வெற்றிக் கொடி

ஆய்வுபூர்வ சிந்தனையை வளர்ப்பது எப்படி?

தர்ஷினி

எந்தவொரு கருத்தையும் மேலோட்டமாக அல்லாமல், ஆழ்ந்து சிந்தித்து, தெளிவு பெற வேண்டும். அதற்குக் கூர்மையாகவும் கவனமாகவும் கேள்வியை எழுப்பி, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அனுமானங்கள், சார்புகளைக் கடந்து புரிதலை ஆழப்படுத்துவதற்கு ஆதாரங்களைத் தீர்க்கமாக மதிப்பிட்டு, பகுப்பாய்வு செய்து, கண்டறிதல்களை ஒருங் கிணைத்து, தர்க்க ரீதியான அறிவை அதில் பொருத்தி, ஆரோக்கியமான விவாதமாக மாற்ற வேண்டும்.

இதில் தெளிவான முடிவுகளை வெளிப் படுத்த வேண்டும். எதையும் ஆய்ந்தறிந்து தெரிந்துகொள்வதே ஆய்வுபூர்வமான சிந்தனை (Critical Thinking). இந்த முக்கியத் திறன்தான் ஆய்வுபூர்வமான மனநிலையுடன் சவால்களை அணுக மாணவர்களுக்குக் கைக்கொடுக்கும். இது நம்பகமற்ற தகவல்களைக் கண்டறிய உதவும். பகுப்பாய்வின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கும்.

நுட்பமான திறன்

கல்வி கற்பதற்கு மட்டுமன்றி, மாண வர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் ஆய்வு பூர்வமான சிந்தனை மிகவும் அவசியம். மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவ தற்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, கலந்துரையாடல்களில் அர்த்தமுடன் பேசு வதற்கு ஆய்வுபூர்வமான சிந்தனை மிக முக்கியம்.

ஆராய்ச்சியின் ஒவ்வொரு நிலைக்கும் இது தேவை. குறிப்பாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும்போது கடந்த கால ஆராய்ச்சிகளைப் பகுப்பாய்வு செய்யவும், முடிவுகளை எடுத்துக்கூறவும் இந்தத் திறன் மிகவும் தேவை. கடந்த கால ஆய்வுகளின் உண்மைத்தன்மையைக் கண்டறியவும் இந்தத் திறன் கட்டாயமாகிறது.

தன்னம்பிக்கை அதிகரிக்க

ஆய்வுபூர்வமான சிந்தனை கொண்ட வர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பார் கள். மீண்டும், மீண்டும் சோதித்த பின்னரே ஒரு முடிவை அவர்கள் எட்டுவார்கள். வகுப்பறைகளில் நடைபெறும் உரை யாடல்களில் ஆய்வுபூர்வ சிந்தனை கொண்ட மாணவர்கள் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குவார்கள். விவாதங்களில் அடிப்படைக் கேள்விகளைக் கேட்பார்கள்.

நல்ல தீர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் வழங்குவார்கள், இதனால் அவர்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். சிக்கலான உலகில் அவர்கள் தன்னம்பிக் கையுடன் நடைபோட்டு, சிறந்த எதிர் காலத்துக்கு இது வழிவகுக்கும். எனவே படிப்பு, எதிர்காலம் இரண்டுக்குமே மாணவர்களுக்கு ஆய்வுபூர்வமான சிந்தனை அவசியம்.

சரியா, தவறா?

சமூக வலைத்தளங்கள், இணையத் தளங்கள் மூலம் பல்வேறு தகவல்களைப் பெறும் இன்றைய காலத்தில், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது மிகவும் அவசியம். அதற்கு இந்த ஆய்வுபூர்வ சிந்தனை அவசியம். மேலும் போலிச் செய்திகளைக் கண்டறியவும் உதவுகிறது.

ஆய்வுபூர்வமான சிந்தனை, தொடர்பு கொள்ளும் திறனுடன் இணைந்தது. ஒரு நல்ல பணியாளருக்கு இந்த இரண்டு திறன்களும் மிகவும் அவசியம். மற்றவர்களுடன் நல்ல முறையில் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் எண்ணற்ற தகவல்களை மூளையில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றைத் திறனுடன் பரிசோதித்து, எப்போது கூறவேண்டும் என்கிற புரிதல் வேண்டும். மற்றவர்களின் தொடர்புகொள்ளும் திறனைத் தெரிந்து

கொள்வதும், தகவல்களின் முக்கியத் துவத்தை அறிந்துகொள்வதும் அவசியம். அப்போதுதான் தொடர்புகொள்ளும் திறன் சிறக்கும். அதற்கு ஆய்வுபூர்வமான சிந்தனை உதவும்.

எதிரிகளை எதிர்கொள்வோம்

ஆய்வுபூர்வமான சிந்தனையைப் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். இன்றளவும் மனப்பாடம் செய்து படிக்கும் முறை புழக்கத்தில் இருப்பது மாணவர்களிடம் ஆய்வுபூர்வமான சிந்தனை வளரவிடாமல் தடுக்கிறது.

மேலும் தவறு செய்துவிடுவோமோ எனும் அச்சத்தில் மாணவர்கள் பதிலளிக்கத் தவறுவதும் ஆய்வுபூர்வமான சிந்தனையை வளரவிடாமல் செய்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பமும் இரண்டு புறமும் கூரான கத்திபோல் மாணவர்களின் ஆய்வுபூர்வமான சிந்தனையை முடக்குகிறது.

அறிவைப் பெருக்கத் தொழில் நுட்பம் வாய்ப்பளிக்கிறது. இதனால் உரிய தகவலுக்குக் கருவிகளைச் சார்ந்திருப் பதால், மாணவர்களின் சிந்திக்கும் திறன் கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலப்படுத்துவது எப்படி?

வகுப்பறையிலும் வீட்டிலும் புரியாதது பற்றித் தைரியமாகக் கேள்விகள் கேட்க மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய சந்தேகங்களைத் தெளிவாக விளக்க வேண்டும். இதனால் கலந்துரையாடல், விவாதம் நடைபெறும், ஆர்வத்தைத் தூண்டும், தவறு செய்வது குறித்து மாணவர்கள் தேவையற்று வருந்துவது தடுக்கப்படும்.

சுயமாக ஆராய்ச்சி செய்ய மாணவர் களை ஊக்குவிக்க வேண்டும். ஆராய்ச்சிகளில் மாணவர்கள் முடிவுடன் வரும் போது, அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்கள் என்பது குறித்துக் கேள்விகள் எழுப்ப வேண்டும். ஆதாரங்களின் அடிப்படையில் விவாதங்களை மாண வர்கள் முன்னெடுக்க ஆசிரியர்கள் பழக்க வேண்டும்.

அனுபவபூர்வமான கற்றல் என்பது ஒருவரது அறிவை வளர்க்க உதவும். எனவே, ஏஐ ஆதிக்கம் செலுத்தும் காலத்திலும் ஆய்வுபூர்வமான சிந்தனைத் திறனை வளர்த்தெடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.

- தொடர்புக்கு: priyadharshini.r@hindutamil.co.in

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT