேர்வுகளில் கூடுதல் நேரம், வாசிப்பாளர் அல்லது எழுத்தர் வசதி, உதவிக் கருவிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மறுவாழ்வு சேவைகள், பயணச் சலுகைகள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க யுடிஐடி அட்டையும் மாற்றுத் திறனாளர் சான்றிதழும் முக்கிய ஆதாரங்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தனிநபர் அல்லது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இந்திய அரசின் அதிகாரபூர்வ யுடிஐடி இணைய தளத்தில் (swavlam bancard.gov.in) பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.

அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனை அல்லது மருத்துவ அதிகார அமைப்பை விண்ணப்பத்தில் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மாற்றுத் திறனை மதிப்பீடு செய்வார்கள்.

மருத்துவக் குழு மாற்றுத்திறனின் வகையையும் அளவை யும் உறுதிசெய்த பிறகு சான்றிதழும் யுடிஐடி அட்டையும் அளிக்கப்படும்.

இணையத்தைப் பயன்படுத்த இயலாதவர்கள் மாவட்ட மாற்றுத் திறனாளர் நல அலுவலகம், அரசு மருத்துவ மனையின் யுடிஐடி பிரிவு, மாவட்ட நிர்வாகம் நடத்தும் சிறப்பு முகாம்கள் ஆகியவற்றின் உதவியை நாடலாம்.

தேசிய மாற்றுத்திறனாளர் உதவி எண் 14456 மூலமும் வழிகாட்டுதலைப் பெறலாம். பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு, உதவிக் கருவிகள், சமூகப் பாதுகாப்பு, சுயமரியாதை நிறைந்த வாழ்க்கையை இணைக்கும் உரிமைப் பாலம் யுடிஐடி அட்டை. அந்தப் பாலத்தை அச்சமின்றி கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் துணையாக நிற்போம்.

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் ல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com

SCROLL FOR NEXT