வெற்றிக் கொடி

அமைச்சராகும் மாணவச் செல்வங்கள்!

Guest Author

நாளைய இந்தியாவாக இன்றைய மாணவர்கள் நிமிர்ந்தெழ, அவர்களில் பலர் தலைவர்களாக உயர வேண்டும். இந்த நோக்கத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் கடந்த 2024இல் ‘மகிழ் முற்றம்’ திட்டம் தொடங்கப்பட்டது.

மாணவர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், சமூக அக்கறை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு, முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்க மாதிரி சட்டப்பேரவை, மாதிரி நாடாளுமன்றம் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் திட்டம் இது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிகழ்வுகளில் மாணவர்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்பை வழங்கி, அவர்களைத் திறமை யான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்கும் அடித்தளமாக இந்தத் திட்டம் திகழ்கிறது.

மாணவர் அமைச்சர்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்கள் வகுப்பு, பிரிவு வாரியாகப் பிரிக்கப்படு கின்றனர். பிறகு, எமிஸ் (EMIS) செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘மகிழ் முற்றம்’ பகுதியிலுள்ள set House option மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர்.

இதன்படி, ஒவ்வொரு குழுவுக்கான வகுப்புத் தலைவர்கள் நியமிக்கப் படுகின்றனர். மேலும், மாதந்தோறும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு வகுப்பறையிலும் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவப் பண்பை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் மாணவர் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்தக் குழுவுக்கான மாணவ அமைச்சர் நியமிக்கப்படுவார்.

கல்வி அமைச்சகம்; மாணவர் நலன், பாதுகாப்பு அமைச்சகம்; தகவல் தொடர்பு அமைச்சகம்; சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம்; சுகாதாரம், தூய்மை அமைச்சகம் ஆகிய ஐந்து துறைகளுக்கான அமைச்சர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

குழுத் தலைவர், குழுப் பொறுப்பாசிரியர், மாணவ அமைச்சர் ஆகியோர் இணைந்து தங்களது அமைச்சகத்தின்கீழ் பள்ளி அளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளை முடிவுசெய்கின்றனர்.

சிறந்த குழு

இந்த விதிமுறைகளைப் பின்பற்றி அண்மையில் அரசுப் பள்ளிகள்தோறும், ‘மகிழ் முற்றம்' பதவியேற்பு விழா நடைபெற்றது. ‘மகிழ் முற்றம்’ பள்ளி அளவிலான மதிப்பெண் பலகை, ஒவ்வொரு குழுவுக்குமான வண்ணக் கொடிகள் - குறிஞ்சி (சிவப்பு), முல்லை (மஞ்சள்), மருதம் (பச்சை), நெய்தல் (நீலம்), பாலை (வெள்ளை) அந்தக் குழுவின் பெயருடன் வழங்கப்பட்டன. பின்பு ஹவுஸ் பேட்ச் (House badge), தொப்பி, ரிப்பன்கள் முதலானவை வழங்கப்பட்டன.

இதன் சிறப்பு யாதெனில், கல்விசாராச் செயல்பாடு என யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக ‘மகிழ் முற்றம்’ செயல்பாடுகளுக்கு வகுப்பறை அளவிலும் பள்ளி அளவிலும் மாணவர் குழுக்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

பள்ளி அளவில் அனைத்து வகுப்பறை மதிப்பெண் பட்டியலையும் ஒன்றாகத் தொகுத்து வழங்க வேண்டும். இதன் அடிப்படையில், எமிஸ்-இல் மாதத்தின் வெற்றிக் குழு, ஆண்டின் வெற்றிக் குழுவைப் பள்ளி அறிவிக்க வேண்டும்.

- ந.ரேவதி, ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வீரனூர், நங்கவள்ளி ஒன்றியம், சேலம் மாவட்டம் தொடர்புக்கு: mnrajrev85@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT