வெற்றிக் கொடி

குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த விரும்புகிறீர்கள்?

மகா.இராஜராஜசோழன்

தாய், தந்தை இருவருமே பெரும் பாலான இல்லங்களில் இன்றைக்குப் பணிக்குச் செல்லும் சூழல் உருவாகிவிட்டது. இதனிடையில் குழந்தை வளர்ப்பு என்பது இருமடங்கான சுமையாக மனதளவிலும் உடல் அளவிலும் மாறி இருக்கிறது.

தாத்தா, பாட்டி, வேறு உறவினர்கள் உடன் இருக்கக்கூடிய குடும்பங்களால் இந்தச் சுமையை ஓரளவுக்குச் சமன் செய்ய முடிகிறது. குழந்தை வளர்ப்புக்கு அடுத்த நிலையில் இருப்பது கற்றலும் கற்பித்தலும்.

தவழ்ந்து, எழுந்து, நடந்து, தத்தித் தாவும் பருவத்தில் சிலவற்றைச் சுயம் சார்ந்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அடுத்தாக, பள்ளிக் குச் செல்லும்போது கற்கும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கிறது.

அன்பும் அறிவும்

ஆசிரியர், ஆயாம்மா, நண்பர்கள், நூல்கள், பள்ளிக்கு வருகைதரும் சிறப்பு விருந்தினர்கள் எனப் பரந்துபட்ட ஒரு பார்வையும் அதிலிருந்து பல விதமான அறிவையும் பெறுகிறார்கள்.

இந்தப் பருவத்தில் குழந்தை எனும் கட்டத்தில் இருந்து மாணவர் எனும் நிலையில் அடியெடுத்து வைக்கிறார்கள். பலரைச் சந்தித்தாலும் பெரும்பங்கு அறிவையும் நடத்தை களையும் ஆசிரியரிடம் இருந்தே மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

ஆகவே தான் பிற்காலத்திலும் பல தருணங்களில் ஆசிரியர்களை நினைவு கூர்கின்றனர். எல்லா ஆசிரியர்களையும் எதிர்காலத் தில் குழந்தைகள் அப்படிக் கொண்டாடி விடுவதில்லை.

ஆசிரியராகப் பணிபுரிப வர்கள்கூட எந்த ஆசிரியரைக் கொண்டாடு கின்றனர்? தம்மிடம் அன்பு பாராட்டிய ஆசிரியரைத்தானே! அன்பு, திறமை, எளிமை, ஒன்றை எளிதில் புரியவைக்கும் தன்மை எனப் பல தகுதிகள் நிரம்பிய ஆசிரியர்களே எக்காலத்திலும் நினைவில் வைத்துப் போற்றப்படுகிறார்கள்.

இத்தனை பண்புகள் இருப்பினும் அன்புதான் அங்கு மேலோங்கி நிற்கிறது. ஏன் அந்த ஆசிரியரை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கேட்டால் அடுத்த நொடியே "நல்லவங்க; அன்பா இருப்பாங்க" என்கிற பதிலே வந்து விழும்.

தாயுமானவர்கள்

ஆசிரியருக்குள் பெற்றோரைத்தான் குழந்தைகள் தேடுகிறார்கள். பெற்றோரின் பேரன்பைக் காண விழைகிறார்கள். அதுவே பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தையை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லும் பெற்றோர் என்னவாக உருமாறு கிறார்கள்? பெற்றோரில் பலர் கற்பிப்பதில், இலகுவாக இருப்பதில்லை.

குழந்தைகளை வீட்டுப்பாடம் எழுத அமர்த்தும்போதே, பெற்றோருக்குள் முகம் இறுகிய ஆசிரியர் வந்து அமர்ந்துவிடுகிறார். கடுகடு முகம், கடின உடல் மொழியைப் பெற்றோர்கள் குழந்தைகளிடம் காட்டுகிறார்கள்.

அழுகை, அச்சத்தோடு அன்றைய வீட்டுப்பாடம் நிறைவை எட்டுகிறது. இப்படியான பெற்றோர்களைக் குழந்தைகள் சந்திக்கையில் அன்பைக் கொட்டிப் பாராட்டுகிற ஆசிரியரைத்தான் பெற்றோராகவும் கொண்டாட முயல் வார்கள்.

எப்போதும் குழந்தைகள் அன்பைத் தான் விரும்புகிறார்கள். நீங்கள் பெற்றோரோ, ஆசிரியரோ யாராக இருந்தாலும் அன்புள்ளத்தோடு அரவணைக்கப்படு வதையே குழந்தைகள் விரும்புகிறார்கள்.

ஆசிரியரும் பெற்றோரும் எந்தச் சூழலிலும் குழந்தைகளுக்காக உள்ளத்தில் பேரன்பைத் தேக்கி வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் குழந்தைகளால் கொண்டாடப்படு வீர்கள்.

- கட்டுரையாளர்: சிறார் தமிழ் பயிற்றுநர், சீர்காழி; cholan1981@gmail.com

SCROLL FOR NEXT