விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் (Yuri Gagarin). அவர் தனது 27வது வயதிலேயே கடின மான பயிற்சிகளை மேற்கொண்டு, விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்!
அரசு விண்வெளித் திட்டம் மூலமாக, ‘வாஸ்தோக் 1’ என்கிற விண்கலத்தை, ‘வாஸ்தோக் - கே’ என்கிற ஏவூர்தி மூலம் 1961, ஏப்ரல் 12இல் விண்வெளிக்கு ஏவியது அன்றைய சோவியத் ஒன்றியம். அதில் யூரி ககாரின் மட்டுமே பயணித்தார்.
ஏவப்பட்ட நொடியில் இருந்து சரியாக 11 நிமிடங்கள் 16 விநாடிகளில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் (Orbital Insertion) வெற்றிகரமாக வாஸ்தோக் 1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
நிஜ கதாநாயகன்
இதன்பின்னர் ஒரு நொடிக்கு 7.6 கிலோ மீட்டர் (கி.மீ.) வேகத்தில் 1 மணி நேரம் 48 நிமிடங்களில் பூமியை ஒருமுறை சுற்றி வந்தபின் வெற்றிகரமாகத் தரையிறங் கியது.
வாஸ்தோக் 1 பூமியை நீள்வட்டப் பாதையில் (Elliptical Orbit) சுற்றியபடி அதன் மேற்பரப்புக்கு மிக அருகில் வந்தபோது 181 கி.மீ., உயரத்திலும் பூமியை விட்டு மிகத் தொலைவில் சென்ற போது 327 கி.மீ., உயரத்திலும் சுற்றி வந்து தரையிறங்கியது.
சோவியத் ஒன்றியத் தின் இந்தச் சாதனையே, மனிதன் விண் வெளிக்குச் சென்று திரும்ப முடியும் என்கிற செய்தியை உலகுக்கு அறிவித்தது. யூரி ககாரின் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1934 மார்ச் 9இல் பிறந்தார்.
பள்ளிக் கல்வியின் இறுதியில் ஓர் இரும்பு எஃகு தொழிற்சாலையில் வார்ப்படத் தொழிலாளியாகப் பயிற்சிபெற்றார். பின்னர், விமானப் படை பயிற்சி பள்ளியில் 1955இல் சேர்ந்து போர் விமானியாக உயர்ந்தார்.
1960இல் அரசு விண்வெளித் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 போர் விமானிகளில் விண்வெளிக்குச் செல்லும் ஒருவராகப் பயிற்சிக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் விண்வெளி சென்று திரும்பியதும், மிக உயரிய விருதான ‘ஹீரோ ஆஃப் தி சோவியத் ஒன்றியம்' பதக்கம் அவருக்கு அளிக்கப் பட்டது.
மேலும் அவர் பிறந்த கேயாட்ஸ்க் (Gzhatsk) பிராந்திய நகரத்துக்கு ககாரின் என்கிற அவரது பெயரைச் சூட்டிப் பெருமைப்படுத்தப்பட்டது. இவ்வளவு பெருமைக்குரிய யூரி ககாரி னுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, தமிழ்நாட்டின் தலைநகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் புகழ்பெற்ற பிர்லா கோளரங்கம் இடம்பெற்றுள்ள பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மைய வளாகத்தில் ரஷ்ய நாட்டின் நிதி உதவியுடன் இந்தச் சிலை நிறுவப் பட்டிருப்பது, ரஷ்ய - இந்திய நட்புறவுக்கு மற்றோர் எடுத்துக்காட்டு!
- தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in