வெற்றிக் கொடி

எத்தனை மாணவர்கள்! அத்தனை சம்பவங்கள்! - என் மன வானில்

Guest Author

காலை பள்ளி வரும் வழியில் ஒரே பரபரப்பு. ஒரு வீட்டின் மின் இணைப்புக் கம்பி மற்றொரு வீட்டின் ஸ்டே கம்பி வழியாக உரசியது. அதனால் வீட்டின் வெளியே இருந்த கிரில் கம்பி வலையில் மின் கசிவு ஏற்பட்டுவிட்டது. அந்தக் கம்பியைப் பிடித்த மாணவியை மின்சாரம் தாக்க, அவளைக் காப்பாற்றச் சென்ற மாணவியையும் மின்சாரம் தாக்கியது.

அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் சதீஷ்குமார் விரைந்து செயல்பட்டு, தன்னிடமிருந்த கிரிக்கெட் மட்டையால் மாணவியின் கைகளை கிரில் கம்பியிலிருந்து தட்டி விடுவித்து இரு மாணவிகளின் உயிரையும் காப்பாற்றினான்.

நிகழ்வு நடந்த சில நிமிடங்களில் நான் அங்கிருந்தேன். “எப்படி தைரியமாகக் காப்பாற்றினாய்?” என சதீஷிடம் கேட்டபோது, கடந்த வாரம் நடைபெற்ற ஜூனியர் ரெட் கிராஸ் வகுப்பில் காய்ந்த மரம் மின்சாரத்தைக் கடத்தாது என நான் சொல்லிக் கொடுத்ததை நினைவில் வைத்திருந்ததாகச் சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் வெறும்பேச்சு வடிவில் இருப்பதை விடச் செயல் வடிவில் அன்றாட வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கும்போது, கற்பித்தலும் கற்றலும் செயல் வடித் தைப் பெறும் என்பதை உறுதிசெய்த நாள் அது.

தூண்டும் கேள்வி

மற்றொரு நாள் விண்வெளி பற்றிய பாட வேளையில் விமானம் கண்டுபிடிப்பு, ராக்கெட் கண்டுபிடிப்பு, விண்வெளி பயணம், முதன் முதலில் விண்வெளி சென்று வந்த மனிதன், முதலில் நிலவில் காலடி பதித்த ஆம்ஸ்ட்ராங் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்போது நிலவில் கடைசியாகக் காலடி வைத்த மனிதர்யார் என்கிற கேள்வியை மாணவன் சுரேஷ் எழுப்பினான். திறன்பேசி இல்லாத, இணையம்கூட பெருநகரங் களில் மட்டுமே இருந்த காலம் அது. தெரியவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொண்டு, தேடிப் படித்துச் சொல்கிறேன் என்றேன்.

ஒரு வாரம் நூலகத்தில் நூல்களைப் புரட்டி, யூஜின் செர்னன் என்பவர் நிலவில் கடைசியாகக் கால் பதித்த மனிதர் என்கிற பதிலை கூறினேன். இப்படித் தான் மாணவர்களின் சில கேள்விகள், நம்மைத் தேடத் தூண்டும்.

ஒருமுறை பள்ளி மதிய இடை வேளையில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக முதல் வகுப்பு மாணவி புனிதாவை அழைத்தேன். ஐந்து வகுப்புகளிலும் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் எனப் பார்த்து வரச் சொன்னேன். மதிய இடைவேளை என்பதால் மாணவர்கள் வெளியில் விளையாடிக்கொண்டி ருந்தனர்.

அந்த மாணவியோ வித்தியாசமாகச் சிந்தித்து, ஒவ்வொரு வகுப்பாகச் சென்று வகுப்பில் இருந்த பைகளின் எண்ணிக் கையை எண்ணி மாணவர் களின் எண்ணிக்கை சரியாகக் கூறினாள். இது போன்று வித்தியாசமாகச் சிந்திக்கும் மாண வர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதமாகக் கல்வி அமைய வேண்டும். சிந்திக்கும் மாணவர்களே சரியான பாதையில் செல்வார்கள்.

அமர்ந்துவிட்ட மாணவர்கள்

திருப்பூர் தொழிற்சாலை விபத்து ஒன்றில் எங்கள் பள்ளி மாணவர் ஒருவரின் தந்தை மரணமடைந்த துக்கச் செய்தியைச் சொல்லி பள்ளியில் இருந்து உறவினர் ஒருவர் அவனை அழைத்துச் சென்றனர். விபத்து என்பதால் உடற்கூராய்வு முடிந்து அவருடைய சடலம் அடுத்த நாள்தான் சொந்த ஊருக்கு எடுத்து வரப்படும் நிலைமை.

மறுநாள் காலை 10 மணி அளவில் மாணவன் பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டான். தலைமை ஆசிரியரிடம் அவனை அழைத்துச் சென்றேன். அவனோ வீட்டில் அனைவரும் அழுதுகொண்டே இருப்பதால் துக்கம் தாளவில்லை. தந்தையின் சடலம் வந்த பிறகு வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லிப் பள்ளியிலேயே அமர்ந்து விட்டான்.

பள்ளியை ஆற்றுப்படுத்தும் இடமாகவும் மாணவர்கள் நினைக்கின்றனர் என்பதை அன்று உணர்ந்து நெகிழ்ந்தேன். வகுப்பறையில் அவ்வப்போது நகைச்சுவை நிகழ்வுகளும் அரங்கேறும். ஒரு முறை தேர்வு நேரத்தில் முதலாம் வகுப்பு மாணவன் நித்திஷ் விரைந்து தேர்வை முடித்து விடைத்தாளைச் சமர்ப்பித்தான்.

பிறகு தனது வாட்ச் காணாமல் போய்விட்டது, அதனை உடனடியாக தேடித் தரும்படி கேட் டான். அது பொம்மை வாட்ச்தான் என்பதால் “தேடிப்பார், கிடைக்கும்” எனச் சொல்லிவிட்டுத் தேர்வுப் பணியில் மூழ்கி இருந்தேன்.

அவனோ கரும்பலகையில் தனது வாட்ச் படத்தை வரைந்து “என் வாட்ச்சை காணவில்லை சார்! கண்டுபிடித்துத் தாருங்கள்” என எழுதி கரும்பலகைக்கு அருகிலேயே உட்கார்ந்துவிட்டான். இப்படி ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரியப்பபுரம், தென்காசி; karthickteacher@gmail.com

SCROLL FOR NEXT